Monday, February 23, 2015

குறுந்தொகை-194



தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததை மேகத்தின்ஒலியாலும் மயிலின் மகிழ்ச்சியாலும் அறிந்த தலைவி தோழிக்குத் தன்ஆற்றாமைக் காரணத்தை அறிவித்தது.)


முல்லை திணை - பாடலாசிரியர் கோவதத்தன்

இனி பாடல்-

என்னெனப் படுங்கொ றோழி மின்னுபு
   
வானேர் பிரங்கு மொன்றோ வதனெதிர்
   
கான மஞ்ஞை கடிய வேங்கும்
   
ஏதில கலந்த விரண்டற்கென்

பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே.

.
                 -கோவதத்தன்



மேகம் எழுந்து,  ஒலிக்கின்ற செயல்ஒன்றுதானா எனக்குத் துன்பந் தருவது?  அந்தமேகம் ஒலித்ததற்கு எதிரே,  காட்டிலுள்ள மயில்கள்,  விரைவனவாகி ஆரவாரிக்கும்;இவ்வாறு அயன்மையையுடையனவாகிக் கலந்த இரண்டு பொருளாலும்,  எனது பேதைமையை யுடைய நெஞ்சம்,  பெரிய கலக்கத்தை அடையும்;  இந்நெஞ்சினது நிலை எத்தகையதென்று சொல்லப்படும்?

   

    (கருத்து) கார்ப்பருவம் வந்தமையின் என் மனம் கலங்குகின்றது.

    (கார்காலம் வந்துவிட்டதை மேகத்தின் முழக்கம் உணர்த்தியது;அதனெதிர் அகவிய மயிலின் ஆரவாரம் பின்னும் அதனை வலியுறுத்தியது; இது காமத்தை மிகுவிப்பது;)

No comments: