Monday, June 30, 2014

குறுந்தொகை - 27

ஒரு அழகிய பெண்..தன் அழகை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என மேலும் செயற்கையாகவும் அழகு செய்து கொள்வாள்.அதுவும் கணவனின் பாராட்டை..அவள் அதிகம் எதிர்பார்ப்பாள்.அப்படிப்பட்ட ஒரு பெண்..கணவனை சிறிது காலம் பிரிய நேரிடுகிறது.அந்நிலையில்..தன் அழகு கணவன் இல்லாமல் வீணாகிறது என வருந்துவாளாம்.இப்பாடல் அதையேக் குறிக்கின்றது
 

(தலைவன் பிரிவினை தலைவியால் தாங்கமுடியாது என கவலை அடைந்த தோழியிடம் தன் அழகு வீணாவதை தலைவி உரைப்பது)

பாலை திணை - பாடலாசிரியர் வெள்ளிவீதியார்

பாடல்=
 
கன்று முண்ணாது கலத்தினும் படாது
   
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
   
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
   
பசலை யுணீஇயர் வேண்டும்

திதலை யல்குலென் மாமைக் கவினே.

                                -வெள்ளிவீதியார்


உரை-

நல்ல பசுவின் இனிமையான பாலானது, அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல்,கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், தரையில் சிந்தி வீணானது போல,எனது மாந்தளிர் போன்ற பேரழகு எனக்கு பயந்து நிற்பதாகாமலும், என் தலைவனுக்கு இன்பம் தராமலும் பசலை படர்ந்து ரசிக்கப்படாமல் இருக்கும்.


(தலைவன் பிரிந்து சென்றதால் தலைவியின் மாந்தளிர் உடலழகு பசலைப் படர்ந்து நிறம் இழந்தது)

பசுவின் பால் கன்றும் உண்ணாது..கறக்கும் பாத்திரத்திலும் விழாது..தரையில் வீணாவது போல அழகு யாருக்கும் பயனின்றி வீணாகிறதாம்.எப்படிப்பட்ட ஒரு உவமை

Sunday, June 29, 2014

குறுந்தொகை -26



தோழி கூற்று
(தலைவி பித்து பிடித்தது போல இருக்கிறாள்.அதற்குக் காரணம் தெய்வக்குற்றம் என கட்டுவிச்சி(குறி சொல்பவள்) சொன்னாலும், உண்மைக் காரணம் அவளது காதல்.அவளது தலைவனோடு ந்ட்புடன் இருந்தால்..இதற்கு அந்த இடத்தில் இருந்த ஆண்குரங்கு சாட்சி )

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் வெள்ளி வீதியார்.

இனி பாடல் -
 
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
 
மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை
 
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
 
தகாஅன் போலத் தான்றீது மொழியினும்

தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
 
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்
 
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
 
கடுவனு மறியுமக் கொடியோ னையே.

                     -வெள்ளி வீதியார்.

உரை-

அரும்புகள் இல்லாமல் மலரும் கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது, அதன் மலரைப் பறிக்கும் மகளிரைப் போல தோன்றுவதற்கு இடமான நாட்டை உடைய தலைவன், இவளுக்கு தகுதியானவன் அல்ல என்பதுபோல கட்டுவிச்சி(குறி சொல்பவள்) தீது கூறினும், தேமாவின் கனியை உண்ணும் . முள்ளைப் போன்ற கூறிய பற்களையும், சிவந்த வாயையும் உடைய, மலைகளில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையான ஆண் குரங்கும் அந்த கொடியவனான தலைவனை அறியும்.அது தனது கண்ணால் கண்டதை பொய் என சொல்லாது.(என்கிறாள் தோழி)
(ஆகவே தலைவியின் நோய்க்குக் காரணம் ஒரு தலைவனோடு செய்த நட்பே ஆகும்.

இப்பாடலில் தலைவியின் நோய்க்குக் காரணம் ஒன்றிருக்க , அது அறியாமல் தாய் குறி கேட்டு, குறி சொல்பவளும் இது தெய்வக்குற்றம் என சொல்வது...இன்றும் பல குடும்பங்களிடேயே காணப்படும், ஜோதிடம் பார்த்தல், குறி சொல்லுதல் ஆகியவற்றைக் காண்கையில்...மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை மாறவில்லை என்பது ஆச்சரியத்தைக் குறிக்கிறது

Saturday, June 28, 2014

குறுந்தொகை -25




(தலைவன் தலைவியை மணம்செய்து கொள்ளாமல் இருக்கிறான்.இதனால் வருந்திய தலைவி தோழியிடம் முறையிடுவது)


இப்போதெல்லாம் லிவிங்  டுகெதெர் என்று திருமணத்திற்கு முன் ஒன்றாக வசிக்கும் கலாச்சாரம் சிறிது சிறிதாக பரவி வருகிறது.அப்படி ஒன்றாக வாழ்ந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரிந்தால்...பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்.ஒன்றாக வாழ்ந்ததற்கு சான்றோர் யாருக்கும் தெரியவும் தெரியாது எனில் நிலைமை இன்னும் மோசம்.இதேநிலைதான் இன்றைய குறுந்தொகை பாடலில் காண்பது.

தலைவி கூற்று -  குறிஞ்சி திணை பாடலாசிரியர் கபிலர்

பாடல் -
 
யாரு மில்லைத் தானே கள்வன்
 
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
 
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
 
ஒழுகுநீ ராரல் பார்க்கும்

குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.

                              -கபிலர்.

    உரை -
தலைவன் என்னை களவில் மணந்த போது பெரியவர்கள்(சாட்சிகள்) யாரும் இல்லை. ஒடும் நீரில் உண்ண ஆரல் மீனின் வரவை எதிர்நோக்கி தினையின் அடியைப் போன்ற சிறு பசும்காலை உடைய நாரையைத்தவிர,..அப்போது அவன் கூறிய உறுதிமொழி(மணப்பேன் என்னும் உறுதிமொழி)யிலிருந்து தப்பப்பார்த்தால் என்னால் என்ன செய்யமுடியும்? ’

Friday, June 27, 2014

குறுந்தொகை - 24



மனைவியை விட்டு கணவன் பிரிந்து செல்கிறான்.மீண்டும் அவன் சொன்ன காலத்தில் திரும்பி வரவில்லை.இனி வருவானா? மாட்டானா? எனத் தெரியாது.உலகம் அம்
மனைவி மீது பழி போடுகிறது.அவளை வாழாவெட்டி என்கிறது.எவ்வளவுதான் காலங்கள் மாறினாலும்...ஆணாதிக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை எல்லாயிடத்தும்.இதே போன்ற நிகழ்ச்சிகள் சங்க காலத்திலிருந்து நடந்து வந்துள்ளதை இப்பாடல் தெரிவிக்கிறது.

 முல்லை திணை -  பாடலாசிரியர்- பரணர்

பாடல்-    

கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்

என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
   
ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்
   
தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்

குழையக் கொடியோர் நாவே
   
காதல ரகலக் கல்லென் றவ்வே.

                            -  பரணர்.

உரை-


கரிய தாளை உடைய வேப்பமரத்தின் பூவின் வருகையானது(இளவேனில் காலம்)என் தலைவன் வராமல் சென்றுவிடுமோ!கொடிய வம்பு பேசும் அயலாரின் நாக்குகள், ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த வெள்ளிய கிளைகளை உடைய அத்தி மரத்தின் உண்ண விரும்பும் பழத்தின் மீது ஏழு நண்டுகளால் மிதிபட்டு குழைந்தது போல நான் வருந்தும் படி பேசுகின்றனவே!
 .
(பழிபேசும் ஊரார் அன்றிலிருந்து, இன்றுவரை அடங்கவில்லை)

Thursday, June 26, 2014

குறுந்தொகை - 23



நம் மக்கள் ஜோசியத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள்.ஜாதகத்தை எடுத்துக் கொண்டு..எனக்கு எப்போது வேலை கிடைக்கும், வெளிநாடு செல்லும் சான்ஸ் இருக்கிறதா, திருமணம் எப்போது...என எப்போது இறப்பு என அறிவது வரை பல வினாக்களுக்கு விடையை ஜோதிடர் மூலம் அறிய விரும்புவர்.தவிர்த்து, கிளி ஜோசியம், கோல் வைத்துக் கொண்டு பாடும் குறி சொல்லுபவர் ஜோசியம் என பலவகை உண்டு.அதற்கு பரிகாரங்களும் சொல்வர்.

வெளிநாட்டிலும், குறிப்பாக உலக கால்பந்து போட்டியில் எந்த அணி வெல்லும் என ஆமை ஜோசியம் கூட நாம் அறி
வோம்.

இது சங்ககாலத்திலும் உண்டு.

தலைவனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடால்..தலைவி பிரம்மை பிடித்தது போல இருக்கிறாளாம்.அவள் நிலை எப்போது சரியாகும் என நெற்குறி பார்ப்பவள் மூலம் பார்க்கிறார்களாம்.
இனி செய்யுள் -

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் ஔவையார்


அகவன் மகளே யகவன் மகளே
 
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
 
அகவன் மகளே பாடுக பாட்டே
 
இன்னும் பாடுக பாட்டே, அவர்

நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.

                   -ஒளவையார்.

உரை-

தெய்வங்களை அழைத்துப் பாடும் குறி சொல்லும் மகளே , சங்கு மணியினால் ஆன கோவையைப் போன்ற வெண்மையாகிய கூந்தலை உடைய  அகவல் மகளே!பாட்டுகளைப் பாடுவாயாக.(நீ பாடிய) தலைவனது நெடிய குன்றத்தை புகழ்ந்துபாடிய பாட்டை மீண்டும் பாடுவாயாக (என தோழி உரைக்கிறாள்)


(குறிப்பு-  (அகவல் மகள் - கட்டுவிச்சி -முறத்தில் நெல்லை வைத்துத் தெய்வங்களைப் பாடி எண்ணிப் பார்த்துக் காணும் குறி).இவளைப் பிற்காலத்தார் குறத்தி என்று கூறுவர்




தலைவனால் வேறுபாடு என்பதால்..அவன் சார்ந்த மலை பற்றி பாடச் சொல்வதாகக் கொள்ளலாம்)

Wednesday, June 25, 2014

குறுந்தொகை - 22



குடும்ப பட்ஜெட் பற்றாக்குறை. செலவை ஈடுகட்ட வெளியூரிலோ, வெளிநாட்டிலோ வேலை கிடைக்கிறது.மனைவியை விட்டு அந்த ஊருக்குச் செல்ல வேண்டும்.கணவன், மனைவி இருவரும் இதுநாள் வரை ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்ததில்லை.தன்னையும் அவர் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என மனைவி நினைக்கிறாள்.இது, இன்று பல இல்லங்களில் நடந்து வரும் நிகழ்ச்சி.இதுபோல அந்த காலத்திலும் நடந்துள்ளதை இப்பாடல் நூலம் தெரியவருகிறது.

தலைவன் தன்னை பிரிந்து செல்லப்போகிறான் என்பதை முன்னரே உணர்ந்துவிட்டாள் தலைவி..அதனால் கண்ணீர் சிந்துகிறாள்.அதைக்கண்ட தோழி, வருந்தாதே..அவர் உன்னையும் உடன் அழைத்துச் செல்வார் என ஆறுதல் கூறுகிறாள்

இனி பாடல்-

 பாலைத் திணை -  பாடலாசிரியர்- சேரமானெந்தை


 
நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய
   
யாரோ பிரிகிற் பவரே சாரற்
   
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
   
வேனி லஞ்சினை கமழும்

தேமூ ரொண்ணுத னின்னொடுஞ் செலவே.

                              -  சேரமானெந்தை



இனி உரை -

மலைப்பிரதேசமானது ,வேனிற் காலத்தில் தனக்கு அழகாக இருக்கும் அழகிய வெண் கடப்ப மலரை உடைய அழகிய மரத்தின் கிளைகளிடத்தில் பரப்புகின்ற மணத்தை விளக்குவது போன்ற நெற்றியை உடைய  (தலைவன் பிரிவதால்)
துயரத்தால் கண்ணீர் விடும் கண்ணை உடைய உன்னை தனியாகத் தங்க பிரிந்து செல்லும் ஆற்றல் உடையவர் யார்?
(தலைவன் உன்னையும் அழைத்தேச் செல்வான்.)

Tuesday, June 24, 2014

குறுந்தொகை - 21



சாதாரணமாக பெண்கள் ஒருவனை எளிதில் நம்பமாட்டார்கள்.ஆனால்..நம்பிவிட்டால், அவனே "நான் செய்தது தப்பு "என்று சொன்னாலும் அதை நம்பமாட்டார்கள்.அப்படிப்பட்ட மென்மையான மனம் கொண்டவர்கள். இந்த குணத்தில் சங்ககால பெண்கள் முதல்..இன்றைய தலைமுறை பெண்கள் வரை ஒன்றுதான்.

அப்படி தன் தலைவனை நம்பிய சங்ககால பெண் பற்றிய பாடல் இது.கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் வரவில்லை.ஆனால் அதை நம்ப மறுக்கிறது பெண் உள்ளம்.அதனால் இயற்கையே கார்காலத்தை மாற்றிவிட்டது என உரைக்கிறாள்.

இனி பாடல்...

முல்லை திணை - பாடலாசிரியர் ஓதலாந்தையார்

வண்டு படத் ததைந்த, கொடி இணர் இடை இடுபு,
பொன் செய், புனை இழை, கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், ”கார்” எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே

                         - ஓதலாந்தையார்


வண்டு வந்து அமரும் பூங்கொத்தின் இடையிடையே கட்டிய பொன் இழையால் ஆன தலை அணியை சேர்த்து தலையில் சூடியிருக்கும் பெண் , கார்காலம் வந்தும், அதற்கான கொன்றைப் பூ பூத்து குலுங்கி இருந்தும், கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் வரவில்லையெனில், அவர் பொய் சொல்லமாட்டார்.. இன்னும் கார் காலம் வரவில்லை இது இயற்கையின் மாற்றம் (என்கிறாள்)

(அந்த அளவு இயற்கையின் பருவ காலங்களைவிட தலைவன் வார்த்தைகளை நம்புகிறாள்)

Monday, June 23, 2014

குறுந்தொகை - 20



மனைவியை விட்டு பிரிந்து வெளியூரில் குடும்ப பொருளாதாரத்திற்காக வேலை செய்யும் கணவர்மார்கள் இன்று ஏராளம். தனியாக என்னை விட்டு செல்ல வேண்டாம்..நானும் உங்களுடன் தான் இருப்பேன் என் அடம் பிடிக்கும் மனைவியரும் உண்டு.
இது போன்ற பிரிவுகள் இப்போது மட்டுமல்ல சங்க காலத்திலும் உண்டு.அப்படி பிரிந்து சென்ற கணவன் குறித்து தலைவி சொல்வது போல அமைந்த பாடல் இது.

இனி பாடல்-

பாலை திணை- ஆசிரியர் கோப்பெருஞ் சோழன்


அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,

பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,

உரவோர் உரவோர் ஆக!

மடவம் ஆக, மடந்தை, நாமே!

              -கோப்பெருஞ் சோழன்

உரை-

அருளும் அன்பும் ஒதுக்கி, த்னது துணையைவிட்டு, பொருள் ஈட்டும் முயற்சியில் பிரிந்து சென்றுள்ள தலைவன், அறிவுடையவனாயின், அதுபோல பிரிபவர் அறிவுடையவராகவே இருக்கட்டும்..ஆனால்..அப்பிரிவை துறக்க முடியாத நாம்(பெண்கள்) அறிவில்லாதவராகவே இருந்துவிட்டு போவோம் தோழியே!

(மனைவியை விட்டு பிரிந்து செல்வது அறிவுடையார் செயல் அல்ல)

Sunday, June 22, 2014

குறுந்தொகை - 19



மருதம் திணை - பாடலாசிரியர் பரணர்

(தலைவன் தன் நெஞ்சிற்குரைத்தது-
விலைமகளுடன் வாழ்ந்தவன் இல்லம் மீண்டான். தலைவி ஊடினாள். தலைவன் ஏதேதோ சொல்லி உணர்த்திப் பார்த்தான். அவளது ஊடல் தணிந்தபாடில்லை. இவள் என்னை விட்டு பிரிந்து விடுவாளோ? என வருந்துகிறான்)

பாடல்-

எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்

பூவில் வறுந்தலை போலப் புல்லென்

றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்

தெல்லுறு மௌவ னாறும்

பல்லிருங்கூந்தல் யாரளோ நமக்கே.

                        பரணர்



(எவ்வி என்பவன் பாணர்களைப் பேணும் சிறந்த வள்ளல். அவன் இறந்தபோது பாணர் மகளிர் பூச்சூடாமல் இருந்து தம் இரங்கலைத் தெரிவித்தனர். மனைவியை அடையமுடியாத கணவன் நெஞ்சம் எவ்வியை இழந்த பாணர் நெஞ்சம் போலக் கலங்கிற்றாம்)


செய்யுள் உரை -


பாணர்களைப் பேணும் எவ்வியை இழந்ததும் தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்க பூச்சூட மறுத்த பெண்டிரைப் போல,என் நெஞ்சே!மனை எனும்மரத்தின் மீது படர்ந்த ஒளியை உடைய முல்லை மலர்கள் மணம் வீசுவதற்கிடமான கரிய கூந்தலை உடைய இவள், இனி எனக்கு உறவில்லாமல் போய் விடுவாளோ..(என தலைவன் வருந்துகிறான்)

Saturday, June 21, 2014

குறுந்தொகை - 18



குறிஞ்சித்திணை - பாடலாசிரியர் கபிலர்

(இரவுப் பொழுதில் தலைவனும் தலைவியும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள இடத்தில். தலைவியைச் சந்தித்துப் பிரியும் தலைவனிடம்,  தலைவியின் வருத்த நிலையைச் சொல்லி அவளை விரைந்து மணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகின்றாள் தோழி)

வேரல் வேலி வேர்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி
யார்அஃது அறிந்திசினோரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!

                         - கபிலர்



செய்யுள் உரை-

மூங்கில்களை வேலியாகக் கொண்ட,   வேரில் குலைகளையுடைய பலா மரங்கள் நிறைந்திருக்கும் மலைப்பக்கத்து நாடனே!  மலைச் சாரலில் வளரும் மரத்தின் சிறிய கொம்பில், பெரிய பழம் தொங்குவது போல,  இவளது உயிர் ஆகிய கொம்பு வலிமையற்றுச் சிறியதாய் உள்ளது;  ஆனால் இவளின் காமநோய் என்னும் பழமோ மிகவும் பெரியதாய் உள்ளது. இவ்வுண்மையை உன்னையன்றி வேறு யார் அறிவார்?


சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவது போல..தலைவியின் உயிர்  சிறிய கொம்பாம்(வலிமையில்லாததாம்).பெரிய பழம் போல காமநோய் உள்ளதாம்.உவமைகளை ரசிப்போமாக

Friday, June 20, 2014

குறுந்தொகை - 17



பாலைத் திணை - பாடலாசிரியர் பேரெயி முறுவலார்

மாவென மடலு மூர்ப பூவெனக்
   
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
   
மறுகி னார்க்கவும் படுப
   
பிறிது மாகுப காமங் காழ்க் கொளினே.

                        - பெரெயி முறுவலார்


(தலைவியிடம் சொல்லி அழைத்துவா என்று அவன் தோழியிடம் கூறும்போது தோழி மறுக்காமல் இருக்க இச் செய்தியைச் சொல்கிறான். அழைத்துவராவிட்டால் மடலேறுதல் ஊர்வழக்கம் என்று சொல்லி அச்சுறுத்துகிறான்.)

உரை-
காமநோயானது முத்ர்வுற்றால், பனைமடலையும் ,குதிரை எனக் கொண்டு ஆடவர் அதில் ஏறுவர்.குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையையும் அடையாள மாலையைப் போல தலையில் அணிந்து கொள்வர்.வீதியில் இதைக் காணும் பெரியோர் அவனுக்கு அவளை மணம் முடிக்குமாறு அவள் பெற்றோரிடம் கூறுவர்.

(மடலேறுதல்; மடல் என்பது இங்குப் பனைமட்டையைக் குறிக்கும். பனைமட்டைகள் கறுக்குகள் கொண்டவை. பல்லுப் பலாக இருக்கும் அந்தக் கறுக்குகள் உடம்பில் படும்போது கிழித்து இரத்தம் வரும். இந்தப் பனைமட்டைகளால் குதிரை உருவம் செய்வர். அதில் தலைவன் ஏறிக்கொள்வான். தோழர் குதிரையை இழுத்துக்கண்டு தலைவி வாழும் ஊரில் தெருத்தெருவாகச் செல்வர். தலைவன் தான் விரும்பும் தலைவியின் பெயர் எழுதிய ஓவியம் ஒன்றை வைத்திருப்பான். அதனைப் பார்த்த ஊர்மக்கள் தலைவன் தலைவி உறவைப் பற்றிப் பேசுவர். அவனுக்கு அவளை மணம் முடிக்குமாறு அவளது பெற்றோரிடம் கூறுவர்.

Thursday, June 19, 2014

குறுந்தொகை -16



பாலைத் திணை - பாடலாசிரியர் பெருங்கடுங்கோ

தோழி கூற்று
(பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘அவர் நம்மை நினைப்பாரோ, நினையாரோ’என்று கருதிக் கவலையுற்ற தலைவியை நோக்கி, ‘‘அவர் சென்ற பாலை நிலத்தில் ஆண் பல்லி பெண் பல்லியை அழைத்தலைக் கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்’’என்று தோழி கூறி ஆறுதல் அளித்தது)

செய்யுள்-

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்
   
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
   
உகிர் நுதி புரட்டு மோசை போலச்
   
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்

அங்காற் கள்ளியங் காடிறந் தோரே.

                        பெருங்கடுங்கோ

 உரை -

கள்வர்கள் .இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை, நகனியிலே புரட்டும் ஒலியைப்போல், செம்மையான கால்களை உடைய ஆண் பல்லியானது, தன் துணையாகிய பெண் பல்லியை அழைத்தற்கு இடமாகிய கள்ளிகளை உடைய பாலையைக் கடந்து பொருள் ஈட்ட சென்ற தலைவன் உன்னை நினைக்காமல் இருப்பாரா? திரும்பி வருவார் (என ஆறுதல் சொல்கிறாள் தோழி)_

(பொருள் ஈட்ட தலைவன் சென்றுள்ளான்..அவளில்லா நிலையில் தலைவன் அவளை நினைப்பாரோ..மாட்டாரோ என கலையுற்றவளிடம்...ஆண் பல்லி பெண்பல்லியை அழைக்கும் ஒலி கேட்டு உன்னை நினைத்து உடன் திரும்பி வருவார் (என்கிறாள் தோழி)
.

Wednesday, June 18, 2014

குறுந்தொகை - 15



பாலை திணை  - பாடியவர் ஔவையார்

பாடல் -

பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

                          -ஔவையார்
உரை-

ஆண்களின் காலில் அணியும் அணியான கழல் அணிந்த, சிவந்த இலை போன்ற , வெள்ளி போன்ற வேலையும் உடைய தலைவனுடன், வரிசையாய் முன் கையில் வளையல்கள் அணிந்த பருவப்பெண்ணின் நட்பு.(எப்படிப்பட்டதாம் தெய்யுமா?)

