Thursday, September 18, 2014

குறுந்தொகை-109



தோழி கூற்று
(தலைவன் கேட்கும் அண்மையனாக இருக்கையில் தலைவிக்குக் கூறுபவளாய், “தலைவர் நாடோறும் வந்து பயின்று செல்லும் இக்காலத்தில் நின் நுதற்கவின் மாறியது என்?” என்று தோழி, அவனுக்கு வரைய வேண்டியதன் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் நம்பி குட்டுவன்

இனி பாடல்
 
முடக்கா லிறவின் முடங்குபுறப் பெருங்கிளை
   
புணரி யிகுதிரை தரூஉந் துறைவன்
   
புணரிய விருந்த ஞான்றும்
   
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.

                    -நம்பி குட்டுவன்

உரை-

வளைவையுடைய காலையுடைய இறாமீனின் , வளைந்த முதுகையுடைய பெரிய இனத்தை கடலில் தாழும் அலையானது கொண்டு வந்து தருவதற்கு இடமாகிய துறையையுடைய தலைவன், அளவளாவ இருந்த பொழுதும், உனது நல்ல நெற்றியின் அழகு பிறர் பழிக்கும் வண்ணம் குறைபாட்டையுடைய இத்தகையாயிற்று (பசலை நோயால்).இது இரங்கற்குரியது


     (கருத்து) தலைவன் மணந்தால் அன்றி நின் வேறுபாடு நீங்காது.


   நுதற்கவின் இன்னதென்றது பசலை பெற்றதைக் குறித்தது. களவுக் காலத்து இடையீடு உண்மையின் அதனால் வருந்திய தலைவியின் நிலை நீங்க அவளை மணந்து கொண்டு உடனுறைந்து இல்வாழ்க்கை நடத்தலே தகுதியென்று தோழி குறிப்பால் அறிவுறுத்தினாள்.

No comments: