Thursday, July 10, 2014

குறுந்தொகை -35


தலைவி கூற்று
(தலைவன் பிரிந்தமையால் மெலிவுற்ற தலைவி அழுதாளாக, “நீ அழுதது ஏன்?” என்று வினாவிய தோழிக்கு, “தலைவர் பிரிந்த காலத்தில் அழாமல் உடம்பட்ட என் கண்கள் இப்பொழுது நாணமின்றி அழுதன” என்று தன் வருத்தத்தைக் கண்ணின்மேலேற்றித் தலைவி உரைத்தது.)

மருதம் திண - பாடலாசிரியர் கழார்க் கீரன்


நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
   
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
   
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
   
நுண்ணுறை யழி துளி தலைஇய

தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.

                                   - கழார்க் கீரன் எயிற்றி

உரை-

தலைவன் பிரிந்து செல்கையில், கர்ப்பமான பச்சை பாம்பினது கருவின் முதிர்வு போன்ற, திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு
மலருமாறு நுண்ணிய மழை பொழிந்து துளி பொருந்திய, தண்ணிய வருதலை உடைய வாடைக்காற்றை யுடைய கூதிர்காலத்தும் பிரிந்துறையும் தலைவர் பொருட்டு அழாததால் எனது கண்கள் கண்டிப்பாக நாணம் இல்லாதன..(என்கிறாள் தலைவி தோழியிடம்)

   

    (கருத்து) அவர் பிரியும் பொழுது கண்கள் அழுது தடை செய்யாதது தவறு.



    தோகையால் மூடப்பட்டுப் பசுமையாக இருத்தலின் கரும்பின் அரும்பிற்குப் பச்சைப் பாம்பை உவமை கூறினாள். கார்காலத்து மழை பெய்தபின் மேகத்தில் எஞ்சியிருக்கும் துளிகள் கூதிர்க் காலத்து வீழ்தலின், ‘நுண்ணுறை யழிதுளி தலைஇய வாடை’ என்றாள். தலைஇய - பெய்த வெனலுமாம். வாடையும்: உம் இழிவுச் சிறப்பு; வாடையை உடைய கூதிர்க் காலம் தலைவனும் தலைவியும் இன்புறுவதற்கு ஏற்ற காலம் . ஆதலின் உடன் இருப்பதற்குரிய காலத்தில் பிரிந்துறைகின்றார் என்று தலைவி வருந்தினாள்.

 

No comments: