Tuesday, December 6, 2011

முல்லை பெரியாறு...நமக்குத் தெரிய வேண்டிய சில செய்திகள்..




1800ஆம் ஆண்டு தொடக்கம்.பருவ மழை பொய்த்து..தமிழகத்தில் வறட்சி.இதை ஆங்கில அரசு ஆய்வு செய்தது.நீர் ஆதாரங்களைப் பெருக்க எண்ணியது.கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பல ஆறுகள் மேற்கு நோக்கி ஓடி கடலில் கலப்பது கண்டறியப்பட்டது.அப்பகுதியில் அணையைக் கட்டி தண்ணீரை தமிழகத்தில் திருப்புவதன் மூலம் தேனி,மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை,ராமனாதபுரம் மாவட்டங்களில் வறட்சியை விரட்டலாம் என ஆங்கில அரசு முடிவெடுத்தது.

27 ஆண்டுகள் கழித்து திட்ட அறிக்கை தயாரானது.பின்னரும் 23 ஆண்டுகள் கழித்து முல்லை பெரியாறுக்கு இடையே அணை கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தது.

பென்னிகுக் என்னும் ஆங்கில பொறியாளர் 1874ல் அணை கட்டும் பொறுப்பை ஏற்றார்.ஆண்டுக்கு 4290 மி.மீ மழை பெய்யும் அடர்ந்த வனப்பகுதியில், கடும் குளிரில் வன விலங்குகள் நிறைந்த இடத்தில்..பல இன்னல்கள்,உயிர் இழப்புகள் இடையே கட்டுமானப்பணி துவங்கியது.இந்நிலையில் 1890 ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அணையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.அப்போது ஆங்கில அரசு..இதற்கு மேல் பணம் செலவிட முடியாது என அணை கட்டும் பணியை நிறுத்தச் சொன்னது.ஆனால் பல இழப்புகள் இடையே நடைபெற்ற பணியை பாதியில் நிறுத்த விரும்பவில்லை.உடன் இங்கிலாந்தில் இருந்த தனது மற்றும் மனைவியுடையதுமான சொத்துகளை விற்று பெர்ந்தொகையைத் திரட்டி அணையைக் கட்டி முடித்தார்.

சுட்ட செங்கள்,இஞ்சி,கடுக்காய்,கருப்பட்டி, தேக்கு மரப்பட்டை என்னும் பொருள்களால் அணை கட்டப்பட்டது.165 அடி உயரமுள்ள அணையின் நீளம் 1241 அடி.நீர்த்தேக்க உயரம் 155 அடியாக உயர்த்தப்பட்டு..அலைகளால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக 152 அடியாக உறுதி செய்யப்பட்டது.அணையில் எப்போதும் 104 அடி தண்ணீர் தேங்கியிருக்க வேண்டும்.அதற்கு மேல்..அதாவது 48 அடி தண்ணீர் தமிழகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.(தமிழகத்திற்கு 8080 மில்லியன் கன அடி. )இதன் மூலம் இரண்டு லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெற்றது.கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் பயன் பெற்றனர்..

பெரியாறு அணை 1895 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் நாள் முதல் 999 ஆண்டுகளுக்கு தமிழகம் அணையை முழுமையாய் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம்..இந்திய கவுன்சில் செக்ரட்டரியேட்டும்..திருவாங்கூர் சமஸ்தானமிடையே கையெழுத்தானது.

ஒப்பந்தபடி தமிழகம் நீர் பாசனம்,மின் உற்பத்திக்கான செயல்பாடுகளை செய்து கொள்ளலாம்.போக்குவரத்தின் முழு உரிமையும் தமிழகத்திற்கு சொந்தம்.மேலும் நீர் பிடிப்புப் பகுதிக்கான 597.77 சதுர கிலோமீட்டருக்கு 40000 ரூபாயை ஆண்டொன்றிற்கு கேரளாவிற்கு தமிழகம் கொடுத்து வந்துள்ளது.
1960 ஆம் ஆண்டிலிருந்து இத் தொகை 2 லட்சத்து 57 ஆயிரமாக ஆகி உள்ளது.

1975 ஆம் ஆண்டு 70 டிஎம்சி கொள்ளளவு கொண்ட  இடுக்கி அணையை கேரளா கட்டியது.இடுக்கி அணைக்கு போதிய தண்ணீர் இல்லாததால் அதன் கவனம் முல்லை பெரியாறு பக்கம் திரும்ப..பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டதாகவும்..நீர்க்கசிவு என்றும்..அணை உடைந்தால் மூன்று மாவட்டங்கள் அழிந்துவிடும் என்றும் பிரச்னை துவக்கப்பட்டது.

1945 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் அணை பலப்படுத்தப் பட்டுள்ளது.கடந்த ஒரு நூற்றாண்டில் 30 முறை நில அதிர்வு ஏற்பட்டது.3.7 ரிக்டர் அளவே..ஆனால் அணையில் விரிசலோ, கசிவோ இல்லை.அப்படியே அவர்களின் கூற்றுபடி..அணை உடைந்தாலும்..அணையிலிருந்து 15 டிஎம்சி தண்ணீரே வெளியேறும்.அது காட்டுப்பாதை வழியாக இடுக்கிக்கு சென்றுவிடும்..70 டிஎம்சி கொள்ளளவு உள்ள இடுக்கி அணை இந் நீரை ஏற்றுக்கொள்ளும்.ஆகவே எந்த பாதிப்பும் இல்லை.

இதைவிட நகைச்சுவையான வாதம்..அணை உடைந்தால் மூன்று மாவட்டங்கள் மூழ்கிவிடும் என்பதும்..பெரியாறு அணையின் கடல்மட்ட உயரம் 2869 அடி.நீரில் மூழ்கிவிடும் என்று சொல்லப்படும் இடங்கள் கடல் மட்டத்திலிருந்து 3500 அடிகளுக்குக்கு மேல் உயரத்தில் உள்ளவை.தண்ணீர் எதிர்திசையில் அல்லது மேல் நோக்கி சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இயற்பியலுக்கும்,அறிவியலுக்கும் முரணான வாதம்.

152 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கலாம் என தமிழக, கேரள அதிகாரிகளும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தும்..கேரள அரசு அதை ஏற்கவில்லை.இதனால் தமிழகத்திற்கு கடந்த 25 ஆண்டுகளில் 3000 கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.    

18 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரியா சொன்னீங்க .
பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.

துபாய் ராஜா said...

அனைவரும் அறிய வேண்டிய அருமையான தகவல்கள்.

தமிழ்மலர் said...

முல்லைபெரியாறு அணை பலமுடன் உள்ளது. அதன் முழு உரிமையும் தமிழகத்துக்கு தான் என்ற கருத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை. ஆனால் ஒரு எதார்த்த தமிழனாக இந்த கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

அணை நிலநடுக்கப்படுகியில் உள்ளது. அடிக்கடி லோசான நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மழையின் போதும், ஒவ்வொரு நில அதிர்வின் போதும், மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள். போதாகுறைக்கு ஊடகங்களின் பீதி கூட்டலின் உச்சம் வேறு. அணு அணுவாக செத்துமடியும் இந்த உயிர்களின் மரண கூக்குரலை தயவு செய்து காது கொடுத்துக் கேளுங்கள்.

அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ வலியுறுத்தவில்லை. தயவு செய்து அணையின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம். இதில் என்ன தவறு கண்டீர்கள்?

முல்லைபெரியாறு அணையின் பயன்பாடு இல்லாமலே தமிழகம் தாராளமாக தண்ணீர் எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி இருக்கும்போது எதற்காக பிரச்சனையையே தீர்வாக வலியுறுத்தி வருகிறீர்கள்? ஒரு பிரச்சனைக்கு அதன் மாற்றுவழி ஒன்று தானே உண்மையான தீர்வு.

கிழக்கு இந்திய கம்பெனியால் முதன் முதலில் பரிசீலிக்கப்பட்ட திட்டம், பென்னிகுயிக் விரும்பிய திட்டம் இது ‘‘கூடுதல் கால்வாய்கள் மூலம் தண்ணீரை நேரடியாக தமிழகத்துக்கு கொண்டு வருதல்’’. பென்னிகுயிக்கிடம் நிதி இல்லாமல் தான் இந்த திட்டம் கைவிடப்பட்டதே தவிர வாய்ப்பு இல்லாமல் அல்ல. இந்த திட்டம் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாக அமையும். கேரள மக்களின் தலைக்கு மேல் உள்ள மரண பயத்திற்கு முழுமையான ஆறுதலை தரும்.

இந்த திட்டத்தை ஏன் பரிசீலித்து செயல்படுத்தக்கூடாது?