பறைகள் ஒலிக்கவும் சங்குகள் ஊதவும், பழைய முதிய ஆல மரத்தடியில் கூடிய பொதுமன்றத்தில் நான்கு
பேர் கூடியிருக்கையில் கோசர்கள் உரைத்த சூளுரையை நிறைவேற்றியது  போன்றதாம்.


(மோகூர் பழையன் என்பானுக்கு மோரியர்களுடனான போரில் உதவுவோம் என உறுதி கொடுத்து கோசர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றினார்களாம்  - அதுவே சொல்லப்பட்டுள்ளது)

உவமை இல்லாத குறுந்தொகை பாடல்களே கிடையாது.

Tuesday, June 17, 2014

குறுந்தொகை - 14



குறிஞ்சித் திணை- ஆசிரியர்- தொல் கபிலர்

(தலைவன் சொல்வதுபோல அமைந்த பாடல்)

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்...இப்பாடலில் தலைவன் தனக்கு அமைந்த மனைவி குறித்து நாணுகிறானாம்...அதற்கு என்ன காரணம்? பாடலாசிரியர் என்ன் அசொல்கிறார்...பார்ப்போம்.. 

 அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
 வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சில் மொழி அறிவையைப்
 பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு
 அறிகதில் அம்ம இவ் ஊரே மறுகில்,
 நல்லோள் கணவன் இவன் எனப்
 பல்லோர் கூற, யாஅம் நாணுக சிறிதே.
                                 
                                -தொல் கபிலர்
    

பாடல் உரை-

சிவந்த நாக்கு, பயப்படும்படியான அழகிய சிறிய பற்கள், குறைந்த பேச்சு இவை அமைந்த இந்தப் பெண்ணை நான் அடைந்த போது, இந்த ஊரே என்னை இந்த நல்லவன்தான் இவள் கணவன் என்னும் போது கொஞ்சம் வெட்கம் ஏற்படுகிறது

Monday, June 16, 2014

குறுந்தொகை- 13




குறிஞ்சித் திணை - பாடலாசிரியர்  கபிலர்

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்
பைத லொருகலை சேக்கு நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை யார்ந்தநங் குவளையங் கண்ணே.

                               =கபிலர்

தலைவி, ,தலைவன் பிரிந்தமையைத் தோழியிடம் கூறல்

உரை=

அழுக்கு நீங்கக் குளிப்பாட்டிவிட்ட யானையைப் போல இணைந்திருக்கும் பெரிய மலைப்பாறை மழையில் நனைந்திருக்கையில்,அதில் கலைமான் ஏறி படுத்திருக்கும்.நாட்டுக்காரன் அவன்.அவன் அவளிடம் நன்றாக பசப்பு மொழிகளைப் பேசிவிட்டு பிரிந்து சென்றான்.அதை எண்ணுகையில் அவளது கண்கள் ஒளி மங்கிப் பசலை பாய்ந்து அவனைத் தேடுகின்றன.(என்கிறாள் தலைவி)

Sunday, June 15, 2014

குறுந்தொகை - 12



செய்யுள் ஆசிரியர்  - ஓதலாந்தையார் (பாலைத் திணை)

(தலைவன் வெளியூர் சென்றுள்ளான்..அவன் போகும் பாதை குறித்து , பயணம் குறித்து தலைவி கவலைப் படுகிறாளாம்.ஆனால் அவள் தலைவனை நினைத்து வருந்துவதாக ஊர் கூறுவது பேதமையாம்.தோழியிடம் இதை தலைவி சொல்கிறாளாம்)

இனி செய்யுள்  -


   
  எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
   
  உலைக்க லன்ன பாறை யேறிக்
   
  கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்
   
 கவலைத் தென்பவவர் சென்ற வாறே

 அதுமற் றவலங் கொள்ளாது
   
 நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.

                            -ஓதலாந்தையார்.


தலைவன் சென்ற வழி, எறும்பு புற்றுகள் போல சின்ன சின்னதாய் இருக்கும் சுனைகள்.உலையில் வைத்த கல் போல வெயிலில் கொதிக்கும் பாறை. அதில் ஏறி செல்ல வேண்டும்.கொடிய வில்லை ஏந்திய அம்பு எய்பவர்கள் வழியில் உண்டு.
அதனால் என் கவலை அவர் சென்ற வழி குறித்துத்தான்.அதை உணராது, உதாசீனமாக தலைவனை பிரிந்ததால் வருந்துவதாக ஊர் என்னன்னவோ சொல்லி கஷ்டத்தைத் தருகிறது.

(எறுப்பு புற்று போல சுனைகள்
உலையில் வைத்த கல் போல பாறை 
உவமைகளை ரசியுங்கள்)

Saturday, June 14, 2014

குறுந்தொகை - 11

(தலைவன் அருகில் இல்லை.வேறு மொழி வழங்கும் வடநாட்டில் அ வன் இருப்பினும் அவன் இருக்கும் இடத்திலேயே நான் இருக்க விரும்புகிறேன்....என தன் நெஞ்சினிடத்தில் உரைப்பதுபோல தோழியிடம் தலைவி கூறுகிறாள்)



 பாடியவர்:  மாமூலனார் (பாலைத் திணை)



கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்

பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,

ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே

எழு, இனி வாழி, என் நெஞ்சே! -  முனாது

குல்லைக்கண்ணி வடுகர் முனையது

வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,

வழிபடல் சூழ்ந்திசின், அவருடைய நாட்டே!

