Friday, May 24, 2013

லட்சியத்தை அடைவது எப்படி...



அவனுக்கு பறவைகள் என்றால் பிடிக்கும்.,
தினமும் காலை ஜன்னலைத் திறந்தால்..அவனுக்காக காத்திருக்கும் புறாக்கள்..
அவனைக் கண்ட சந்தோஷத்தில்..கா கா என கூவி தன் இனத்தை அழைத்து அவனைக் காணச்சொல்லும் காகங்கள்.,
சில கிளிகள்..மரங்கொத்திகள்,குருவிகள்..
சுருங்கச் சொன்னால்..அவன் ஒரு பறவைகளின் சரணாலயமாகவே திகழ்ந்தான்.
அவைகள் அவன் கொடுக்கும் தானியங்களையும்,பழங்களையும்...அவன் பக்கத்தில் வந்து உண்ணும்.

ஒருநாள் அவன் மகன் 'அப்பா..எனக்கு விளையாட ஒரு கிளி பிடித்துத் தாயேன்' என்றான்.

மறுநாள் அவன் லாவகமாக ஒரு கிளியைப் பிடித்து மகனிடம் கொடுத்தான்..அவனை அக்கிளி பயந்தபடி பார்த்தது.மற்ற பறவைகள் பறந்து செல்ல கிளியின் கண்களில் ஒரு ஏக்கம்.
மறுநாள் காலை..ஜன்னலைத்திறந்தான்...
பறவைகளை காணவில்லை.
மீண்டும் அவை வரவேயில்லை.
மனதில் இரக்கம் இருந்தவரை பறவைகளின் சரணாலயமாக திகழ்ந்தவன்..இரக்க குணத்தை விட்டதும்...தண்ணீர் அற்ற இடம் என எண்ணி அவை வரவில்லையோ?

பிறர்க்கு தொல்லை கொடுக்கும் போது..அவருக்கு வேண்டியர்களால் வெறுக்கப்படுகிறோம்.,
ஒரு லட்சிய பாதையில்..வேறு எண்ணங்கள் குறுக்கிட்டால்..நாம் லட்சியத்தை அடையும் காலம் நம்மை விட்டு அகன்றுக் கொண்டே இருக்கும்.


ஸ்ரீசாந்த் எம்.பி.. ஆகிறார்..



இது என்னப்பா புது செய்தி என்று பார்க்கறீர்களா..

ஆமாங்க..ஸ்பாட் ஃபிக்சிங்க் என்று சொல்லி அவரை கைது பண்ணினாலும்...அவர் இனி தன் வாழ்நாள் முழுதும் கிரிக்கெட் விளையாட முடியாது என லைஃப் டைம் தடையை கிரிக்கெட் வாரியம் அளித்தாலும்...

இந்த ஊழல்களெல்லாம் நம்ம மக்களைப் பொறுத்தவரை ஜுஜுபி...அவங்க எவ்வளவு லட்சக்கணக்கில..தப்பு..தப்பு..லட்சக்கணக்கான கோடி ஊழல் பற்றியெல்லாம் பார்த்திருக்காங்க,,

மக்களை ஏமாத்தினால்தாங்க அரசியல்ல பிரகாசிக்க முடியும்.

வேணும்னா பாருங்க..கூடிய சீக்கிரம்..ஸ்ரீசாந்த் எம்.பி., ஆகிடுவார்.

இதுக்கு முன்னால இப்படித்தானே மேட்ச் ஃபிக்சிங்க்குன்னு வாழ்நாள் தடை அறிவிக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரரை..காங்கிரஸ் எம்.பி., தேர்தல்ல சீட் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினராக்கியது.

Wednesday, May 22, 2013

'பொன்னியின் செல்வன்' குறுந்தகடு வெளியீட்டு விழா..




எனது நண்பர் திரு பாம்பே கண்ணன், இதற்கு முன் அப்புசாமி கதைகள், சிவகாமியின் சபதம் போன்ற ஒலிப்புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

அவரது அண்மைய முயற்சி, என்றும் ஒளி குன்றா..'கல்கி' அவர்களின் ஒலிப்புத்தகம் (audio Cd). ஆம்..இனி கல்கியின் சாகாவரம் பெற்ற பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் நம் முன் ஒலி வடிவில் வரப்போகிறார்கள்.அறுபதிற்கும் மேற்பட்ட கலைஞர்கள், 15 முத்தான பாடல்களென 78 மணி நேர ஒலிப்புத்தகம் மூன்று குறுந்தகடுகளாக வெளி வருகிறது.இதை தயாரித்துள்ளவர் சி.கே.வெங்கட்ராமன்.இயக்கம் பாம்பே கண்ணன்.

நல்லி ஆதரவில், பிரம்ம கான சபா இந்த விழாவை நடத்துகிறது. 14-6-13 அன்று மாலை 6 மணிக்கு சென்னை நாரத கான சபாவில் குறுந்தகடுகள் வெளியாகின்றன.

தவிர்த்து, அன்று அடுத்த நிகழ்ச்சியாக சிறப்பு பட்டி மன்றமும் நடக்க உள்ளது.

பேராசிரியர் வா.வே.சு. தலைமையில்...திருப்பூர் கிருஷ்ணன், வழக்கறிஞர் சுமதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.தலைப்பு..
'அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் வெற்றிக்கு மிகுதியும் காரணமாய் இருந்தது..கற்பனை வளமா...கருத்துப் பொலிவா..

அனுமதி இலவசம்.

நண்பர்கள் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பிக்கவும்.

Tuesday, May 21, 2013

படித்ததில் பிடித்தது...





.1.அழகு குணத்தால் அணி பெறுகிறது
இனம் சீலத்தால் அணி பெறுகிறது
கல்வி பயன்படுத்துவதால் அணி பெறுகிறது
செல்வம் அனுபவிக்கப் படுவதால் அணி பெறுகிறது

2.பணம் இல்லாததால் ஒருவன் தாழ்வடைவதில்லை.
செல்வந்தர்கள் எல்லாம் உயர்ந்தோர் என்பதுமில்லை
கல்வி எனும் ரத்தினம் இல்லாதவன் எல்லாப் பொருளிலும் தாழ்ந்தவனே
என்பதில் ஐயம் இல்லை.

3.பயம் நம் எதிரே வராத வரைக்கும்
பயந்துக்கொண்டே இரு.அது வந்து விட்டால் கண்டதுமே
அதனை சந்தேகப்படாமல் அடித்து தொலைத்துவிடு.

4.மன அமைதியைவிட உயர்ந்த தவம் வேறில்லை.மகிழ்ச்சியை விட
உயர்ந்த இன்பம் வேறீல்லை.ஆசையைவிட உயர்ந்த நோய் ஒன்றுமில்லை.
கருணையைவிட உயர்ந்த தருமம் வேறில்லை

5.வெட்டி நறுக்கப்பட்டாலும் சந்தனமரம் நறுமணம் இழக்காது.முதுமை எய்தினும் கூட
யானை தன் விளையாட்டை விடாது.ஆலையில் இட்டுப் பிழிந்தாலும் கரும்பு
இனிமையை விடாது.நற்குடிப் பிறந்தோர் வறுமையால் கெட்டழிந்தாலும்
ஒழுக்க குணங்களைக் கைவிட மாட்டார்கள்.

Sunday, May 19, 2013

வாய் விட்டு சிரிங்க...




1.உன்னை நம்பி வநதவனை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வந்தது?
நம்பி வந்தவனைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவனை என்ன செய்ய முடியும்.

2.நம்ம தலைவரை நான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவிற்கு கூப்பிட்டது தப்பாப் போச்சு
ஏன்? என்ன ஆச்சு
என்னய்யா ஏதோ நூல் வெளியீடுன்னு சொல்லிட்டு கையிலே புத்தகம் ஒன்னைக் கொடுத்து
வெளியிடச் சொல்றியேன்னு கோபப்பட்டார்

3.தயாரிப்பாளர்-(கவர்ச்சி நடிகையிடம்)வயதான கிராமத்து கிழவியை மையமா வைச்சு ஒரு படம் எடுக்கிறோம்
யாருக்கும் எந்த மேக்கப்பும் கிடையாது..நீங்க நடிச்சா தத்ரூபமாயிருக்கும்.

4.உங்க ஆஃபீசிலே வேலை செய்யற சாஃப்ட்வேர் எஞ்சினீயர் தங்கம் உண்மையிலேயே பத்தரை மாற்று தங்கம் னு
எப்படி சொல்றே
உரசி பார்த்துட்டேனே

5. இன்னயிலேயிருந்து நம்ம கம்பனிலே உங்களை அப்பாயிண்ட் பண்றேன்..உங்களுக்கு எதாவது சந்தேகம்
இருந்தா கேளுங்க..
நான் VRS ல போகமுடியுமா...சார்

6.உன்னோட நண்பன் அண்டப்புளுகு ன்னு எப்படி சொல்ற
ஹாஸ்பிடல்லே ஆபரேஷன் தியேட்டர்ல புரஜக்டர் ஆபரேட்டராய் இருக்கேன் னு சொல்றான்


Thursday, May 16, 2013

யாகாவாராயினும்.....




என்னிடம் ஒரு குணமுண்டு..

அது வேடிக்கையாய் பேசுவது. நண்பர்களும் அவற்றை ரசிப்பதுண்டு.

உதாரணத்திற்கு, நண்பர் ஒருவர் தன் வீட்டில் செய்த இனிப்பு ஒன்றைக் கொடுத்தார்.நன்றாய் இருந்தது.நண்பர், 'எப்படி இருக்கிறது "என்றார். வழக்கமான நக்கல் தலைகாட்ட நான்,'நன்றாய் இருக்கிறது..ஆனால் சற்று உப்பு குறைவு' என்றேன்.சுற்றியிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.நண்பரின் முகமும் சுருங்கிவிட்டது.

மற்றொரு நண்பர் டிரட் மில் வாங்கியிருந்தார்.ஒருநாள் எங்கள் அனைவரையும் கூட்டிக் காட்டினார்.என்னால் காலையில் வாக் போக முடிவதில்லை.ஆகவே வீட்டிலேயே செய்திடுவேன் என்றார்.ஆனால்..அவர் அப்படி செய்யவில்லை.ஒரு சமயம் ஊரிலிருந்து வந்த அவர் உறவினர், 'டிரட் மில்லில் தினம் நடக்கிறாயா?' என்றார்.நான் சும்மா இருக்கக் கூடாது.அதுதான் நம் பழக்கம் இல்லையே , அதனால்' உங்களுக்குத் தெரியாதா? இந்த டிரட் மில் அதற்காக வாங்கவில்லை.அது வாங்கிய கடையில் இடமில்லாததால்..இதை இங்கே கடைக்காரர் போட்டு வைத்துள்ளார்.' என்றேன்.நண்பர் நெளிந்தார்.

இப்படி எனது நா காக்காததால்..பல நண்பர்களை இக்கட்டில் ஆழ்த்தியுள்ளேன்..நகைச்சுவை என்ற பெயரில்.

ஒருநாள் ஒருவரிடம் இப்படி செய்யப்போக அவர் மிகவும் வருந்தினார்.அப்போதுதான் எனக்கு தெரிந்தது.இது போல எவ்வளவு நண்பர்களை வருத்தப்பட வைத்திருக்கிறேன் என்று.

நாம் நகைச்சுவை என்று நினைத்து சொல்வது, பிறரை வருத்தப்பட வைத்துள்ளதே ..அது கூட எனக்குத் தெரியவில்லையே! என.வருந்தினேன்.

இனி யாரிடமும் இப்படி நடக்கக்கூடாது என தீர்மானித்து விட்டேன்.

சமீபத்தில் ஒரு நண்பர், 'வர வர உங்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லை' என்றார்..கீழே வாழைப்பழத்தோல் வழுக்கி(!!) விழுந்தவரைக் கண்டு நான் நகைக்காததால்..பிறர் துயர் நமக்கு நகைச்சுவை என அவர் எண்ணியதால்.

பிறர் புண்பட பேசுவது, பிறர் துயர் கண்டு நகைப்பது, பிறர் செயலை எள்ளி நகையாடுவது போன்றவை நகைச்சுவை என்றால்..அந்த உணர்வு என்னை விட்டு சாகட்டும்.

யாரையும் புண் படுத்தாத நகைச்சுவை உணர்வு  நம் அனைவரிடமும் வளரட்டும்.

Tuesday, May 14, 2013

வாய் விட்டு சிரிங்க....