இதனால் தமிழக விவசாயிகளுக்கு கடுகளவேனும் இழப்பு உண்டா? சுமூகமான தீர்வுகள் இருக்கும்போது ஏன் தமிழர்கள் வீண்பிடிவாதம் பிடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை என்றும் தமிழர்களுடையது தான். ஆனால் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையிலாவது கேரள போராட்டக்குழுவின் கோரிக்கையை பரிசீலியுங்கள்.

இந்த கோரிக்கையில் 1% மேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

காஞ்சி முரளி said...

இந்த முல்லைப்பெரியார் அணையினை கடந்த மார்ச்சில் நான் நேரில் கண்டுவந்தேன்...!
தமிழன் பன்நெடுகாலமாய் பலரினால் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறான் என்பதனை நேரில் சென்று கண்டபோது என் மனது வேதனையில் தவித்தது...! இந்த இடுக்கி மாவட்டத்தில்... குறிப்பாய் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழர்கள் வாழ்ந்த... வாழ்ந்து வருகிற... பரம்பரையாய் நமக்கு சொந்தமான பகுதி... சில அரசியல் காரணங்களால்... தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல்... சுயநலத்தின் காரணமாய் மாநில எல்லை பிரிவினையின் போது... இப்பகுதி கேரளா மக்களுக்கு தாரை வார்க்கப்பட்டது...! இது தமிழனுக்கு... தமிழ்நாட்டுக்கு செய்த பச்சை தூரோகம்...! அந்த துரோகத்தின் விளைவுதான் இன்று நாம் சந்திப்பது...! அந்த பகுதி மட்டும் நம் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் எவனாலும்... எந்த கொம்பனாலும்... தமிழ்நாட்டை அசைக்கமுடியாது...! அப்படிப்பட்ட செல்வவளம் கொழிக்கும் பகுதி அது...! அங்கு வசித்துவரும் மக்கள் சொன்னதுதான் இக்கருத்து...! இதை நான் கேட்டதும் மிக வேதனை அடைந்தேன்...! அந்த முல்லைப் பெரியாறு அணையை சுற்றி வந்து பார்த்தபோது... நீங்கள் இப்பதிவில் குறிப்பிட்டது அப்பட்டமான உண்மை...! கேரளா மாநிலத்தவருக்கு இப்போது இடுக்கி அணையில் நீர் நிரம்பினால்... தண்ணீர் பயன்படுத்தவா போகிறார்கள்...! இல்லை...! அவர்கள் 24 மணிநேரமும் நீர் மின்சாரம் தயாரித்து... அதனை அயல் மாநிலத்தவருக்கு விற்பனை செய்திட இந்த முல்லைபெரியாறு ஆணை தடையாய் இருப்பதால்... இந்த அணை உடைந்துவிடும்... பலவீனமாயுள்ளது... போன்ற பல்வேறு பொய்களை சொல்லி... நம் தமிழ்நாட்டின் உயிர்வாதார பிரச்சினையில் கை வைக்கிறார்கள்....!
இதில் முதலில் "நமக்கு நாமே செய்து துரோகம்"... இரண்டாவது கேரளா அரசியல்வாதிகள், கேரளா மக்களின் உள்ளங்களில்... இல்லாத ஒன்றினை இருப்பதை... வருவதாய்... தவறான எண்ணங்களை... பீதியை.. பயத்தை உருவாக்கி நம் தமிழ்நாட்டுக்கு துரோகத்தை செய்ய துடிக்கிறார்கள்....! இதுதான் உண்மை...! யதார்த்தம்...! நிஜம்....!

நல்ல பதிவு நண்பரே...!

காஞ்சி முரளி said...

////அணை நிலநடுக்கப்படுகியில் உள்ளது. அடிக்கடி லோசான நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மழையின் போதும், ஒவ்வொரு நில அதிர்வின் போதும், மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள். போதாகுறைக்கு ஊடகங்களின் பீதி கூட்டலின் உச்சம் வேறு. அணு அணுவாக செத்துமடியும் இந்த உயிர்களின் மரண கூக்குரலை தயவு செய்து காது கொடுத்துக் கேளுங்கள்/// என கேள்வி கேட்கும் தமிழ் மலரே...! இப்பதிவில்தான் (பின்வரும்) பதில் இருக்கிறதே...!

பதில்: ///கடந்த ஒரு நூற்றாண்டில் 30 முறை நில அதிர்வு ஏற்பட்டது.3.7 ரிக்டர் அளவே..ஆனால் அணையில் விரிசலோ, கசிவோ இல்லை.அப்படியே அவர்களின் கூற்றுபடி..அணை உடைந்தாலும்..அணையிலிருந்து 15 டிஎம்சி தண்ணீரே வெளியேறும்.அது காட்டுப்பாதை வழியாக இடுக்கிக்கு சென்றுவிடும்..70 டிஎம்சி கொள்ளளவு உள்ள இடுக்கி அணை இந் நீரை ஏற்றுக்கொள்ளும்.ஆகவே எந்த பாதிப்பும் இல்லை////

அதோடு...! கேரளா அரசின் சொற்படி அணை உடைந்தாலும்... வெள்ளம் நேரே ஊருக்குள் வராது... சுமார் 100 அடி உயரமுள்ள மாபெரும் கால்வாயில்... அதுவும் காட்டுப்பகுதியில் உள்ள கால்வாய் வழியாக... இடுக்கி அணைக்கு செல்லும்...

அதுவும்... இப்பதிவில் குறிப்பிட்டுள்ள 15 டி.எம்.சி. நீர்... கீழ்நோக்கி ஓடுமே தவிர...!
தண்ணீர் என்ன குரங்கா என்ன... 100 அடிக்கு மேலே ஏறி ஊருக்குள் வர... !
அதோடு கீழே உள்ள இடுக்கி அணையின் கொள்ளளவு சுமார் 70 டி.எம்.சி. நீர் கொள்ளும் அணை...! இதில் சென்று சேர்ந்துவிடும்...!

அதோடு... தமிழ் மலர் சொல்லும் அளவுக்கு மக்கள் வாழும் பகுதிக்கு வெள்ளம் வராது...! காரணம் மக்கள் வசிக்கும் பகுதி மேட்டுப்பாங்கான பகுதி... அணை உடைந்தால் பள்ளத்தை நோக்கித்தான் ஓடுமே தவிர... மேல்நோக்கி ஏறி வரும் என்பது விட்டலாச்சார்யா படம் மாதிரி இருக்கு தமிழ் மலர் சொல்வது...! கற்பனைக்கும் ஓர் எல்லை உண்டு...!

தமிழ்நாட்டில் தேனீ, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் குடிநீர் முதல் கொண்டு இப்பகுதி மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை...! உயிர் வாழும் பிரச்சனை...! தண்ணீர் இல்லாவிட்டால் மனிதன் உயிர்வாழ்முடியுமா...!

தமிழ்மலர் said...

திரு.காஞ்சி முரளி

ஒரு அணை உடைந்தால் இழப்பு இருக்காது என்று கூறும் மனசாட்சி அற்ற மனிதர்களா தமிழர்கள்? முல்லைபெரியாறு சென்றுவந்துள்ள நீங்கள் இங்குள்ள மக்களின் உணர்வுகளை தெரிந்துகொள்ளாதது வேதனை. திருப்பூர் நகரில் சங்கிலி பள்ளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 6 உயிர்கள் பறிபோனது. தீடீர் வெள்ளப்பெருக்கின் அபாயத்தை ஆறு உள்ள ஊர்மக்களிடம் கேட்டுப்பாருங்கள்..

ஐயா நிலநடுக்கத்தின் அளவு எல்லாம் சாதாரன மக்களுக்கு தெரியாது. ஆனால் சிறு அதிர்வால் வரும் மரண பயத்தை உங்கள் ஊரில் நிலநடுக்கம் வரும்போது புரிந்துகொள்வீர்கள். இல்லாவிட்டால் தாராபுரம் மக்களிடம் கேட்டுப்பாருங்கள்.

மாற்று தீர்வு எளிமையாக இருக்கும் போது ஈகோ ஒன்றையே பிரதானமாக கொள்வதன் காரணம் என்ன?

அணை உடையாது. ஆனால் உடைத்துவிடுவார்கள். அப்போதும் அடிபட்டு சாவது நீங்கள் அல்ல நாங்கள் தான்.

நான் திருப்பவும் தாழ்மையாக கேட்கிறேன் மாற்று திட்டத்தை பரிசீலிப்பதால் உங்களுக்கு இழப்பு என்ன? அதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். அதற்கு ஏன் பதில்சொல்ல தயங்குகிறீர்கள்?

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்களை நன்றாக அலசி உள்ளீர்கள். நன்றி சகோ!

"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

காஞ்சி முரளி said...

