Wednesday, April 29, 2015

குறுந்தொகை-213




தோழி கூற்று
(தலைவனைப் பிரிந்த காலத்து, “நம்பாலுள்ள விருப்பத்தினால் தலைவர் தாம் சென்ற வினையை நிறைவேற்றாமல் வந்து விடுவாரோ?”என்று ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் விலங்கினமும் தமது கடமையை ஆற்றும் காட்சி கண்டு தாமும் தம் கடனாற்றத் துணிவராதலின் மீளார்”என்று தோழி கூறியது.)

பாலை திணை- பாடலாசிரியர் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.

இனி பாடல்-
 
நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
   
கவைத்தலை முதுகலை காலி னொற்றிப்
   
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல்
   
ஒழியி னுண்டு வழுவி னெஞ்சிற்

றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி
   
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
   
இன்றுயின் முனிநர் சென்ற வாறே.


                              -கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.



 தலைவர் நின்பால் விருப்பம் மிக உடையவர்; நம்மோடு செய்யும் இனிய துயிலை வெறுத்துப் பிரிந்துசென்ற அவர்,  போன வழியில், விரைவாக, கிளைத்த கொம்பைஉடைய தலையைப் பெற்ற முதிய ஆண்மான்,  காலால் உதைத்து, பசி நோயைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வளைத்த,பருத்த பெரிய மரப் பட்டை,  தனது குட்டி உண்டபின் எஞ்சினால் தான் அதைஉண்டு,  குற்றம் இல்லாத நெஞ்சினோடு, துள்ளி நடத்தலாகிய இயல்பினைஉடைய,  தனது குட்டிக்கு நிழலாகி நின்று வெயிலை நீக்கும், என்று கூறுவர்.



    (கருத்து) தலைவர் தம் கடமையை உணர்ந்து, மீளாது சென்றுபொருள் தேடி வருவர்.

 

    தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுதலில் நாட்டம் இன்றித் தன் குட்டியின் பசியை முதலில் நீக்கியும், தன்மேல் படும் வெயில் வெம்மையைக் கருதாமல் குட்டிக்கு நிழலாகியும் செயபடும்.அதுபோல

    “தலைவர் நசை நன்குடையரேயாயினும், தன்னலத்தையும் பேணாது ,  இல்லறம் புரியும் கடமையை நினைந்து அதற்கு உரிய பொருள் தேடச்சென்று அதூடிந்ததும் மீள்வர்” என்பது தோழியின் கருத்து.

Monday, April 27, 2015

குறுந்தொகை-212



தோழி கூற்று
(தலைவனது குறையைத் தலைவி நயக்கும்படி, “தலைவனது தேர்வந்து வறிதே பெயர்வதாயிற்று; அவன் விருப்பம் கழிந்தது. அது கருதி வருந்துகின்றேன்” என்று தோழி கூறியது.)
   
நெய்தல் திணை-பாடலாசிரியர் நெய்தற் கார்க்கியன்

இனி பாடல்-
 
கொண்க னூர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
   
தெண்கட லடைகரைத் தெளிமணி யொலிப்பக்
   
காண வந்து நாணப் பெயரும்
   
அளிதோ தானே காமம்

விளிவது மன்ற நோகோ யானே.




                          -நெய்தற் கார்க்கியன்.



 தலைவன் ஏறிச் சென்ற, கொடுஞ்சியை உடைய உயர்ந்ததேரானது, தெள்ளிய நீரைஉடைய கடலை அடைந்த கரைக்கண், தெளிந்த ஓசையை உடைய மணிகள் ஒலிக்கும்படி,  நாம் காணும்படி வந்து பின்பு நாம் நாணும்படி, மீண்டு செல்லா நிற்கும்; காமம் இரங்கத் தக்கது;  நிச்சயமாக அழியக்கடவதாகும்;  இவை கருதி யான் வருந்துவேன்.



    (கருத்து) தலைவன் குறை பெறாமல் வருந்திச் சென்றான்.