1.தயாரிப்பாளர்- தூக்கம் வரலேன்னா நம்ம படத்தைப் பார்க்கலாம்னு பத்திரிகைல விமரிசனம் எழுதி இருக்காங்க..
இயக்குநர்-  அதனால்தான் படத்துக்கு ஆஃபீஸ்னு பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.

2.தயாரிப்பாளர் (கதாசிரியரிடம்) என்னங்க..உங்க கதையில ஒரே துப்பாக்கி சத்தம்..கொலை..அப்படி..இப்படின்னு இருக்கு..மக்கள் சட்டம் என்ன செய்யுதுன்னு கேட்கமாட்டாங்களா?
கதாசிரியர்- அதற்கும்..ஒரு ஐடியா வைச்சிருக்கேன்..கதாநாயகன் எப்பவும் கையில ஒரு மர சட்டம் வைச்சிருப்பார்..அதனால சட்டம் அவர் கையிலன்னு சொல்லிடலாம்.

3.எங்க ஆஃபீஸ்ல இப்ப தொட்டதெற்கெல்லாம் மெமோ கொடுத்திடறாங்க..
ஆமா..அப்படி எதைத் தொட்டீங்க?
ரிஷப்ஷனிஸ்ட் தாராவைத்தான்

4.என்னங்க..உங்க ஹோட்டல்ல பா.ம.க., ஐந்து ரூபாய்னு போட்டிருக்கீங்க
பார்சல் மட்டும் கட்ட ஐந்து ருபாய்..அதன் சுருக்கம்தான் பா.ம.க.,

5.ஏன் சார்..முகத்தை திருப்பி வெச்சுக்கிட்டு லஞ்சம் வாங்கறீங்க
யாராவது ஃபோட்டோ எடுத்தா ஆள் யாருன்னு தெரியக்கூடாதே...அதற்குத்தான்..

6.அந்த மருந்து கடையில வேலை செய்யறவர் முன்னால டாஸ்மாக் ல வேலை செஞ்சார்னு எப்படி சொல்ற
இருமலுக்கு மருந்து கேட்டா 100 மில்லியா..200 மில்லியான்னு கேட்கறாரே



அதிஷாவும்...சினிமா விமரிசனமும்..




ஒரு படம் வெளியீடு அன்றே...முதல் காட்சி முடிந்ததுமே சுடச் சுட இணையத்தில்..அவரவர் வலைப்பூவில் விமரிசனங்கள் வந்துவிடுகின்றன.

சில பதிவர்களின் விமரிசனங்கள் தரமானவையாகவே உள்ளன.

ஆகவேதான் தயாரிப்பாளர்களும் இப்போது இணைய விமரிசனத்திற்கு பயப்படுகிறார்கள்பலர் டைடில் கார்டில் இணையதள நண்பர்களுக்கு நன்றி என்றும் போட ஆரம்பித்துவிட்டார்கள்..

தரம் பற்றி சொல்ல ஆரம்பித்து வேறு எங்கோ செல்கிறேன்....

தரமான விமரிசனம் எழுதுபவர்களில் முன் வரிசையில் இருப்பவர்களில் அதிஷாவும் ஒருவர்.

அவரது நாகராஜ சோழன் விமரிசன் படித்ததும் அவரை உடனே பாராட்டத் தோன்றியதால் இப்பதிவு.

விமரிசனம் காண இங்கே செல்லவும்....

http://www.athishaonline.com/2013/05/blog-post.html

திறமை அதிகம் இருந்தும்..அதை முழுமையாக செலவிடாதவர் இவர் எனலாம்.

நான் இப்படி சொல்வதற்கும், அவரிடம் இருந்து ஏடாக்கூடமான பதிலே வரும்..இருந்தாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

யானைக்கு தன் பலம் தெரியாது என்பார்கள்....

Sunday, May 12, 2013

அம்மா...

                 



அன்னையைப் போல் தெய்வம் இல்லையாம்
 நாத்திகனையும் சற்று மாற்றுகிறாள் 
அன்னையை எண்ணியதும் 
தெய்வம் உண்டென்கிறான் 
அவளே தெய்வம் என்கிறான்
 கருவறையில் அவள் இல்லையாயினும் 
கருவில் அவனைச் சுமந்தவளாயிற்றே...

