Tuesday, December 30, 2014

2014 எனக்கு எப்படி....



எனது நாடகம் "சாலையோரப் பூக்கள்" குட்வில் ஸ்டேஜ் குழுவினரால் மேடை ஏற்றப்பட்டு..பல சபாக்களில் நடந்து வருகிறது.

தவிர்த்து, இவ்வாண்டு, நான் மிகவும் எளிமைப் படுத்தி எழுதிய, "மகாபாரதம்" திரு சிவராமன், திரு முருகன் ஆகியோர் ஊக்குவிப்பில் சூரியன் பதிப்பகத்தாரால், "மினியேச்சர் மகாபாரதம்' என்ற பெயரில் நூலாக  வெளிவந்துள்ளது

மற்றபடி 2014 ல் மனிதர்களுக்கு அவ்வப்போது வந்து போகும் சிறு சிறு உபாதைகளும்..துன்பங்களும் எனக்கும் வந்து , பின், இவன் இதற்கெல்லாம் பயப்பட மாட்டான் என விலகி ஓடின.

2015ல் செய்ய நினைப்பவை..

ஏற்கனவே,எனது ஐந்து நாடகங்கள் ஒரு பிரபல பதிப்பகத்தால் இவ்வாண்டு புத்தகமாக வர உள்ளது.

"தந்தையுமானவள்" என்ற நாடகம் ஏப்ரல் மாதல் மேடையேற உள்ளது.

வால்மீகி ராமாயணம்.. எளிய நடையில் எழுதி, முடிக்கும் நிலையில் உள்ளது.

ஐம்பெரும் காப்பியங்களையும் எளிமைப் படுத்தி  எழுத எண்ணம்.(முக்கிய நோக்கம்..சிலப்பதிகாரம் தவிர்த்து மற்றவை பெரும்பாலானோருக்கு தெரியாது என எண்ணுகிறேண்.ஆகவே இம்முயற்சி)

திரு சிவராமன் மாதிரியும், திரு முருகன் மாதிரியும் நண்பர்கள் கிடைத்தால் இவற்றையும் நூலாக வெளியிட எண்ணம்.

வார, மாத இதழ்கள், இணையத்தில் என எழுதிய 30க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் புத்தகமாக்க ஆவல்

பார்ப்போம்...

நமக்கும் மீறிய சக்தி ஒன்று உள்ளது..அது என் எண்ணங்களுக்கு ஒத்துழைக்குமா என்று.

மற்றபடி

2014க்கு விடை கொடுத்து 2015 வரை வரவேற்போம்...நமக்கு அதனால் ஒரு வயது கூடுகிறது என்றாலும்.

அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

குறுந்தொகை-184



தலைவன் கூற்று
(தன்னை இடித்துரைத்த பாங்கனை நோக்கி, “சிற்றூரிடத்திற் செல்பவர் யாரும் தலைவியின் கண்வலையிற் படுவர்; என் நெஞ்சம் அதிற்பட்டது”என்று கூறியது.)

நெய்தல் திணை- ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன்

இனி பாடல்-

அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லை
 
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
 
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்
 
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்

மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை
 
நுண்வலைப் பரதவர் மடமகள்
 
கண்வலைப் படூஉங் கான லானே.


                           -ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன்.

   உரை-


    மயிலினது பீலிக்கண்ணைப் போன்ற, மாட்சிமைப்பட்ட முடியையுடைய பாவை போல்வாளாகிய, நுண்ணிய வலையையுடைய நெய்தனிலமாக்களுடைய மடமையையுடைய மகளது, கண்வலையின் கண் ஆண்டுச் செல்வார் அகப்படுகின்ற கடற்கரைச் சோலையினிடத்து, எனது மாட்சிமைப்பட்ட தகுதியையுடையநெஞ்சம்,  இப்பொருளுக்குஇப்பொருள் ஏற்ற மாட்சியை யுடையது, என்று ஆராயாமல், அக்கண் வலையின்கண்ணே பட்டு, அக்கானலினிடத்தே தங்கியது,  அறிவான் அமைந்தவர்கட்கு, தாம் கண்டறிந்ததொன்றைமறைத்துப் பொய்க்கரி கூறும் இயல்பு இல்லை; ஆதலின்யாம் கண்டறிந்த இதனை உண்மையாகக் கொள்க; அச்சிற்றூரினிடத்துச் செல்லுதலை, அடைதலைப் பரிகரிமின்.


  (கருத்து) நீவிர் ஆண்டுச் சென்றால் இங்ஙனம் கழறீர்.

 

Saturday, December 27, 2014

குறுந்தொகை-183



தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி ஆற்றாளென்று எண்ணி வருந்திய தோழியை நோக்கி, “கார் காலத்துக்குரிய அடையாளங்களை அவர் கண்டு என்னை நினைந்து வருவர்” என தலைவி உரைத்தது)
படத் தலைவி கூறியது.)

முல்லைத் திணை - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-
 
சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ
   
நம்போற் பசக்குங் காலைத் தம்போற்
   
சிறுதலைப் பிணையிற் றீர்ந்த நெறிகோட்
   
டிரலை மானையுங் காண்பர்கொ னமரே

புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை
   
மென்மயி லெருத்திற் றோன்றும்
   
கான வைப்பிற் புன்புலத் தானே.

                   - ஔவையார்

உரை-

மழை பெய்வதற்கு முன் பொலிவழிந்திருந்த காயாவினதுமலர்கள் பொருந்திய பெரிய கிளை,  மழை பெய்தபின் மெல்லிய மயிலினது கழுத்தைப் போலத் தோன்றும்,  காட்டிடத்தையுடைய புல்லிய நிலத்தின்கண், எம்மைப் பிரிந்து சென்று தங்கிய நாட்டிடத்துஉள்ளனவாகிய, கொன்றையின் அழகிய செவ்வி மலர்கள்,  நம்மைப் போலப் பசலை நிறத்தையடையும் கார்ப் பருவத்தில், சிறிய தலையையுடைய பெண் மானிடத்தினின்றும் நீங்கிய,  நெறிந்த கொம்பையுடைய ஆண்மானையும், நம் தலைவர், காண்பரோ; (காணார்.)



    (கருத்து) கார்காலம் வந்ததை அறிந்து தலைவர் விரைவில் வந்துவிடுவர்.

   

குறுந்தொகை-182




தலைவன் கூற்று
(தன் குறையைத் தோழி மறுத்தாளாக, “தலைவியும் இரங்கிக்குறைநயந்திலள்; தோழியும் உடம்படவில்லை; ஆதலின் இனி மடலேறுவேன்” என்பதுபடத் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் மாதங்கீரன்

இனி பாடல்-

 
விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல்
   
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
   
வெள்ளென் பணிந்துபிற ரெள்ளத் தோன்றி
   
ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித்

தெருவி னியலவுந் தருவது கொல்லோ
   
கலிழ்ந்தவி ரசைநடைப் பேதை
   
மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே.


                            -மடல் பாடிய மாதங்கீரன்.

 உரை-

அழகு ஒழுகி விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி,நம்மால் நெஞ்சம் நெகிழ்ந்திலள்,  நாம் அத் தலைவியினிடத்துவிடுதற்கு அமைந்த தூது,  சிறந்தஉச்சியையுடைய பனையின் கண், முதிர்தலையுடைய பெரிய மடலாற் செய்த குதிரைக்கு, மணிகள் அணிந்த பெரிய மாலையை, முறைமையோடு அணிந்து,  நாம் வெள்ளிய என்பை அணிந்துகொண்டு, பிறர் இகழும்படி அம்மடல் மாவின்மேல் தோன்றி,  ஒரு நாளில், பெரிய நாணத்தை விட்டு விட்டு, தெருவின் கண் செல்லவும் தருவதோ?

 
    (கருத்து) நான் இனி மடலேறுவேன்.

   

Thursday, December 25, 2014

பண்பற்ற இறைவன்-( தமிழ் இலக்கியம் )


வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்திருப்பதைக் கண்டு வெறுப்படைந்த இப்பாடலாசிரியர் இன்ப துன்பங்களுக்கு அப்பால், நிரந்தரமான ஒன்று இருக்குமானால், அதை அடையவேண்டும் என்ற கருத்தில் இப்பாடலை இயற்றியிருக்கக் கூடும்.

 இனி பாடல்-

ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.

                    -  பக்குடுக்கை நன்கணியார்.


உரை: ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை அன்புடன் ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுகொள்ள வேண்டும்.


அருஞ்சொற்பொருள்:
1. நெய்தல் = இரங்கற் பறை (சாவுப்பறை); கறங்கல் = ஒலித்தல். 2. ஈர் = இனிமை; தண் = அருள்; பாணி = (இனிய) ஓசை. 4. பைதல் = துன்பம்; உண்கண் = மை தீட்டிய கண்; வார்ப்பு = வார்த்தல் = ஊற்றுதல்; உறைத்தல் = சொரிதல்,

இதைத்தான் கண்ணதாசனும், நமக்கும் கீழே வாழ்பவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்றாரோ?!

குறுந்தொகை-181



தலைவி கூற்று
(தலைவன் பரத்தையிற் பிரிந்த காலத்தில் தலைவியின் ஆற்றாமையைக் கண்ட தோழி அவனது பரத்தைமையை இழிவு தோன்றக்கூறிய போது, “நமக்கு எவ்வளவோ கடமைகள் உள; அவற்றைச்செய்து கொண்டிருத்தல் சாலும்;தலைவனைக் குறை கூறல் வேண்டா’’என்று தலைவி கூறியது.)


குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கிள்ளி கிழார்

இனி பாடல்-

 
இதுமற் றெவனோ தோழி துனியிடை
   
இன்ன ரென்னு மின்னாக் கிளவி
   
இருமருப் பெருமை யீன்றணிக் காரான்
   
உழவன் யாத்த குழவியி னகலாது

பாஅற் பைம்பயி ராரு மூரன்
   
திருமனைப் பலகடம் பூண்ட
   
பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே.

                           - கிள்ளி கிழார்.

உரை-



பெரிய கொம்பையுடைய ஈன்றணிமையையுடைய பெண்ணெருமையானது,  உழவனாற் கட்டப்பட்ட கன்றின் பக்கத்தினின்றும்அகலச் செல்லாமல்,  பக்கத்திலுள்ள பசிய பயிர்களை,  மேய்வதற் கிடமாகிய ஊரையுடைய தலைவனது, செல்வத்தையுடைய மனைவாழ்வுக்குரிய பல கடப்பாடுகளைமேற்கொண்ட, பெரிய முதிய பெண்டிராகிய நமக்கு,  புலவிக்காலத்தினிடையே தலைவர் இத்தகையரென்னும் இனிமையில்லாத கூற்றாகிய, இதனாற் பயன் யாது?

   

    (கருத்து) தலைவனைக் குறை கூறாமல் நம் கடப்பாடுகளை நாம்செய்வோமாக.

Wednesday, December 24, 2014

லிங்கா,,,, எச்சரிக்கை - இது விமரிசனம் இல்லை..

           
     

சாதாரணமாக ரஜினி படம் என்றாலே நான் முதல் வாரத்திலேயே பார்த்து விடுவது வழக்கம்.லிங்கா படத்தையும் அப்படித்தான் பார்க்க நினைத்தேன்.சில எதிர்மறையான விமரிசனங்கள் வந்தபடியால்..இப்படத்தைப் பார்ப்பதை சற்றுத் தள்ளி வைத்தேன்.

(முக்கியக் காரணம்..படத்தைப் பார்த்து நாம் ஏதாவது விமரிசிக்கப் போக...ராதாரவியின் வசைச்சொல்லுக்கும், பிடிக்காவிட்டால் எழுந்து போக வேண்டியதுதானே என்ற ரவிகுமார் சொல்லுக்கும் பயந்துதான்...தாமதாகப் பார்த்தேன்..என நான் சொல்லாவிடினும், உங்களுக்கு எல்லாம் தெரியாதா என்ன.)

ஆனால், படத்தைப் பார்த்ததும், இப்படத்தைப் பார்ப்பதை ஏன் தள்ளி வைத்தேன்? அது தவறுதான் என உணர்ந்தேன்.

இப்படம் ஏமாற்றத்தையாத் தந்தது...இல்லை...கண்டிப்பாய் இல்லை..

என் முதல் பாராட்டு...கே.எஸ்.ரவிகுமாருக்கு....அவரது மற்றப் படங்களைப் போலவே..இதிலும் மக்களைக் கட்டிப்போட்டு விட்டார்.ஆரம்பத்திலிருந்து..சற்றும் தொய்வில்லாமல்..படம் செல்கிறது.(ஆனால், அடுத்தடுத்து என்ன நடக்கும் என குழந்தைகள் கூட சொல்லிவிடும்)

இப்படத் தயாரிப்பில், எவ்வளவு தொழில் நுட்பக் கலைஞர்கள் உழைப்பு இருக்கிறது..கேவலம்..120 ரூபாயைக் கொடுத்துவிட்டு..அவர்கள் உழைப்பை எல்லாம் துச்சமாக மதித்து..ஒரே வார்த்தையில்..படம் நன்றாய் இல்லை என விமரிசிப்பது எவ்வளவு பெரிய தவறு?

ஒளிப்பதிவாளர் ரத்னகுமாருக்கு என் அடுத்தப் பாராட்டு. அட்டகாசமாய் விளையாடியுள்ளது இவரது காமிரா.

அவரது திறமைக்கு சமமாக சவால் விடும் கலை இயக்குநர் அமரனுக்கு அடுத்த பாராட்டு.

ஏ.ஆர்,ரஹ்மான், வைரமுத்து, கபிலன், நடன இயக்குநர் ஆகியோரும் ஏமாற்றவில்லை.பாராட்டுதலைப் பெறுகிறார்கள்.

இந்த படம் ரஜினி ரசிகர்களை மட்டுமல்ல..என்னைப் போன்ற பொது ரசிகனையும் ஏமாற்றவில்லை.

மொத்தத்தில்...படத்தில் குறைகள், காதுலே பூ சுத்தும் அளவிற்கு லாஜிக் மீறல்கள் என இருந்தாலும்...கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ரஜினி படமாய் திகழ்கிறது என உறுதியாய் சொல்லலாம்.


