Saturday, February 11, 2012

மண் பற்றி வைரமுத்து...




மண் பற்றியும், ரசாயன உரம் பற்றியும் முன்றாம் உலகப் போரில் வைரமுத்து எழுதியுள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மண் தான் சாமி என்றால் மண்ணை ஏன் கொல்கிறீர்கள்?

நெல்லுக்கு எறிகிறீர்களே ரசாயன உரம்..அது மண்ணைக் கொல்லும்.மண்ணுக்கும் உயிருள்ளது..அதனால்தான் மண் ஈனுகிறது.மண் என்பது ஜீவராசிகள் தங்கி வசிக்கும் உயிர்க்கூடு.கண்ணறியாத நுண்ணுயிர்களை - காளான் உயிரிகளை - மண்புழுக்களை- பாசி இனங்களை - பூச்சிகளின் கரு முட்டைகளை- ஒன்று கூட்டி வைத்திருக்கும் உயிர்த் தொகுதிதான் மண். இந்த உயிர்த் தொகுதியின் உந்து சக்திதான் மண்.புதைக்கப்பட்ட விதைக்கு ஜனனம் தருவதே அந்த நுண்ணுயிர்கள்தான்.கடப்பாரைக்கு உடையாத கடும்பாறை, ஒரு தாவரத்தின் வேருக்கு நெக்குருகி நிற்கிறதே,,எப்படி? எல்லாம் பாக்டீரியாக்கள் படுத்தும் பாடு. பாறைகளை உடைக்கும் பாக்டீரியா பழங்குப்பைகளை மக்கச் செய்யாதா? உலோகங்களையே கரைக்கும் அந்த உயிரணுக்கள் தாவரங்களின் வேர்களுக்கு தாய்ப்பால் ஊட்டாதா? மண்ணை எது உயிரோடு வைத்திருக்கிறதோ, அதைக் கொல்கிறீர்கள்.ரசாயன உரம் தெளித்து, மண்ணைக் கொன்று விவசாயம் செய்கிறீர்கள்.பிறகு, பிணத்துக்கு எல்லாரும் கூடிப் பிரசவம் பார்க்கிறீர்கள்.மண் என்பது ஜடமில்லை.அது ஓர் உயிரி.மனிதக் கொலையிலும் கொடியது மண் கொலை.

நாம் உணவுக்கு பதிலாக விஷம் உண்ணமுடியாது என்பது போலத்தான்..எருவுக்கு பதிலாக ரசாயனம் இடுவதும். உரம் பிறந்த கதை தெரியுமா?

உலகப் போர்களின் எச்சம் தான் இந்த உரங்கள்.முதல் உலகப் போரில் எட்டு லட்சம் சிறைக் கைதிகளைக் கொல்ல அம்மோனியா நச்சுப் புகை பயன் படுத்தப் பட்டது.உலகப் போர் முடிந்ததும் அதுவே பூச்சிக் கொல்லி மருந்தாக அவதாரம் எடுத்தது.இரண்டாம் உலகப் போர் முடிந்ததில், வெடிகுண்டுக்காரர்களின் சந்தை சரிந்தது.வெடிகுண்டுத் தயாரிப்பில் மிச்சப்பட்ட அம்மோனியா - சூபர் பாஸ்பேட் போன்ற வெடி உப்புக்களை எங்கே கொட்டுவது? வியாபார மூளைகளில் கந்தகம் எரிந்தது.எந்த உலோக உப்புகள் மனிதச் சந்தையை இழந்து விட்டனவோ, அதே உலோக உப்புகளுக்கு ஒரு மண் சந்தை தயாரிக்கப்பட்டது.அவை ரசாயன உரங்களாய் ரசவாதம் பெற்றன.மனிதனைக் கொன்ற மிச்சம் மண்ணைக் கொன்றது.இதுதான் பூச்சிக் கொல்லி மருந்தும், உரமும் பிறந்த கதை.

சாணமும், எருவும், சாம்பலும், தழையும் குழைத்துக் குழைத்துக் கொட்டிச் செய்யப்பட்ட விவசாயம், சோதனைக் குழாய்களின் கைகளுக்குப் போய் விட்டது.மலடாகிப் போனது மண்.விஷமாகிப் போனது உணவு.

மனிதா இயற்கைக்குத் திரும்பு.



10 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

வருத்ததிற்கு உரிய உண்மை..

சசிகலா said...

மனிதனைக் கொன்ற மிச்சம் மண்ணைக் கொன்றது.இதுதான் பூச்சிக் கொல்லி மருந்தும், உரமும் பிறந்த கதை.
உண்மைதாங்க மிச்சம் மீதி உள்ள இயற்கை வளத்தையும் அழிக்காமல் இருந்தால் சரி .
இந்த சூழலுக்கு தேவையான பதிவு .

ஹேமா said...

இயற்கையோடு சேட்டை பண்ணாதே என்று சொல்லிக்கொண்டே.....
செய்துகொண்டும் இருக்கிறார்களே !

aotspr said...

அழகாக கூறியுள்ளார்....


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

மாதேவி said...

"விஷமாகிப் போனது உணவு"
இயற்கை விவசாயத்தை விட்டு மாறியதன் விளைவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி guna thamizh

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி sasikala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி Kannan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி மாதேவி