                                                  _மாமூலனார்

செய்யுள் உரை-

முன்கையில் அணிந்துள்ள வளையல்கள் அவிழ்ந்து விழுமாறு ஒவ்வொரு நாளும் உறங்காமல்,அழுத கண்களுடன் புலம்பி,இவ்விடத்திலேயே வாழ்ந்து வருவதில் இருந்து இப்போதே தப்புவோம் .அதற்காக இப்போதே கிளம்பச் சொல்லும் என் நெஞ்சே நீ வாழ்க.குல்லை மலரை தலையில் சூடிய வடுகரின் பகைப்புலதே வலிய வேலினை உடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டுக்கு அப்பால் வேற்று  மொழி  புழங்கும் நாட்டில் அவர் இருப்பினும்.

குல்லை மலர் வெண்மையானது. கோடைக்காலத்தில் பூக்கும். ஆண்களும் பெண்களும் இதனைத் தனியாகக் கட்டியும் வேறு சில மலர்களோடு சேர்த்துக் கட்டிடியும் அணிந்துகொள்வர் என்கின்றன சங்ககாலப் பாடல்கள்)

 

Thursday, June 12, 2014

குறுந்தொகை - 10




மருதம் திணை...- பாடலாசிரியர்- ஓரம்போகியர்


யாய் ஆகியளே விழவு முதலாட்டி;

பயறு போல் இணர பைந் தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்

காஞ்சி ஊரன் கொடுமை

கரந்தனள் ஆகலின், நாணிய வருமே.

                      - ஓரம்போகியர்


( தோழி  நேர்மையற்ற தலைவன் பற்றி உரைத்தது).
                 
                                 
தலைவனுக்கு சந்தோஷத்தையும், செல்வத்தையும் கொணர்ந்த தலைவி, உழவர்கள் தங்கள் வயலில் விளைந்த பயற்றின் கொத்தைப் போன்ற பூங்கொத்தில் உள்ளன வாகிய பசிய பூந்தாதுக்கள், தங்கள் மேலே படும்படி உழவர்கள் வளைத்த கமழ்கின்ற பூக்களை உடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட, காஞ்சி  ஊரைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமையை பிறரிடம் உரைத்தால் அவனுக்கு அவமானம் என மறைத்தாள்.(மறைமுகமாக தலைவன் பரத்தையிடம் செல்வதையே கொடுமை என சொல்லப்பட்டதாக கொள்ள வேண்டும்)

Wednesday, June 11, 2014

குறுந்தொகை _ ஒன்பதாம் பாடல்



செய்யுள் ஆசிரியர் - கயமனார் (நெய்தல் திணை)

யாய் ஆகியளே மாஅயோளே-

மடை மாண் செப்பில் தமிய வைகிய

பெய்யாப் பூவின் மெய் சாயினளே;

பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல்

இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும்

கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்

தண்ணம் துறைவன் கொடுமை

நம் முன் நாணிக் கரப்பாடும்மே.

                 - கயமனார்
(தோழி, நேர்மையற்ற தலைவனிடம் தலைவி பற்றி உரைத்தது)

மாந்தளிர் நிறத்தினளான தலைவி, அலங்கார  பூச்சடியில். வைத்துள்ள யாரும் சூடா பூ போல மெலிந்து வாடினாள்.பசுமை இலைகள் உள்ள தண்டுடைய நெய்தல் மலர்கள்,பல மீன் இனங்கள் உடைய பெரிய உப்பங்கழியின் அலைநீர் பெருகுகையில் குளத்தில் மூழ்கும் மகளிரின் கண்கள் போல தோன்றும் குளிர்ந்த நீர்த்துறைக்கு உரிய தலைவனின் கொடுஞ்செயலை மற்றவரிடம் சொல்லாமல் மறைத்துவைப்பாள்.

Tuesday, June 10, 2014

குறுந்தொகை - எட்டாம் பாடல்



விலைமகள் ஒருத்தியிடம் சென்று வந்தவனைக் குறித்து..அவள் இகழ்ச்சியாகக் கூறுகிறாள்..

செய்யுள் ஆசிரியர் - ஆலங்குடி வங்கனார். _(மருதம் திணை)

செய்யுள்_

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம் இல் பெருமொழி கூறி, தம் இல்,

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல,

மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.

             - ஆலங்குடி வங்கனார்


செய்யுள் கூற வருவது_

(பரத்தை ஒருவள் தன்னை நாடி வருபவன் வீரம் பற்றி உரைப்பது)

செய்யுள் உரை=

மாம்பழங்கள் விளையும் நிலத்தையும், ஏரியில் வலை மீன்கள் பிடித்து உண்ணும் மக்களையும் கொண்ட ஊரைச் சேர்ந்த அவன், என்னிடம் பிரமாதமாக பேசுவான்,ஆனால், தன் வீட்டி.லோ, தாய் சொல்படி கேட்டு, பொம்மலாட்டத்த்தில், கையையும், காலையும் ஆட்டும் பொம்மையைப் போன்றவன்.

Monday, June 9, 2014

குறுந்தொகை - ஏழாம் பாடல்



(பாலைத் திணை)



வில்லோன் காலன கழலே; தொடியோள்

மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்

யார்கொல்? அளியர்தாமே-ஆரியர்

கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,

வாகை வெண் நெற்று ஒலிக்கும்

வேய் பயில் அழுவம் முன்னியோரே.


எழுதியவர் - பெரும்பதுமனார்,
(தலைவனும் தலைவியும் தமரின் நீங்கி உடன்போன காலத்தில் எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்அவ்விருவரும்க்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறியது.)