குறுந்தொகை-180



தோழி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “அவர்சென்ற விடத்தில் தாம் கருதிச் சென்ற பொருளைப் பெற்றனரோ; இலரோ;பெற்றனராயின் உடனே மீண்டு வருவார்” என்று தோழி கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் கச்சிப்பேட்டு நன்னாகையார்

இனி பாடல்-
 
பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி
   
இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந்
   
தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன
   
பைத லொருகழை நீடிய சுரனிறந்

தெய்தினர் கொல்லோ பொருளே யல்குல்
   
அவ்வரி வாடத் துறந்தோர்
   
வன்பராகத்தாஞ் சென்ற நாட்டே.



                           -கச்சிப்பேட்டு நன்னாகையார்.



நம்மைப் பிரிந்த தலைவர்,  பேயின் பற்களைப் போன்ற,  பருத்த நகங்களை யுடைய பரவிய அடிகளைப்பெற்ற,  பெரியகளிற்றுத் திரளின் வரிசையினது தலைவன் வந்து கைக்கொள்ளின், அழிந்து,பாத்தியின்கண் வீழ்ந்த கரும்புகளின்,  கணுக்களின் இடையே யுள்ள பகுதியைப் போன்ற, வருந்துதலையுடைய ஒற்றைமூங்கில்,  ஓங்கிய,  பாலைநிலத்தைக் கடந்து, வன்னெஞ்சினராக,  தாம் போனநாட்டினிடத்து,  பொருளைஅடைந்தாரோ இல்லையோ?

    (கருத்து) தலைவர்தாம் தேடிச் சென்ற பொருளைப் பெற்றாரோ,இலரோ?

 

      (யானையின் கால் நகத்திற்குப் பேயின் பல்: ஓப்புமை)

இயக்குநர் சிகரமே..போய் வா..

                                   

தமிழ்த் திரையுலகில், எம்.ஜி.ஆர்., படம்., சிவாஜி படம்., என நடிகர்கள் பெயரைச் சொல்லி படங்கள் வந்த காலகட்டத்தில் முதன் முதலாக இது ஸ்ரீதர் இயக்கிய படம்,என்றும் இது பாலசந்தர் இயக்கிய படம் என்றும் ரசிகர்களைச் சொல்ல வைத்த வர்கள் ஸ்ரீதரும், பாலசந்தரும்.

பாலசந்தர் படங்களில் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களையும் ரசிகர்கள் மறக்க முடியாவண்ணம் பாத்திரப் படைப்புகள் அமைக்கப்பட்டது பாலசந்தரின் வலிமையாகும்.

அரங்கேற்றம் லலிதா, அவள் ஒரு தொடர்கதை கவிதா, தாமரை நெஞ்சம் கமலா, எதிர் நீச்சல் மாது, நீர்க்குமிழி சேது,புதுப் புது அர்த்தங்கள் மணிபாரதி, என்றுஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு மாதிரி....வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டவை.

தமிழ்த்திரையுலகின் இயக்குநர் சிகரம் ...

நாடக உலகிலிருந்து திரைக்கு வந்தவர்..ஆனாலும் கடைசி வரை நாடக மேடையை மறக்காதவர்.

எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் மூலம் கதை வசனகர்த்தாவாக அறிமுகமான இவர், சிவாஜி நடித்த நீலவானம் படத்திற்கும் கதை வசனம் எழுதினார்.பிறகு நடிகர் திலகம் நடிக்க எதிரொலி என்ற படத்தை இயக்கினார்.

நீர்க்குமிழி மூலம் இயக்குநர் ஆனவர் இவர்.முதல்படமே இப்படி பெயர் உள்ளதே என்ற போது..அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று சொன்ன பகுத்தறிவாளர் இவர்.

இவர் இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்கள்..

நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம், அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர் கதை, மன்மத லீலை, அவர்கள், புன்னகை, சிந்து பைரவி,மூன்று முடிச்சு,உன்னால் முடியும் தம்பி,தப்புத் தாளங்கள், அச்சமில்லை அச்சமில்லை, வறுமையின் நிறம் சிவப்பு,இரு கோடுகள், தண்ணீர் தண்ணீர் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.ஏக் துஜே கேலியே ஹிந்தியும், மரோசரித்ரா தெலுங்கும் வரலாற்று புகழ் பெற்றவை.

அவர் இழப்பு தமிழ்த் திரையுலகில் ஈடு செய்ய முடியா இழப்பு.

இயக்குநர் சிகரமே! போய் வா...சினிமா உள்ளவரை உன் பெயர் இருக்கும்.

தமிழ் நாடகம் உள்ளவரை உன் பெயர் அதில் நிலைத்திருக்கும்.

சுகமாய்ப் போய் வா.என கண்ணீர் பெருக உன்னை அனுப்பி வைக்கிறோம்

Monday, December 22, 2014

வறுமையும்...பட்ட காலிலேயே படுதலும்.. (கொஞ்சி விளையாடும் தமிழ்)


சனிப் பெயர்ச்சி.
உன் ராசிக்கு முதல் சனி..இரண்டரை வருஷம்.உடம்பு படித்தும்...பண நஷ்டம் ஏற்படும்.
அவன் ராசிக்கு மத்திய சனி..பரவாயில்லை.சமாளிக்கும் அளவு துன்பங்கள் இருக்கும்.
இவனுக்கோ...பொங்குசனி..அப்படியே வீட்டில் செல்வம் பொங்கும் என்றெல்லாம்..
சனிப் பெயர்ச்சியின் போது சொல்லுவர்.
ஆனால் இப்பதிவு அதுஅல்ல.

வறுமைக் குறித்து.

ஒருவருக்கும் துன்பம் ஏற்பட்டால்..அவருக்கு தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.பட்ட காலிலேயே படும் என்பது ஒரு சொல வடை,.

அப்படி ஒருவருக்கு துன்பம் வருகிறாம்.

இராமச்சந்திர கவிராயர் என்னும் கவி ஒருவர் ஒருவனுக்கு அடுக்கடுக்காய் வரும் துன்பத்தை...அந்த அவலத்தை சற்று நகைச்சுவையுடன் கூறும் பாடலைக் கேளுங்கள்.

"ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

அகத்தடியார் மெய்நோக அடிமை சாக

,மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள

சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற

தள்ளொண்ணா விருந்துவர சர்ப்பம் தீண்ட

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க

குருக்கள்வந்து தட்சணைதான் கொடு என்றாரே"


