Tuesday, July 22, 2014

குறுந்தொகை - 50






தலைவி கூற்று
(விலைமகளிடம் சென்று பிரிந்த தலைவன் தலைவிக்கு தூது அனுப்புகிறான்.அந்த தூதுவரை நோக்கி தலைவி, “அவர் விளையாடும் துறை அழகு பெற்றது; அவர் மணந்த தோள் மெலிவுற்றது” என்று கூறுகிறாள்)

மருதம் திணை - பாடலாசிரியர் குன்றியனார்

இனி பாடல்-

.  
ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்
   
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
   
துறையணிந் தன்றவ ரூரே யிறையிறந்
   
திலங்குவளை நெகிழச் சாஅய்ப்

புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே.

                       _ குன்றியனார்


உரை -

வெண்சிறு கடுகு போன்று சிறு பூக்களையுடைய ஞாழல் மரத்தின் பூ, செம்மையாகிய மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு பரந்து இருக்கும் தலைவனின் ஊரின் இடத்தில் நீர்த்துறையை அழகு செய்தது.(ஆனால்) அவர் முன்பு அளவளாவிய என் தோள், விளங்கும் வளையல்கள்..மூட்டுவாய்ச் சந்தைக் கடந்து நெகுழும்படி மெலிந்து..தனிமையையே அழகாகப் பெற்றது.


 (கருத்து) அவர் என்னைப் புறக்கணித்தமையால் நான் மெலிந்தேன்.

 ஊரின் அழகு ஞாழல் மரப்பூவும்,மருதமரப்பூவும்..இரண்டும் இணைந்து அழகு பெற்றது.ஆனால்..தலைவன் இல்லாமால் தனித்து இருக்கும் என் தோள்களும், கை மணிக்கட்டும் ..மெலிந்து பொலிவிழந்து காணப்படுகிறது...   

No comments: