Wednesday, January 10, 2018

காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள். அவள் உடலுக்கு வந்த நோயைக்(பசலை) கண்ட தாய், அவளுக்காகக் கடவுளை வேண்டி, ஒரு பூசாரியை அழைத்து ஆட்டை வெட்டிப் பலி கொடுக்கச் செய்தாள். இதைப் பழந்தமிழ் நூல்களில் "வெறியாட்டு' என்பர்.

இதே தலைப்பில் வடலூர் வள்ளலார் சுவாமிகள் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில், "இந்தப் பெண் தலைவனிடம் கொண்ட மோகத்தால் வருந்த, மற்றப் பெண்களும் ஊராரும் பழித்துத் தூற்ற, இந்த ஆடு, என்ன பாவம் செய்ததோ? ஏதும் செய்யாத இந்த ஆட்டை வெட்டலாமா? இதனைக் கண்டு மன்மதன் அஞ்சுவானா? (அஞ்சுமா?) இவள் துன்பம் ஆறுமா? இச்செய்தி இவளைக் காதலித்த தலைவனுக்கு எட்டுமா?' என்னும் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதி இரண்டடிகளில் "பத்தொன்பது மா' (19 மா 5+6+8=19) என்ற எழுத்துகள் வரிசையாக அமைந்துள்ளன. இப்பாட்டில் உள்ள பத்தொன்பது "மா' என்னும் எழுத்துகளை அஞ்சுமா, ஆறுமா, எட்டுமா என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வள்ளலார் "வெறிவிலக்கு' என்ற துறையில் பாடியுள்ளார்.
இம்மையல் தையல்நைய ஏசூர மாதரும் ஆ
இம்"மை'உமை இம்மைஐயோ என்செய்த(து)-அம்மைதன்
மாமா மா மாமா, மா மாமா மா மாமா, மா
மாமா மா மாமாமா மா.
வள்ளலாரின் சொல்லாட்சித் திறத்தை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா - தனிப் பாசுரத் தொகையில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.