   

    கொடுஞ்சி - தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேர்முன்நடப்படுவது; தேரூரும் தலைவர் இதனைக் கையால் பற்றிக் கொள்வதுவழக்கம்; “தம்பால்நயந்து வந்தோரது குறையைப் போக்குதல் அறநெறியாளர் கடனாதலின்,அதனைச் செய்யாமையால் வறிதே தலைவன் மீண்டது நாணத்தைத்தருவதாயிற்று; “

Friday, April 17, 2015

குறுந்தொகை-211





தோழி கூற்று
(தலைவன் பிரிந்தகாலத்தில், ‘‘சுரத்திடையே தம் துணையைப் பிரிந்த விலங்கும் பறவையும் கவல்வது கண்டு நாமும் அங்ஙனம் கவல்வோமென நினைந்து தலைவர் மீள்வரோ?” என ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் அத்தகைய அருள் உடையவரல்லர். நம்மைப் பிரிந்த வன்மையையுடை யார். ஆதலின் மீளார்” என்று தோழி கூறியது.)
   

பாலை திணை- பாடலாசிரியர் காவன்முல்லைப் பூதனார்

இனி பாடல்-

அஞ்சி லோதி யாய்வளை நெகிழ
   
நேர்ந்துநம் மருளார் நீத்தோர்க் கஞ்சல்
   
எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத்
   
தீய்ந்த மராஅத் தோங்கல் வெஞ்சினை

வேனி லோரிணர் தேனோ டூதி
   
ஆராது பெயருந் தும்பி
   
நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே.


                       -காவன்முல்லைப் பூதனார்.
   குறைந்து, வேனிலால் வெம்பிய மராமரத்தினது,  ஓங்குதலையுடைய வெவ்விய கிளையின்கண், வேனிற் காலத்து மலர்ந்த ஒற்றைப்பூங்கொத்தை,  தேனென்னும் சாதிவண்டோடு ஊதி, அதன்கண் ஒன்றுமின்மையின் உண்ணாமல் மீள்கின்ற, தும்பியென்னும் வண்டுகளையுடைய,நீரில்லாத இடங்களையுடைய, பாலைநிலத்தைக் கடந்தோரும்,  அழகிய சிலவாகியகூந்தலையுடைய நினது,  அழகியவளைகள் நெகிழும்படி,  நம் விருப்பத்திற்குஉடம்பட்டு,  நம்பால் அருள் செய்யாராகி, நம்மைப் பிரிந்து சென்றோருமாகிய தலைவர்பொருட்டு,  அஞ்சுதலை நீங்கினேம்.

    (

    (கருத்து) தலைவர் மீளார்.

 

   ( “அவர் இரங்கும் நெஞ்சுடையராயின் வளை நெகிழும்படி நமக்குஉளதாகும் துன்பத்தையும், நீரில் வைப்பிற் சுரம் போகுங்கால் தமக்குஉளதாகும் துன்பத்தையும் எண்ணிப் பிரியார். அவர் பிரிந்தமையின்இடைச்சுரத்தே இரங்கி மீளா வலிய நெஞ்சினராவர்” என்று தோழிகூறினாள்.)

Wednesday, April 15, 2015

குறுந்தொகை-210



சாதாரணமாக நம் வீட்டுப் பெரியவர்கள் காகம் கரைந்தால்...இன்று யாரோ விருந்தினர் வருவார்கள்..என்று சொல்வதைக் கேட்கிறோம்.

இந்த நம்பிக்கை அப்போதே...சங்க காலங்களிலேயே இருந்திருக்கிறது.

குறுந்தொகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முல்லை திணை பாடலில் அதைச் சொல்கிறார் பாடலாசிரியர் நச்செள்ளையார்.

தலைவன், தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான்.தலைவி அவனது வரவை எதிர்பார்த்திருக்கிறாள்.அப்போது காகம் கரையும் போதெல்லாம்..."பார்த்தாயா..இன்று உன் தலைவன் வந்துவிடுவான் என்று கூறி தலைவியைத் தோழி சமாதானப் படுத்துகிறாள்.