Thursday, May 9, 2013

உங்களை மாற்றிக் கொள்ளுங்களேன்....




சமீபத்தில் நண்பர் ஒருவரின் 90 வயது தந்தை அமரரான செய்தி அறிந்து அவரது இல்லம் சென்றேன்.
நண்பர் சற்று பிரபலமானவர் என்பதால் துக்கம் வருவோர் கூட்டமும் சற்று அதிகம் இருந்தது.
ஆனால் வந்த அனைவரும் நண்பரைப் பார்த்து தங்கள் வருத்தத்தை தெரிவித்துவிட்டு...மரணம் எப்படி நிகழ்ந்தது, அவர் மருத்துவமனையில் இருந்தாரா? கடைசியில் அவருடன் இருந்தது யார்? எப்படி மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்தீர்கள்?வர வேண்டியவர்கள் எல்லாம் வந்தாய் விட்டதா? எத்தனை மணிக்கு சொல்லியிருக்கிறீர்கள்? பெசண்ட் நகரா..மைலாப்பூரா? என நண்பரை துக்கம் விசாரித்துவிட்டு..தேர்வுப்போல ஒரு மதிப்பெண் கேள்விகள் பலவற்றைக் கேட்டுவிட்டனர்.
ஒருவர்..இருவர் என்றால் பரவாயில்லை..
 நண்பரால் எத்தனைப் பேருக்கு இதே கேள்விகளுக்கு பதிலைக் கூறிக்கொண்டிருக்க முடியும்.
தவிர்த்து அவர் மேற்கொள்ள வேண்டிய வேலைகளும் இருக்கிறது..
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு..சற்று கோபமே வந்தது.
நம் பங்கிற்கு நாமும் கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று எண்ணி..நண்பரிடம்..என் வருத்தத்தை தெரிவித்துவிட்டு கிளம்பினேன்.
ஆகவே நண்பர்களே...மரணம் விசாரிக்கச் செல்லும் நாம்..அதைமட்டும் செய்துவிட்டு கிளம்புவோம்.
மேற்கொண்டு தெரிய வேண்டுமானால் பிறகுக் கேட்டுக் கொள்ளலாமே!

Wednesday, May 8, 2013

கர்நாடக மக்களை குறை சொல்ல முடியாது...


கர்நாடகா...என்னத்தச் சொல்ல..

கர்நாடகத் தேர்தல் முடிந்து, காங்கிரஸ் அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

கொஞ்சம் எண்ணிப்பார்ப்போம்..


மக்கள் ,  பிஜேபியை நம்பி..தென் மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியைக் கொடுத்தார்கள்.ஆனால் மக்களை பிஜேபி நன்கு ஏமாற்றிவிட்டது.

ஐந்து ஆண்டு காலமும், உட் கட்சிப் பூசல், கட்சி மேலிடம் விலகச் சொல்லியும்..பிடிவாதமாக ஒட்டிக்கொண்டிருந்த முதல்வர், ஊழல், பதவி ஆசை என ஆட்சி நடந்தது.தவிர்த்து..தனக்கு ஆதரவு உள்ளதாக அவரவர் எண்ணிக் கொண்டு, கட்சியையே உடைத்தனர்.மக்களுக்காக பெரிதாக ஏதும் செய்யவில்லை

மக்கள்..சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தனர்.தங்கள் முடிவை தேர்தலில் காட்டி விட்டனர்.

இதனால்..காங்கிரஸையோ, அவர்களின் வானளாவிய உழலையோ மக்கள் ஆதரிப்பதாக காங்கிரஸ் கனவு காண வேண்டாம்.

மக்களுக்கு வேறு போக்கிடம் இல்லை..என்ன செய்வது..இதை அனைத்துக் கட்சிகளும் உணர்ந்ததால்தான் மனம் போன படி நடக்கிறார்கள்..நாடகம் ஆடுகிறார்கள்..முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

ராமன் ஆண்டாலும் என்ன ராவணன் ஆண்டாலும் என்ன..என்பார்கள்..

உண்மையில்...மக்களைப் பொறுத்தவரை அனைவரும்...ஊழல் வாதிகள், பதவிப்பித்து கொண்டவர்கள்...மாற்றி  மாற்றி பிழைத்துக் கொள்ளட்டும் என்ற எண்ணம்தான்.