வாகை மரங்களின் முதிர்ந்த காய்கள் நிறைந்த பாலைவனப் பகுதி ,அதில் நடக்கையில் அந்த முதிர்ந்த காய்கள் (நெற்றுகள்)உடைந்து சபதம் எழுப்புகின்றன.அந்த ஓசையானது கழைக் கூத்தாடி, கயிற்றில் நடக்கையில் அடிக்கும் பறையைப் போன்று உள்ளது.அப்பகுதியில் தலைவி, தலைவனுடன் நடக்கிறாள்.ஆனால் அவர்களுக்கு மணமாகவில்லை என்பதை தலைவியின் பெற்றோர் அணிவித்த காற்சிலம்பை அவள் கழற்றாமல் இருப்பதிலிருந்து தெரிகிறது.தலைவனோ வில்லை உடைய வீரக்கழல் அணிந்தவன்.தலைவி மென்மையான அடி வைத்து நடப்பவள்.அவளால் இப்பகுதியில் எப்படி நடந்து செல்ல முடியும் என அவர்களைப் பார்க்கும் நல்லோர், இவர்கள் யாரோ என இரங்குகின்றனர்.
(பின் குறிப்பு:
மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது 'சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்;)

Sunday, June 8, 2014

குறுந்தொகை - ஆறாம் பாடல்


தலைவன், பரிசப் பொருளை ஈட்ட தலைவியை பிரிந்து செல்கிறான்.இரவு நேரம்.ஊரே உறங்குகிறது.தோழியும் உறங்குகிறாள். ஆனால்..தலைவனை எண்ணி தலைவி சற்றும் கண் அயராது இருக்கிறாள்.அதை அடுத்த நாள் தோழியிடம் உரைப்பது போல பாடல் அமைந்துள்ளது.. இப்பாடலை எழுதியவர் பதுமனார்.

இனி அச் செய்யுள். (நெய்தல் திணை)
   
நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
   
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
   
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
   
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

உரை -

பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த இடத்து ஆற்றாளாகிய தலைவி,நள்ளிரவில் உலகம் முழுதும் உறங்க நான் ஒருத்தி மட்டும் உறங்கவில்லை என தோழி உறங்கியதையும் சுட்டிக்காட்டி தோழியிடம் உரைக்கிறாள். 

Saturday, June 7, 2014

குறுந்தொகை -ஐந்தாம் பாடல்



நெய்தல் திணை

குறுந்தொகை ஐந்தாம் பாடலை எழுதியவர் நரிவெரூ உத்தலையார்


அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.

தலைவனைப் பிரிந்த தோழியை காம நோய் வாட்டுகிறதாம்.அதைச் சொல்லும்போதும் அவனது நாட்டௌச் சிறப்பைச் சொல்லி சொல்லுகிறாள்.

புன்னை மரங்கள் நிறைந்த இடம்.நீர்ப்பரப்பான பிரதேசம்.அதனால் நாரைகள் அலைமோதும் இடம்.கரையை மோதும் அலைகள்.அந்த அலை அடிக்கையில் அதனால் சிறப்புறும் நீர்ப்பரப்பு நிறைந்த கடற்கரையாம்.கற்பனையைப் பாருங்கள்.

இனி செய்யுளுக்கான பொருள்

நாரைகள் உறங்கும் இடமாகிய இனிய நிழலையுடைய புன்னை மரங்களை கொண்டவனும், கரையை அலைகள்மோதும்போது உடைகின்ற நீரால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற கண்ணுக்கு இனிதாகியநீர்ப்பரப்பையுடைய மெல்லிய கடற்கரையையுடைய எம் தலைவன் பிரிந்ததால் பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற என்கண்கள் காம நோயால் வாடுகிறது (என் தோழியே )

குருகு-நாரை

Friday, June 6, 2014

குறுந்தொகை - நான்காம் பாடல்




காமஞ்சேர் குளத்தார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.  குறுந்தொகை 4 எண் கொண்ட பாடல் இவரது ஒரே ஒரு பாடல்.. பாடலால் பெயர் பெற்ற புலவர்களில் இவரும் ஒருவர்.

கண்ணைக் காமக் கண்ணீர் நிறைந்த குளமாக்கிக் காட்டிய புதுமையால் இவர் இப் பெயர் பெற்றார்.

நான் கண்ணீருடன் வாழவேண்டும் என்பதற்காகவே எனது அன்புக்குரியவர் அமைந்துள்ளார்.ஆனால்...நான் இல்லாமல் அவருக்கு அப்படி அமையும் என அவர் நினைக்கவில்லை..என்று..காதலனை எண்ணி வருந்துகிறாளாம் காதலி.

சுருங்கச் சொல்லின்....தான் அவன் மீது கொண்ட அன்பை..அவன் தன் மீது கொள்ளவில்லை என எண்ணுகிறாள்.

பாடல்[---
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே

பாடல் செய்தி-

கண் ஒரு குளம். அதில் காமக்கண்ணீர் நிறைந்திருக்கிறது.  கண்ணில் தேங்கும் காமக் கண்ணீர் கண் குளத்துக் கரையாகிய இமையைத் தீய்த்துச் சுட்டெரிக்கும்.(சாதாரணமாக குளத்து நீர் கரையை செம்மைப் படுத்தும்.ஆனால்...காமக்கண்ணீரோ இமை எனும் கரையை சுட்டெரிக்கும்)

இந்தக் கண்ணீரொடு வாழ்வதற்காகவே என் காதலர் எனக்கு அமைந்துள்ளார். ஆனால் அவருக்கு அந்தக் காமக்கண்ணீர்க் குளம் அமையவில்லை.

நெஞ்சே! நொந்து தொலைந்து போ!
நெஞ்சே! நொந்து தொலைந்து போ.
நெஞ்சே! நொந்து தொலைந்து போ.!

Thursday, June 5, 2014

குறுந்தொகை --- மூன்றாம் பாடல்




குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை எவ்வளவு அழகாக வடிவப்படுத்திக் காட்டுகிறார் என்று பாருங்கள்,

(குறிஞ்சி)

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே - சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

காதலைப் பாடாத இலக்கியங்கள் இல்லை.இன்றுவரை காதல் பல வடிவெடுத்து பாடப்பட்டுள்ளது.ஆனால்..அதை வடிவப்படுத்த முடியுமா? முடியும் என்கிறார் இப்பாடலை எழுதியுள்ள புலவர்.