அவன் வீடு வயல் வெளி சூழ்ந்த பண்ணை வீடாம்.அவன் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்ற போது கொட்டித் தீர்த்தது மழை.அந்த மழையில்..அவன் வீடு இடிந்து விழுகிறது.வீட்டினுள் சென்று பார்த்தால், மனைவி படுகாயப்பட்டுள்ளாள்.அவன் அவளை மீட்க உதவிக்கு வேலைக்காரனைக் கூப்பிடுகிறான்.ஆனால் அவனோ வீட்டு இடிபாடுகளில் சிக்கி பிணமாகியுள்ளான்.அவனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.அப்போது ஞாபகம் வருகிறது..மழையால் மண் ஈரமாய் இருக்கும் போதே விதைநெல்லைத் தெளித்துவிட்டால்..வரும் காலம் வயிற்றுப்பாட்டிற்கு கவலை இல்லை.ஆகவே விதை நெல்லை தெளிக்க ஓடுகிறான்.(மனைவியை யாரையாவது பின் உடன் அழைத்து வந்து காப்பாற்றலாம் என்ற எண்ணம் வேறு)..ஆனால் செல்லும் வழியிலேயே, இவனுக்குக் கடன் கொடுத்தவன் எடுத்துச் சென்ற விதை நெல்லைக் கடனுக்கு பதில் பிடுங்கிச் செல்ல,அந்த வேளையில், பக்கத்து ஊரில் நெருங்கிய சொந்தம் இறந்து விட்டான் என்ற சாவு செய்தியை ஒருவன் கொண்டு வர..அப்போது..அவன் எப்போதோ அழித்திருந்த விருந்தினர் கூட்டம் வர..அச்சமயம் அவன் காலை ஒரு பாம்பு கொத்த..அதனால் அவன் கண்கள் இருள..அச்சமயம், அரசன் அவன் வரி செலுத்தவில்லை என அதை வசூல் செய்ய ஆளை அனுப்ப, அதே சமயம் வரி கொடுக்கும் போதே..கோவில் குருக்கள் அவன் தர வேண்டிய தட்சணை பாக்கியையும் கேட்க..கண் மூடுகிறான் அவன்.

(இப்படியெல்லாம் நடக்குமா? என்று வினவாமல் பாடலை மட்டும் ரசிக்கவும்)

குறுந்தொகை-179



தோழி கூற்று
(பகலில் வந்து தலைவியோடு அளவளாவிய தலைவனை நோக்கி,“எம் ஊருக்கு வந்து இரவில் தங்கிச் செல்வாயாக” என்று தோழி கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் குட்டுவன் கண்ணன்

இனி பாடல்-
 
கல்லென் கானத்துக் கடமா வாட்டி
   
எல்லு மெல்லின்று ஞமலியு மிளைத்தன
   
செல்ல லைஇய வுதுவெம் மூரே
   
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த

குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்
   
பேதை யானை சுவைத்த
   
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.


                               -குட்டுவன் கண்ணன்.



கல்லென்னும்ஆரவாரத்தையுடைய காட்டின் கண், கடமாவை(ஒருவகை விலங்கு) நீ அலைப்ப, பகற் பொழுதும் மங்கியது;  நாய்களும் நின்னுடன் வேட்டையாடி இளைப்பை அடைந்தன; போகற்க; உயர்ந்த மலைப்பக்கத்தில், இனிய தேனிறாலைக்கிழித்த, கூட்டமாகிய பசிய மூங்கில்களின் குருத்தைத் தின்ற ஆழ்ந்த வாயையுடைய,  பேதைமையையுடைய யானை,  தின்றதனாற் கூழையாகிய மூங்கிலையுடைய,  உச்சியின் இடையே உள்ளதாகிய, அஃது எமது ஊராகும்.


    (கருத்து) இரவில் எம்முடைய ஊருக்கு வந்து தங்கிச் செல்வாயாக.

Sunday, December 21, 2014

குறுந்தொகை-178



தோழி கூற்று
(தலைவனும் தலைவியும் வாழும் மனைக்கு அவர்களோடு சென்றதோழி தலைவியை அளவளாவுதலில் தலைவனுக்கு இருக்கும் விரைவைக்கண்டு, ‘‘இக் காலத்தில் இப்படி இருப்பீராகிய நீர் களவுக்காலத்தில் தலைவியோடு அளவளாவ வேண்டுமென்ற உமது விரைவை வெளிப்படாமற் செய்து வருந்தினீர் போலும்” என்று கூறி இரங்கியது.)


மருதம் திணை- பாடலாசிரியர் நெடும்பல்லியத்தை.

இனி பாடல்-

அயிரை பரந்த வந்தண் பழனத்
   
தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால்
   
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
   
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்

தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக்
   
கரிய மாகிய காலைப்
   
பெரிய நோன்றனிர் நோகோ யானே.


                                       நெடும்பல்லியத்தை.

உரை-

 அயிரைமீன் மேய்தற்குப்பரந்த, அழகிய தண்மையாகிய பொய்கையினிடத்து, அழகை மேற்கொண்டமலரையுடையனவாகிய,  உள்ளே துளையையுடைய திரண்ட தண்டையுடைய, ஆம்பலைப் பறிப்போர்,  புனல்வேட்கையை அடைந்தாற் போல,  இத்தலைவியின் நகிலினிடையே துயிலப்பெற்றும், நடுங்குதலை யொழிந்தீர்அல்லீர்; யாம் ,கன்னி மகளிரும் பிறரும் தொழுது காணும் பிறையைப்போல் தோன்றி,  நுமக்குக்காண்டற்கரியேமாகிய களவுக் காலத்தில், பெரிய வருத்தங்களைப் பொறுத்தீர்;  யான் அதனை யறிந்து வருந்துவேன்.



    (கருத்து) நீர் தலைவிபாற் கொண்ட அன்பின் வன்மையை முன்பு நான் நன்கறிந்திலேன்.

.

    நீரில் வளர்ந்த ஆம்பலைப் பறிப்போர் விடாயுற்ற காலத்தில் எளிதிற் பருகுதற்கு அண்மையில் நீர் இருப்பவும் நீரை வேட்டு விரைந்தாற் போல, நும் வேட்கையை முற்றுவிக்கும் தலைவி இடையறாது உம் அருகிலே இருப்பவும் நீர் விரைந்தீர் என்றாள். இதனால் தலைவனது காம நிலை உரைக்கப்பட்டது.

Friday, December 19, 2014

குறுந்தொகை-177



(தலைவன் மாலைக்காலத்தில் வருவானென்று தோழி தலைவிக்குக்கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் உலோச்சன்

இனி பாடல்-

கடல்பா டவிந்து கானன் மயங்கித்
   
துறைநீ ரிருங்கழி புல்லென் றன்றே
   
மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
   
அன்றிலும் பையென நரலு மின்றவர்

வருவர்கொல் வாழி தோழி நாந்தப்
   
புலப்பினும் பிரிவாங் கஞ்சித்
   
தணப்பருங் காமந் தண்டி யோரே.


                        -உலோச்சன்

உரை-

   தோழி , கடலானதுஒலி அடங்க, கடற்கரைச் சோலை மயக்கத்தையுடையதாக,  துறையையும் நீரையும் உடைய கரிய கழி,  பூக்கள் கூம்பியதனால் பொலிவழிந்தது; மன்றத்தின் கண் உள்ள அழகிய பனைமரத்தினது, மடலின் கண்ணே பொருந்திய வாழ்க்கையையுடைய,  அன்றிற் பறவையும், மெல்ல,  கூவும்; முன்புநாம் தம்மைப் புலந்தாலும்,  அவ்விடத்துப் பிரிதலை அஞ்சி,  நீங்குதற்கரிய காம இன்பத்தை,  அலைத்தும்பெற்றவராகிய, தலைவர், இன்று வருவர்.



    (கருத்து) தலைவர் இன்று வருவர்.

Thursday, December 18, 2014

குறுந்தொகை-176



தோழி கூற்று
(தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னுங்கருத்தினால், “பல நாள் இங்கே வந்து பணிந்த சொற்களைக் கூறிச்சென்றதலைவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ? அவனை நினைந்து என் நெஞ்சம் கலங்குகின்றது” என்று அவளுக்கு இரக்கம் உண்டாகும்படிதோழி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் வருமுலையாரித்தி


இனி பாடல்.

 
ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்
   
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
   
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை
   
வரைமுதிர் தேனிற் போகி யோனே

ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
   
வேறுபுல னன்னாட்டுப் பெய்த
   
ஏறுடை மழையிற் கலிழுமென் னெஞ்சே.


                                      -வருமுலையாரித்தி.

உரை-

 ஒருநாள் வந்தானல்லன்; இரண்டு நாட்கள் வந்தானல்லன்;  பல நாட்கள் வந்து,  பணிவைப் புலப்படுத்தும் மொழிகளைப் பல்காற் கூறி,  எனது நன்மையையுடைய நெஞ்சத்தை இரங்கச் செய்தபிறகு,  மலையினிடத்தில் முதிர்ந்து வீழ்ந்த தேனிறாலைப் போலப் போயினவனும்,  நமக்குப் பற்றுக் கோடாகிய எந்தையுமாகிய தலைவன், எங்கே இருக்கின்றானோ?  வேற்றுப் புலங்களையுடைய நல்ல நாட்டிற்பெய்த, இடியேற்றையுடைய மழைநீர் கலங்கி வருவது போல, என் நெஞ்சு கலங்கும்.

Sunday, December 14, 2014

மூன்று பீர் பாட்டில்களும் நட்சத்திர விருந்தும் (சிறுகதை)




கையில் இருந்த பணத்தை எண்ணினான்..முத்து

மீண்டும் எண்ணினான் ...அதேதான் இருந்தது.ஐநூறு ரூபாய்.

இன்றைக்கு டாஸ்மாக் போயிட வேண்டியதுதான்.நாளைக்குப் போனால்..காந்தி ஜெயந்தி..கடை இருக்காது என்பதால்..மக்கள் இரண்டு நாட்கள் முன்னதாகவே சரக்கை வாங்கி கை இருப்பில் வைத்து விடுவார்கள்.சமயத்தில்.. கடைசியில் வருபவர்களுக்கு ஸ்டாக் இல்லை என்று சொல்லி விடுவார்கள்.

அப்படியெல்லாம் சொல்லி விடக்கூடாது என ஆண்டவனை எல்லாம் வேண்டிக்கொண்டு..டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று மூன்று பீர் பாட்டில் வாங்கினான்.

**** **** **** ***

'என்னங்க..போன மாச வாடகையே பாக்கி..வீட்டு ஓனர் வந்து கத்திட்டுப் போனார்.

பால் காசு கொடுத்தாத் தான் பால் கொடுப்பேன்னு சொல்லிட்டார் பால்காரர்..குழந்தைக்கு பால் இல்லை 'என்றாள் பாக்கியலட்சுமி.

'ம்..ம்..' என்றான்.

அப்படின்னா என்ன அர்த்தம்ங்க..என்றாள்

அடச்சே..மனுஷனுக்கு வீட்டிலே நிம்மதி இல்ல..ஏண்டா வரோம்னு இருக்கு

அப்படி சொன்னா எப்படி..கையில இருந்த பணத்திலே டாஸ்மாக்குக்குப் போய் தொலைச்சுட்டீங்க..வீட்டு ஞாபகமே இல்லை உங்களுக்கு..குழந்தைகள் எல்லாம் நான் யாருக்கோவா பெத்தேன்..உங்களுக்குத் தானே..அப்ப அவங்களுக்கான செலவு பத்தியும் யோசிக்கணும்

என்னடி சொன்னே..என்றபடியே அவள் கன்னத்தில் பளார் என அறைந்தான்..பின் வாங்கிவந்த பீர் பாட்டிகளை ஜாக்கிரதையாக உள்ளே கொண்டு சென்று வைத்தான்.

***** ***** ****** *****

'முத்து..எவ்வளவு பணத்தோட வந்திருக்க?'

'..கையில நூறு ரூபாயும்..கொஞ்சம் சில்லறையும் தான் இருக்கு'

'என்ன முத்து.. நீயே இப்படிச் சொன்னா எப்படி..முப்பது அடி தலைவர் கட் ஆவுட்டுக்கு பீர் அபிஷேகம் பண்ணனும்னா எவ்வளவு பீர் வேணும்..அதைத்தவிர படத்துக்கு டிக்கட் இரு நூறு ரூபாய்' என்றவாறு தலையைச் சொறிந்தான்..லோகல் தலைவன்.

'இல்ல தலைவா..என்னால முடிஞ்சது மூணு பீர் வாங்கியாந்திருக்கேன்'

'அப்படியா..சரி..சரி..அந்த அண்டாவுலபோய்க் கொட்டு..படத்துக்கு துட்டு இல்லேனா படம் அப்புறம் பார்த்துக்கலாம்'

படம் பார்க்க முடியா..ஏமாற்றம் அடைந்த முத்து..பீரை அண்டாவில் கொட்டிவிட்டு..தன் தலைவன் நடித்த படத்தை முதல் நாள் பார்க்க முடியாத துக்கம் தாளாது ..கையில் இருந்த காசுக்கு கள்ள சாரயத்தை வாங்கி குடித்துவிட்டு..அந்த நடிகர் நடத்த படம் வெளியாகும் தியேட்டரின் நடைபாதையில் வீழ்ந்து கிடந்தான்..

**** ***** **** *****

குழந்தை பசியால் பாலுக்கு கத்தியது. சத்தான உணவில்லாததால் பால் சுரக்காத வற்றிப் போன தன் மார்பை குழந்தை சுவைக்க அதன் வாயில் திணித்தாள் பாக்கியலட்சுமி.

**** ***** ***** *****

தன் படம் வெற்றியடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட பிரபலங்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளித்துக் கொண்டிருந்தார் நடிகர்

Friday, December 12, 2014

குறுந்தொகை-175


தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என்று தோழி வற்புறுத்தினாளாக, “நான் வருந்துகின்றேனல்லேன்; ஊரார் யாது கூறினும் கூறுக” என்று தலைவி சொல்லியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் உலோச்சன்

இனி பாடல்-
 
பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி
   
உரவுத்திரை பொருத திணிமண லடைகரை
   
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம்
   
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்

கிரங்கேன் றோழியிங் கென்கொ லென்று
   
பிறர்பிற ரறியக் கூறல்
   
அமைந்தாங் கமைக வம்பலஃ தெவனே.



                                 -உலோச்சன்.


உரை-


    தோழி-,  செவ்வியை யுடைய தேனை விரும்பி, பல வண்டுக்கூட்டங்கள், உலாவுதலையுடைய அலைகள் மோதிய,  செறிந்தமணல் அடைந்த கரையின் கண் உள்ள,அலைத் துவலையால் நனைந்த புன்னை மரத்தினது,  பெரிய கிளையின்கண் கூடுகின்ற, மலர்ந்த மலர்களையும்,  கரிய நீரையுமுடைய,  கடற்கரைத் தலைவன்பொருட்டு,  வருந்தேன்;  இவ்விடத்து இவள் ஏன் இங்ஙனம் ஆயினளென்று,  பிறர் பிறர் அறியும்படி கூறிதல்,  அவர்களுடைய மனம் அமைந்தபடி அமைக; அவர்கள் கூறும் அம்பல், என்ன துன்பத்தைச் செய்வதாகும்?

 

    (கருத்து) ஊரவர் கூறும் பழிமொழியை யான் அஞ்சேன்.


     (“தலைவன் என்னைப் பிரிந்தானென நான் வருந்தினேனல்லேன்; ஆயினும் என்னையறியாது என்பால் வேறுபாடுகள் உண்டாகின்றன. அது கண்டு பிறர் கூறுவன கூறுக; அவற்றால் என் காமம் வலியுறுமே யன்றி எனக்கு வரும் ஏதமொன்றில்லை” என்றாள்.)

Thursday, December 11, 2014

குளித்த மரங்கள்

                           

மழை

குளிப்பாட்டி விட்டதும்

வெயில் வந்து

துவட்டி விட்டதும்

மர இலைகளின்

பளிச்சிடும் ஆரோக்கிய

பசுமை

குறுந்தொகை-174



தலைவி கூற்று
(தலைவன் பொருளீட்ட பிரியக் கருதியிருப்பதையுணர்ந்து கூறிய தோழியை நோக்கி, “பாலை நிலத்து வழிகள் கடத்தற்கரியன வென்று எண்ணாமல் என்னை அவர் பிரிந்து சென்றால், உலகத்தில் பொருள்தான் பெற்றகுரியது போலும்! அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும்!”என்று தலைவி கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் வெண்பூதி

இனி பாடல்-

 
பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்
   
கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி
   
துதைமென் றூவித் துணைப்புற விரிக்கும்
   
அத்த மரிய வென்னார் நத்துறந்து

பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப்
   
பொருளே மன்ற பொருளே
   
அருளே மன்ற வாருமில் லதுவே.


                                  -வெண்பூதி.

 

   உரை-
 தோழி -, பெய்தலையுடையமழை, பெய்யாது நீங்கிய,  தனிமைமிக்க பாலை நிலத்தில்,  கவைத்தமுள்ளையுடைய கள்ளியினது,  காய்வெடிக்கும் பொழுது விடும் கடிய ஒலியானது, நெருங்கிய மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய இரட்டைப் புறாக்களைநீங்கச் செய்யும், அருவழிகள், கடத்தற்கரியன வென்று கருதாராகி, நம்மைப்பிரிந்து, பொருளைத்தேடும் பொருட்டு நம் தலைவர் பிரிவாராயின், இந்த உலகத்தில்,  நிச்சயமாக, செல்வமே உறுதிப் பொருளாவது;  அருள்தான்,  தன்னை ஏற்றுக் கொள்வார்யாரும் இல்லாதது.



    (கருத்து) அருளுடையாராயின் என்னைப் பிரிந்து செல்லல் தகாது.

Wednesday, December 10, 2014

தமிழனுக்கு....பாரதியார்

                                 

தமிழா...தெய்வத்தை நம்பு..உனக்கு நல்ல காலம் பிறக்கும்.

உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள்.தெய்வக் கவிகள்,சங்கீத வித்வான்கள் ,கை தேர்ந்த சிற்பிகள்,பல நூல் வல்லுனர்கள்,தொழில் வல்லுனர்கள்,தேவர்கள் உன் ஜாதியில் மனிதர்களாக பிறந்திருக்கிறார்கள் நம் நாட்டுப் பெண்களெல்லாம் சக்தி யின் அவதாரமாக பிறந்திருக்கிறார்கள்.ஒளி,சக்தி,வலிமை,வீர்யம்,கவிதை,அழகு,மகிழ்ச்சி ஆகிய நலங்களெல்லாம் உன்னைச் சாருகின்றன.
ஜாதி வேற்றுமையை நீ வளர்க்கக்கூடாது.ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பழந் தமிழ் வாக்கியத்தை வேதமாகக்கொள்.
பெண்களை அடிமை என்று எண்ணாதே...முற்காலத்தில் தமிழர்கள் தம் மனைவியை 'வாழ்க்கைத்துணை'என்றுள்ளனர்.ஆத்மாவும்,சக்தியும் ஒன்று..ஆணும்..பெண்ணும் சமம்.வேதங்களை நம்பு.புராணங்களைக் கேட்டு பயனடைந்துக்கொள்.புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி,விலங்குகள் போல நடந்து கொள்ளாதே.

தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன.உன் மதக் கொள்கைகள்,லௌகீகக் கொள்கைகள்,வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்.இவற்றை நீக்கி விடு.வீட்டிலும்,வெளியிலும்,தனிமையிலும்,கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும்.உண்மை இருக்க வேண்டும்.நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது.பிறர்..பிறரை வஞ்சிப்பதையும் தடு.எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது.உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர்.உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர்.உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி.உண்மை பரமாத்மாவின் கண்ணாடி.ஆதலால் தமிழா..எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.
தமிழா..எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை..எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை.முந்தைய சாஸ்திரம் தான் மெய்..பிந்தைய சாஸ்திரம் பொய். என்று தீர்மானம் செய்துக் கொள்ளாதே..காலத்துக்கும்..உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி ..மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள். என பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.
இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பன.இவற்றுள் அறம் என்பது கடமை.அது உனக்கும்,உன் சுற்றத்தாருக்கும்,பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை.பிறர் என்பதில் வையகம் முழுதும் அடக்கம்.கடமையில் தவறாதே.

பொருள் என்பது செல்வம்.நிலமும்,பொன்னும்,கலையும்,புகழும் நிறைந்திருத்தல்.நல்ல மக்களைப் பெறுதல்,இனப்பெருமை சேருதல்,இவையெல்லாம் செல்வம்.இச் செல்வத்தைச் சேர்த்தல்மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.
இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது.பெண்,பாட்டு,கூத்து முதலிய ரஸ வஸ்த்துக்களை அனுபவிப்பது,இவ்வின்பங்களெல்லாம்...தமிழா..உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக.உன்னுடைய
நோய்களெல்லாம் தீரட்டும்.உன் வறுமை தொலையட்டும்.பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படட்டும்.நீ எப்போதும் இன்பம் எய்துக.
வீடாவது...பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது.'வீடு"என்ற சொல்லுக்கு விடுதலை என்று பொருள்.மேற் கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேறிய பெரியோர்க்கு ஈசன் தானாகவே வீட்டு நிலை அருள் செய்வான். தமிழா..உன் புருஷார்த்தங்கள் கை கூடட்டும்.



பாரதி- தமிழன்

குறுந்தொகை-173



தலைவன் கூற்று
(பாங்கியிற் கூட்டத்தின்கண் தலைவன் தோழியிடம் குறையிரப்ப அவள் மறுத்தாளாக, “இனி மடலேறும் பரிகார மொன்று இருத்தலால், அது செய்ய நினைந்து நான் செல்கின்றேன்” என்று அவன் கூறியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் மதுரைக் காஞ்சிப் புலவன்


இனி பாடல்-
 
பொன்னே ராவிரைப் புதுமலர் மிடைந்த
   
பன்னூன் மாலைப் பனைபடு கலிமாப்
   
பூண்மணி கறங்க வேறி நாணட்
   
டழிபட ருண்ணோய் வழிவழி சிறப்ப

இன்னள் செய்த திதுவென முன்னின்
   
றவள்பழி நுவலு மிவ்வூர்
   
ஆங்குணர்ந் தமையினீங் கேகுமா ருளெனே.



                                      -மதுரைக் காஞ்சிப் புலவன்.
உரை-

     பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக்கட்டிய,  பலவாகிய நூல்களையுடைய மாலைகளை அணிந்த,  பனங்கருக்கால் உண்டாக்கப்பட்ட மனச் செருக்கையுடைய குதிரையை, அதன் கழுத்திற் பூட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து, நாணத்தைத் தொலைத்து, மிக்க நினைவையுடைய உள்ளத்தேயுள்ள காமநோய், மேலும் மேலும் மிகுதியாக,  இன்னாளால் உண்டாக்கப்பட்டது இக்காம நோயென்று யான் கூற,  அக்கோலத்தைக் கண்ட இவ்வூரி லுள்ளார்,  எல்லோர்க்கும் முன்னே நின்று,  தலைவியினது பழியைக் கூறுவர். அங்ஙனம் உள்ளதொரு பரிகாரத்தை அறிந்திருத்தலால்,  இவ்விடத் தினின்றும்,  போகும் பொருட்டு உள்ளேன்.



    (கருத்து) நான் இனி மடலேறுவேன்.

Monday, December 8, 2014

குறுந்தொகை-172



தலைவி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘இவள் ஆற்றாள்’ எனக் கவன்ற தோழியை நோக்கி, அவர் என்னைப் பிரிந்து அங்கே எங்ஙனம் இருப்பார்? என்மனம் மிக வருந்துகின்றது” என்று தலைவி கூறியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் நன்னாகையார்


இனி பாடல்-

தாஅ வஞ்சிறை நொப்பறை வாவல்
   
பழுமரம் படரும் பையுண் மாலை
   
எமிய மாக வீங்குத் துறந்தோர்
   
தமிய ராக வினியர் கொல்லோ

ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த
   
உலைவாங்கு மிதிதோல் போலத்
   
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.


                                -கச்சிப்பேட்டு நன்னாகையார்.

உரை-

    தோழி வலியையுடைய அழகிய சிறையையும்,  மென்மையாகப் பறத்தலையும் உடைய,  வௌவால்கள்,பழுத்த மரங்களை நினைத்துச் செல்லும்,  தனியரானார்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், நான் தனியாக ஆகுமாறு,  இங்கு என்னை  பிரிந்த தலைவர், தனிமையை உடையராகவும்,  இனிமையை யுடையரோ?  ஏழு ஊரிலுள்ளார்க்குப் பொதுவாகிய தொழிலின் பொருட்டு, ஓர் ஊரின்கண் அமைத்த,  உலையிற் செறித்த துருத்தியைப் போல,  எல்லையை யறியாமல்,  வருத்தத்தை அடையும்.

   
(கருத்து) தலைவர் என்னைப் பிரிந்த தனிமையினால் துன்புறு வாரென்று என் நெஞ்சம் வருந்துகின்றதே யன்றி எனது தனிமைத் துன்பத்தைக் குறித்தன்று.

Sunday, December 7, 2014

குறுந்தொகை-171



தலைவி கூற்று
(தலைவன் மணமுடிக்க பொருளீட்டப் பிரிந்த காலத்தில் அயலாரை மணமுடிக்க எட்க்கும் முயற்சி முயற்சி பயன்படாதொழியும்” எனத் தலைவி கூறியது.)

மருதம் திணை- பாடலாசிரியர்  பூங்கணுத்திரையார்

இனி பாடல்-

காணினி வாழி தோழி யாணர்க்
   
கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட
   
மீன்வலை மாப்பட் டாஅங்
   
கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே.


                          -பூங்கணுத்திரையார்

உரை-

    (ப-ரை.) தோழி- இப்பொழுது பார்ப்பாயாக;  புதுவரவாகிய,  மிக்க புனலையும்,  அடைந்த கரையையுமுடைய, ஆழமான குளத்தின்கண் அமைத்த,  மீனுக்குரிய வலையின்கண், விலங்கு அகப்பட்டாற் போல,  அயலாரிடத்து,  வரைவுக்குரிய மணமுடிக்கும் இம் முயற்சி,என்ன பயனுடைத்து?

 

    (கருத்து) அயலார் மணந்து கொள்வதால் பயனொன்று மில்லை.

Saturday, December 6, 2014

குறுந்தொகை-170




தலைவி கூற்று
(தலைவன் மணமுடிக்க பொருளிட்ட தலைவியைப் பிரிந்த காலத்தில் அவனது பிரிவை தாங்கமாட்டாள் எனக் கவலையுற்ற தோழிக்கு, “தலைவனது நட்புக் கெடாதென்பதை நான் அறிந்துள்ளேன்; . அதனால் நான் உறுதி நீங்கேன்” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கருவூர் கிழார்

பலருங் கூறுகவஃ தறியா தோரே
 
அருவி தந்த நாட்குர லெருவை
 
கயநா டியானை கவள மாந்தும்
 
மலைகெழு நாடன் கேண்மை

தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.


                                  -கருவூர் கிழார்.

உரை-

  தோழி, நான், அருவியால் தரப்பட்ட, காலத்தில் விளைந்த கொத்தையுடைய -ஆழமான நீர்நிலையை ஆராய்கின்ற யானையானது,  கவளமாக உண்ணும், மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனது நட்பு, கெடாமையை,  நன்றாக, அறிந்துள்ளேன்.  அதனை, அறியாதோர் பலரும் தமக்குத் தோன்றியவற்றைக் கூறுக.



    (கருத்து)தலைவன் என்னை மணமுடிப்பான் என துணிவுடன் உள்ளேன்.

Friday, December 5, 2014

குறுந்தொகை-169



தலைவி கூற்று
(தலைவன் தன்பால் பரத்தைமை இல்லையென்று தலைவியினிடம் கூறித் தெளிவிக்குங் காலத்து, தலைவி, “எம் உயிர் நீங்குவதாக!” என்று கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர்  வெள்ளி வீதியார்.

இனி பாடல்-

சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்
   
றெற்றென விறீஇயரோ வைய மற்றியாம்
   
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
   
பாணர், பசுமீன் சொரிந்த மண்டை போல

எமக்கும் பெரும்புல வாகி
   
நும்மும் பெறேஎ மிறீஇயரெம் முயிரே.



                             -வெள்ளி வீதியார்.


யாம் நும்மோடு மகிழ்ந்து சிரித்த தூய வெள்ளிய பற்கள், பாலை நிலத்திற் செல்லும் யானையினது,  மலையைக் குத்திய கொம்பைப் போல, விரைவாக, முறிவனவாக;  எமது உயிர், பாணர் தாம் பிடித்த பச்சை மீனைப் பெய்த மண்டையைப் போல,  எமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாகி, உம்மையும் யாம் பெறேமாய் அழிக.


     (கருத்து) இனி, நும்மோடு அளவளாவுதலினும் இறத்தல் நன்று.