தலைவன் திரும்ப வந்து, தான் வராத நேரத்தில், தலைவியை ஆறுதல் கூறித் தேற்றியதற்காக தோழியைப் பாராட்டுகிறான்.தோழியோ, நான் பெரியதாக ஏதும் செய்யவில்லை.அச்செயலைச் செய்தது காகம் தான்.அது கரையும் போதெல்லாம் "நீர் வருவீர்" என்று மட்டுமே ஆறுதல் கூறினேன் என்கிறாள்.

இனி பாடல்-

தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து சென்ற மீண்டுவந்த தலைவன், “யான்பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்கு ஆற்றுவித்திருந்தாய்”என்று தோழியைப் புகழ, “என் செயல் ஒன்றுமின்று; காக்கை கரைந்த நன்னிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்” என்று அவள் கூறியது.)



திண்டேர் நள்ளி கானத் தண்டர்
 
பல்லா பயந்த நெய்யிற் றொண்டி
 
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
 
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி

பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
 
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.


                                -காக்கை பாடினியார் , நச்செள்ளையார்.


 திண்ணிய தேரையுடையநள்ளி யென்னும் உபகாரியினது,  காட்டிலுள்ள, இடையர்களுக்குரிய, பல பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு,  தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில், முற்றும் ஒருங்கே விளைந்த, வெண்ணெல்லரிசியால் ஆக்கிய வெம்மையையுடையசோற்றை,  ஏழு பாத்திரங்களில்ஏந்திக் கொடுத்தாலும்,  என் தோழியாகிய தலைவியினுடைய, பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும்பொருட்டு,  விருந்தினர் வரும்படி,  கரைதலைச் செய்த காக்கைக்கு இட்ட உணவே, சிறந்தது ஆகும்
 

    (கருத்து) காக்கை கரைதலால் நீர் வருவீர் என தலைவியை ஆற்றுவித்தேன்.

Friday, April 10, 2015

எனது புதிய நாடகம் "நூல் வேலி"



கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 26ஆம் ஆண்டு கோடை நாடக் விழாவில், எனது கதை, வசனம், இயக்கத்தில் நூல் வேலி என்ற நாடகம் நடைபெற இருக்கிறது.

நாடகத்தின் தலைப்பு..நாடகத்தை இறுதிவரை மறக்காத  இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் நினைவாக வைக்கப் பட்டுள்ளது.

இன்று சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்டுள்ள இந்நாடகம், 24-4-15 அன்று மாலை 7 மணியளவில் சென்னை நாரத கான சபா அரங்கில் நடைபெறுகிறது.

அனுமதி இலவசம்.

நாடக ரசிகர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.


Thursday, April 9, 2015

குறுந்தொகை-209



பாலை திணை-பாடலாசிரியர் பெருங்கடுங்கோ

இனி பாடல்-

அறம் தலைப்பட்ட நெல்லி அம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே
குறு நடை பல உள்ளலமே நெறி முதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்
தளை அவிழ் பல் போது கமழும்
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே.

குறு நடையுடன் நடக்கும்  பெண்ணே!  வலுவான புலிக்குட்டிகள், பாதையில் செல்வோர்க்கு உதவும்படி, மரத்திலிருந்து உதிரும், அழகிய பசுமையான நெல்லிக் கனிகளை உண்ணும் பாதையில் நான் வரும்பொழுது, பலவற்றைப் பற்றி நான் எண்ணவில்லை.  வளைந்த கிளைகளையுடைய வெட்சி செடிகளின் அரும்பு அவிழ்ந்து மலரும் பொழுது உள்ள நறுமணத்தை உடைய கருமையான அழகிய கூந்தலை உடைய இளம் பெண்ணின் நட்பைப் பற்றி மட்டுமே நினைத்தேன்.

குறுந்தொகை-208




தலைவி கூற்று
(திருமணத்திற்காக பொருளீட்ட தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, “நீ ஆற்றல் வேண்டும்” என்றதோழிக்கு அவள், “நான் தலைவர் கருத்தை உணர்ந்தேன்; ஆயினும் நொதுமலர் வரையப்புகுவரேல் என் செய்வதென ஆற்றேனாயினேன்”என்றது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

 இனி பாடல்-
   
ஒன்றே னல்லே னொன்றுவென் குன்றத்துப்
   
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
   
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
   
நின்றுகொய மலரு நாடனொ

டொன்றேன் றோழி யொன்ற னானே.