தலைவியிடம் தோழி சீண்டிப் பார்க்க எண்ணி..அவனைப் பற்றி இழிவாகக் கூறுகிறாளாம்.அதனை ஏற்காத தலைவி தங்கள் காதல் எத்தகையது எனக் கூறுகிறாள்.அதுவே இப்பாடல்.

பாடலின் பொருள்

குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு, மலைப்பகுதியில் பெரிய தேனை வண்டுகள் தொகுத்தற்கு இடனாகிய நாட்டையுடைய தலைவனோடு நான் கொண்ட நட்பு,
சொல்லப்புகுங்கால் நிலத்தைவிட அகலமானது,
நினையப் புகுங்கால் வானத்தைவிட உயரமானது,
உள்புகுந்து எல்லை காணப்புகுங்கால் கடலைவிட ஆழமானது. என்பதே இப்பாடலின் பொருளாகும்.

சுருங்கச் சொல்லின்.....

காதலின் அகலம் நிலத்தின் அளவு.
காதலின் உயரம் வானத்தின் அளவு.
காதலின் ஆழம் கடலின் அளவு.
ஆகுமாம்.

குறுந்தொகை ---- இரண்டாம் பாடல்



'கொங்குதேர் வாழ்க்கை' என்றதும் நமக்கு நினைவில் வருபவர்கள் நாகேஷூம், சிவாஜியும் தான்..

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா..இல்லையா என்ற சந்தேகம் மன்னனுக்குவர..தன் மனதில் உள்ள சந்தேகத்தை போக்குபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என மன்னன் அறிவிக்க..ஏழ்மையில் இருந்த தருமி என்னும் புலவன்..அது தனக்கில்லை என புலம்ப..சிவ பெருமான் வந்து..பாட்டு எழுதித்தர..அதை தருமி கொண்டுவந்து தான் எழுதியது என மன்னனிடம் தர..அதை எழுதியவர் அவர் இல்லை என தருமி எழுதியவரை வரச் சொல்ல..சிவ பெருமான் நேரில் வந்து..'தன் பாட்டில் குற்றம் கண்டு பிடித்தது யார்?' என வினவ..நக்கீரன் தான் தான் என்றும்..'நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே' என உரைக்க..பின் நடந்ததை நாம் அறிவோம்..

அந்த 'கொங்குதேர் வாழ்க்கை' பாடல் குறுந்தொகையில் வருகிறது.அதை எழுதியவர் ,'இறையனார்' என்று போடப்பட்டிருக்கிறது.இனி அப்பாடல்...

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

இதற்கான அர்த்தம்

பூக்களை தேர்ந்து ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே சிறையாதலையும் இயல்பாய் கொண்ட வண்டே..நீ சொல்வாயாக...நீ எனது நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுக...மயிலின் மெல்லிய இயல்பும்..செறிவான பற்களும்..எழு பிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ?

(இல்லை ..என அர்த்தம்)

Wednesday, June 4, 2014

குறுந்தொகை.......'முதல் பாடல்



குறிஞ்சி - தோழி தலைவனிடம் கூறுதல்


செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

(தோழி கையுறை மறுத்தது. - இதை எழுதியவர் -திப்புத்தோளார்)

குறிஞ்சித் திணை...(மலையும், மலை சார் இடமும்)


(குறிப்பு-
தலைவியை அணுக முதலில் அவளது தோழியை தன் வசம் கொணர்தல் அவசியம் என உணர்ந்த தலைவன்,  தோழியிடம் செங்காந்தள் பூவைக் கொடுத்து, தலைவியைக் காணமுடியாத தனது மனக்குறையைத் தெரிவிக்கையில், தோழியோ, இங்கு மலையில்  மலையைக்காட்டிலும் காந்தள் பூக்கள் அதிகம் உள்ளன என்கிறாளாம்).இதை குறிப்பில் சொன்னாலும்...

செய்யுளின் உரை:-

போர்க்களம் குருதியால் சிவக்கும்படி, பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/ வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களை உடைய யானையையும், இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையிலே செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்து உள்ளன.

என்பதே ஆகும்.

Tuesday, June 3, 2014

குறுந்தொகை......




தமிழ்க்கடலில் மூழ்கினால் கிடைக்கும் முத்துகள் சொல்லிடங்கா.
கற்றது கை மண்ணளவு என்பர்...
அக் கைமண்ணளவு இல்லையெனினும்...நான் அறிந்தவற்றை....நான் படித்ததை...நான் கேட்டதைக் கொண்டு குறுந்தொகைப் பாடல்களை அனைவரும் ரசிக்கும் வண்ணம்
இலக்கியச் சுவையை சுவைக்கும் வண்ணம் எளிமைப்படுத்தி எழுத இருக்கிறேன்...

குறுந்தொகை ....................

நான்கு முதல் எட்டு வரையிலான அடிகளைக் கொண்ட ..கடவுள் வாழ்த்து நீங்களாக 400 பாடல்களைக் கொண்டது குறுந்தொகை.இதில் 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல்களைப் பாடியவர்கள் யாரெனத் தெரியவில்லை.கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பெருந்தேவனார்.கடவுள் வாழ்த்து..முருகப்பெருமானைக் குறித்து..அதைப் பார்ப்போம்..

தாமரை புரையுங் காமர் சேவடிப்
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே

இதற்கு அர்த்தம்..

தாமரை மலரைப் போன்ற சிவந்த காலடிகள்.பவழம் போல சிவந்த உடல்..உடலிலிருந்து பரவித் திகழும் ஒளி..குன்றிமணி போல சிவந்த ஆடை..குன்றை இரண்டாய் பிளக்குமாறு நெடிய வேல்படை.இவற்றுடன் சேவல் சின்னம் பொறித்த கொடியைக் கொண்டவனாகிய முருகப்பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இனிய நாட்களை பெற்று விளங்குகிறது.

அடுத்த பதிவில் அடுத்த பாடலைப் பார்ப்போம்..