பாணர் மீன் பிடித்துத் தமக்குரிய மண்டையிலே இட்டு வைத்தல் மரபு. (மண்டை -வாயகன்ற மண்பாத்திரம்; ) ‘அம்மண்டை மீன் நாற்றத்தைப் பெற்று வேறொன்றற்குப் பயன்படாதது போல எம் உயிர் எமக்கே வெறுப்புத் தருவதாயிற்று; நுமக்கும் இனிப் பயன்படேம்; இது கழிக’ என்றாள்.
    தலைவனது பரத்தைமையால் மிக்க சினம் கொண்டவளாதலின் தலைவி இங்ஙனம் கூறினாள்.


9மருதத் தலைவன் கற்பு வாழ்க்கையில் மனைவியை விடுத்துப் பரத்தையுடன் சில நாள் தங்கி மகிழ்வான். இத்தகு பரத்தைமை ஒழுக்கத்தை வெறுத்து ஊடல் கொள்வாள் தலைவி)

Thursday, December 4, 2014

குறுந்தொகை-168



தலைவன் கூற்று

(பொருள் தேடத் துணிந்த நெஞ்சை நோக்கி, “தலைவியைப் பிரியின் உயிர்வாழ்தல் அரிது” என்று தலைவன் கூறியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்

இனி பாடல்-


மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
 
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
 
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
 
நறுந்தண் ணியளே நன்மா மேனி

புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்
 

மணத்தலுந் தணத்தலு மிலமே
 
பிரியின் வாழ்த லதனினு மிலமே.

என்பது பொருள்வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.

 
                                                -சிறைக்குடி யாந்தையார்.


உரை-

நெஞ்சே, தலைவி, நல்ல மாமையையுடைய மேனி,  மாரிக்காலத்தில் மலரும் பிச்சியினது,  நீர் ஒழுகும்கொழுவிய அரும்புகளில்,  பெரிய பசிய பனங் குடையில்,பலவற்றை ஒருங்கே வைத்து மூடி,  பெருமழை பெய்தலையுடைய விடியற் காலத்தே, விரித்துவிட்டாற் போன்ற,  நறுமையையும் தண்மையையும் உடையவள்; நீரில் விடும் தெப்பத்தைப் போன்ற,  வளைந்த சந்தினையுடைய பருத்த அவள் தோள்களை, பொருந்துதலும், பிரிதலும், இலம் . பிரிவேமாயின்,  உயிர் வாழ்தல், அதனைக் காட்டிலும், இல்லேம்.

 
    (கருத்து) தலைவியைப் பிரிதல் அரிது.

Wednesday, December 3, 2014

குறுந்தொகை-167



செவிலித்தாய் கூற்று
(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலி நற்றாயினிடத்தில், “தலைவி தலைவன் உவக்கும்படி அட்டு உண்பிக்கின்றாள்” என்று கூறியது.)

முல்லைத் திணை- பாடலாசிரியர் கூடலூர் கிழார்

இனி பாடல்

முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
 
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
 
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
 
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்


இனிதெனக் கணவ னுண்டலின்
 
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.



 
                                         -கூடலூர் கிழார்.



முற்றிய தயிரைப் பிசைந்த,  காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரலை,  துடைத்துக் கொண்ட ஆடையை, துவையாமல் உடுத்துக் கொண்டு,  குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில், தாளிப்பினது புகை மணப்ப, தானே துழாவிச் சமைத்த,  இனிய புளிப்பையுடைய குழம்பை, கணவன், இனிதென்று உண்பதனால்,  தலைவியின் முகமானது, நுண்ணிதாக மகிழ்ந்தது.



    (கருத்து) தலைவி தன் தலைவனுக்கு வேண்டியவற்றை அவன் மகிழும்படி செய்துவருகின்றாள்.

 

Tuesday, December 2, 2014

குறுந்தொகை-166




தோழி கூற்று
(தாய் முதலியோருடைய பாதுகாப்பின்கண் தலைவி இருத்தலால் தலைவன் அவளைக்கண்டு அளவளாவுதல் அரிதாயிற்றாக, அதனால் உண்டான துன்பத்தைக் குறிப்பிப்பாளாகி, மரந்தையூர் சிறந்ததாயினும் தனிமையினால் வருத்தந் தருவதாகின்றதென்று தோழி கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் கூடலூர் கிழார்

இனி பாடல்-

தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை
   
நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்
   
ஊரோ நன்றுமன் மரந்தை
   
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே.


                                     -கூடலூர் கிழார்.


 குளிர்ந்த கடற்கண்ணே உண்டாகும் அலைகள் மீன்களைப் பெயரச் செய்வதனால்,  வெள்ளிய சிறகுகளையுடைய நாரையின் வரிசை, நீங்கி அயிரை மீனை உண்ணுதற் கிடமாகிய,  ஊராகியமரந்தை, தலைவனோடு இருக்குங்கால் மிக நன்மையையுடையது;  தலைவனைப் பிரிந்து தனியே தங்குவேமாயின்,  வருத்தத்தைத் தருவதற்குக் காரணமாகின்றது.

 

    (கருத்து) தலைவனைப் பிரிந்திருத்தல் துன்பத்துக்குக் காரணமாகின்றது.

    (வி-ரை.) திரை மீனைப் பெயர்த்தாலும் நாரை அம்மீன் உள்ள இடத்தே சென்று அதனை ஆர்ந்தது போல, தாயர்முதலியோர் இற்செறித்துக் காப்பிடை வைப்பினும் தலைவன் தலைவியிருக்குமிடத்து வந்து கண்டு இன்புறல் வேண்டுமென்பது குறிப்பு.

குறுந்தொகை-165




தலைவன் கூற்று
(தோழியினிடம் இரந்து நின்றும் உடம்பாடு பெறாத தலைவன் தலைவிபாற் சென்ற தன் நெஞ்சை நோக்கி, “ஒருமுறை விரும்பி அறிவிழந்தாய்; மீண்டும் விழைகின்றாய்!” என்று கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் பரணர்

இனி பாடல்-

 
மகிழ்ந்ததன் றலையு நறவுண் டாங்கு
   
விழைந்ததன் றலையு நீவெய் துற்றனை
   
அருங்கரை நின்ற வுப்பொய் சகடம்
   
பெரும்பெய றலையவீந் தாங்கிவள்

இரும்பல் கூந்த லியலணி கண்டே.




                                  -பரணர்.


 நெஞ்சே, ஏறுதற்கரிய கரையில் நின்ற, உப்பைச் செலுத்துகின்ற வண்டி,  பெரிய மழை பொழிந்ததனால், அழிந்ததுபோல, இவளது கரிய கூந்தலின், இயற்கை அழகைக் கண்டு, மறுக்கப்பட்டோமென்று அன்பு ஒழியாயாய்க் காமத்தால் நான் அழிந்து,  கள்ளுண்டு அறிவிழந்து களித்ததன் மேலும், கள்ளை உண்டாற்போல், நீ, ஒருமுறை விரும்பியதன் பின்னும்,  விருப்பத்தை அடைந்தாய்.



    (கருத்து) நீ தலைவியோடு அளவளாவ விரும்பல் மயக்கத்தின் பாற்பட்டது.

( கள்ளுண்டார் அறிவிழந்து நின்று களித்தல் ஒருமுறை கள்ளுண்டு மீட்டும் உண்ணும் வேட்கையைக் காமமுடையார் நிலைக்கு உவமை )