                             -கபிலர்.

 

 தோழி...நான் தலைவனோடு பொருந்தாத இயல்பினை உடையேனல்லேன்; பொருந்தும் இயல்பினேன்; ஆயினும்,  நொதுமலர் வரைவொடு புகுவதாகியதொரு காரணத்தினால்,  மலையினிடத்து,
 ஒன்றோடொன்று பொருதகளிறுகளால் மிதிக்கப்பட்ட, நெரிந்த அடியையுடைய வேங்கைமரம்,  குறமகளிர், தம்முடைய கூந்தலின்கண்ணே அணிந்துகொள்ளும்பொருட்டு, ஏறவேண்டாமல் நின்ற படியே மலர்களைக் கொய்யும்படி,  தாழ்ந்துமலர்தற்கிடமாகிய, - நாட்டையுடைய தலைவனோடு,  பொருந்தேன்.

 

    (கருத்து) தலைவர் வரவு நீட்டித்தலின் நொதுமலர் வரையப்புகுவரென்று நான் ஆற்றேனாயினேன்.

 

    (பொருத களிறு மிதித்தலால் வேங்கைமரம் சாய்ந்து மகளிர் ஏறாமேலே மலர் பறித்தற்கு எளிதாக மலர்ந்தது. )
 

Wednesday, April 8, 2015

குறுந்தொகை-207





தலைவி கூற்று
(தலைவர் சொல்லாமற் பிரிந்து செல்வதைத் தோழி கூறிய பொழுது,“இங்ஙனம் சொல்லிய ஆர்வலர் பலர்; அவரைப் போல நீயும் சொன்னாய்; தலைவரைத் தடுத்தாயல்லை” எனத் தலைவி இரங்கிச் சொல்லியது.)

பாலை திணை- பாடலாசிரியர் உறையன்

இனி பாடல்-
   
செப்பினஞ் செலினே செலவரி தாகுமென்
   
றத்த வோமை யங்கவட் டிருந்த
   
இனந்தீர் பருந்தின் புலம்புகொ டெள்விளி
   
சுரஞ்சென் மாக்கட் குயவுத்துணை யாகும்

கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி
   
நல்லடி பொறிப்பத் தாஅய்ச்
   
சென்றெனக் கேட்டநம் மார்வலர் பலரே.



   

 நம்முடைய செலவைத்தலைவியினிடத்துச் சொல்லிச் செல்வேமாயின்,  செல்லுதல் அரிதாகும்,  என்று கூறி, பாலைநிலத்திலுள்ள ஓமைமரத்தினது,  அழகிய கிளையின்கண் இருந்த,  இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்தினது, தனிமையைப் புலப்படுத்தலைக் கொண்ட தெளிந்த ஓசை,  அருவழியிற்செல்லும் மனிதர்களுக்கு,உசாத்துணையாக அமைதற்கு இடமாகிய,  கற்களையுடைய மலையினது அயலதாகிய,  யாவரும் நடக்கும் பழையதாகிய சிறியவழியில்,- தம் நல்ல அடிகள் சுவடு செய்ய,தாவி, சென்றாரென்று,  கேட்ட நம்முடைய அன்பர் பலராவர்.


    (கருத்து) தலைவர் செலவை யான் முன்னரே அறிந்தேன்.



    (“என்பால் அன்புடையார் பலர் கேட்டு இதனை எனக்கு முன்னரேதெரிவித்தனர். நீ இப்பொழுது தெரிவித்தலால் ஆகும் பயன் யாது?எல்லோரையும் போல நீ கேட்டாயன்றி அவன் செல்லாமல் தடுக்கவில்லை" எனத் தோழியின் இயலாமையைச் சுட்டித் தலைவி இரங்கினாள்.)

Tuesday, April 7, 2015

குறுந்தொகை-206






தலைவன் கூற்று
(பாங்கன் தன்னை இடித்துரைத்தபோது, “அறியாமையால் நான் காமநோயுற்றேன். இனிச் செய்யுமாறு யாது? நீவிர் அங்ஙனம் செய்யற்க”என்று தலைவன் கூறியது.)

மருதம் திணை -பாடலாசிரியர் ஐயூர் முடவன்

இனி பாடல்-
   
அமிழ்தத் தன்ன வந்தீங் கிளவி
   
அன்ன வினியோள் குணனு மின்ன
   
இன்ன வரும்படர் செய்யு மாயின்
   
உடனுறை வரிதே காமம்

குறுக லோம்புமி னறிவுடை யீரே.



_                         - ஐயூர் முடவன்
அறிவையுடையவரே,  அமிழ்தத்தைப்போன்ற,  அழகிய இனிய சொற்களையுடைய,  மனத்தாலுணர்தல் மாத்திரையே யியன்ற அத்தகைய இனிமையையுடையோளது,  குணமும்,  இத்தகைய,  இன்னாதனவாகிய துன்பங்களை உண்டாக்குமாயின், ஒருங்கு வாழ்தற்கு அரிது;ஆதலின், அதனை அணுகுதலைப்பரிகரிக்கவும்.

 

    (கருத்து) காமம் என்னால் தாங்கற்கரியது.

 
   ( ‘நான் அறிவின்மையால் இந்நோய் தலைக் கொண்டேன். இதனால் விளைந்த துன்பம் தீர்த்தற்கரிதாயிற்று. அறிவுடையீராகிய நீர் செல்லுதலை ஒழிமின்’ என்று தலைவன் தன் நிலைமையை ஒருவாறு புலப்படுத்தினான் நண்பனுக்கு)

Monday, April 6, 2015

குறுந்தொகை-205




நெய்தல் திணை -பாடலாசிரியர் உலோச்சன்

இனி பாடல்;-


மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க

விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு
,
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி,

கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப,

இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்;

யாங்கு அறிந்தன்றுகொல் தோழி! என்

தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?


                                   -உலோச்சன்

மழைமேகங்கள் அன்னம் சிறகை விரித்தது போல நகர்ந்து கொண்டு இருக்கின்றன. தலைவன் என்னுடன் கூடியபின்,கடலலைச் சரலால் நனைந்த சக்கரங்களைக் கொண்டத் தேரில் ஏறி இங்கிருந்து சென்று விட்டான்.இது எப்படி எனது நெற்றிக்குத் தெரிந்தது.அது பசலையால் அழகிழந்துத் தெரிகிறதே!(எனத் தோழியிடம் உரைக்கின்றாள்)

Thursday, April 2, 2015

குறுந்தொகை-204



பாங்கன் கூற்று
(தலைவனைப் பாங்கன் இடித்துரைத்தது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் மிளைப்பெருங் கந்தன்

இனி பாடல்-
 
காமங் காம மென்ப காமம்
   
அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
   
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
   
மூதா தைவந் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோ ளோயே.


                       -மிளைப்பெருங் கந்தன்.
    பெரிய தோளையுடையதலைவ,  காமம் காமமென்று அதனைஅறியார் இகழ்ந்து கூறுவர்; அக்காம மானது, வருத்தமும் நோயும் அன்று ,பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்தில்தழைத்த,  முதிராத இளைய புல்லை,முதிய பசு,  நாவால் தடவி இன்புற்றாற்போல,  நினைக்குங் காலத்து,  அக்காமம் புதிய இன்பத்தை யுடையதாகும்.

 

    (கருத்து) காமம் நம்முடைய அறிவின் எல்லைக்கு உட்பட்டது.

    (இளம்புல்லைத் தடவிய அளவில் முதிய பசு இன்புற்றதற்குக் காரணம்அப் புல்லின் சுவையன்று; பசுவின் ஆர்வமே. அதன் ஆர்வத்தளவுஅவ்வின்பம் நிற்றலைப் போலக் காமமானது நமது நினைப்பினளவிற்புதுமை யின்பத்தைத் தருவதாகின்றது.)