PART-1

நண்பரே/ நண்பியே..!
தங்கள் முதல் கேள்வி...!
////ஒரு அணை உடைந்தால் இழப்பு இருக்காது என்று கூறும் மனசாட்சி அற்ற மனிதர்களா தமிழர்கள்? முல்லைபெரியாறு சென்றுவந்துள்ள நீங்கள் இங்குள்ள மக்களின் உணர்வுகளை தெரிந்துகொள்ளாதது வேதனை.////

வந்தாரை வாழவைத்து... சொந்தங்களை ஏங்க வைத்து... அதாவது.... தன் மண்ணில் பிறந்தாரை வாட வைப்பவன்தான் தமிழன்...!
இது... நேற்றும் நடந்தது...! இன்றும் நடக்கிறது...! நாளையும் நடக்கும்...! இதில் உலகத்தில் உள்ளோரை கேட்டாலே சொல்வர்...! உலகத்தில் அதிக இரக்கமுள்ளவன் தமிழன் என்று...! உலகோரே அறிவர் தமிழன் இரக்கத்தின் மறு அவதாரம் என...!

ஓர் அணை உடைந்தால் இழப்பு இருக்காது என என் பதிலில் எங்கேயும் குறிப்பிடவே இல்லை...!
நான் சொன்னது... முல்லைபெரியார் அணை உடையாது... அப்படியே உடைந்தாலும்... அது ஊருக்குள் நுழையவே வாய்ப்பில்லை...! ஏனெனில் அணை இருப்பது மலைகள் சூழ்ந்த அடர்காட்டில்... அணை உடைந்தாலும்.... 100 அடி நெடிதுயர்ந்த பாறைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கின் வழியே தண்ணீர் பாய்ந்தோடி முல்லைப்பெரியார் அணையைவிட பெரிய அணையான இடுக்கி அணைக்கு போய்விடும் என்றுதான் நான் சொன்னேன்... அதோடு 100 அடி பாறைகளுக்கிடையே கால்வாயில் தண்ணீர் பாய்வதால்... அதுவும் ஓர் கால்வாயில் 100 அடிக்கு தண்ணீர் ஓர் வினாடி ஓடினால் எவ்வளவு டி.எம்.சி. தண்ணீர் என்பதை அளந்துகொள்ளுங்கள்...! அதோடு அணை ஒரு மலைமேல் இருந்து.. கீழே மக்கள் வசிக்கும் ஊராய் (சமவெளியாய்) இருந்தால் இழப்பு உண்டு...! நான் அதனை மறுக்கவில்லை. ஆனால் முல்லைப்பெரியார் அணை இருப்பதோ அடர் காட்டில்...

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்...! அணை உடைந்து அதில் ஒருவர் இறந்தாலும்... அவன் கேரளா மாநிலத்தவனாய் இருந்தாலும் மிகத்துயருறுபவன் நான்... காரணம் அவன் ஓர் மனிதன் என்பதால்... ஓர் மனித உயிர் இழப்பு என்றாலும் அது பேரிழப்பு என கருதுபவன் நான்...

தங்கள் இரண்டாவது கேள்வி:
///திருப்பூர் நகரில் சங்கிலி பள்ளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 6 உயிர்கள் பறிபோனது. தீடீர் வெள்ளப்பெருக்கின் அபாயத்தை ஆறு உள்ள ஊர்மக்களிடம் கேட்டுப்பாருங்கள்..////

நீங்கள் என் பதிலை தவறாய் புரிந்துகொண்டிருக்றிரீர்கள்....!
திருப்பூர் ஓர் சமவெளி பிரதேசம்... அதோடு... நொய்யல் ஆறு பாயும் வழியில்... அதாவது ஆற்றின் கரையோரம்... கரையோரம் என்பதைவிட ஆற்றிலேயே வீட்டை கட்டி குடியிருந்தால்... ஆற்றைவிட தாழ்ந்த... பள்ளமான இடத்தில் வீடு கட்டினால்... வெள்ளநீர் வீட்டுக்குள்தான் வரும்...! ஆறு போகும் வழியை மரித்தால்.... அது எங்கே போகும்...!
அதோடு... அவர்கள் ஆற்றின் கரையோரம் தள்ளி.... ஓர் 20 அடி உயரம் கரையை எழுப்பி... அக்கரையோரம் வீடு கட்டியிருந்தால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்திருக்காது... உயிர் பலியும் ஏற்பட்டிருக்காது...!

சென்னையில்கூட சைதாப்பேட்டையில் ஓடும் அடையாற்றின் கரையோரம்கூட அல்ல... ஆற்றினுள்ளேயே வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள்... மழைக்காலத்தில்... அடையாற்றில் வெள்ளம் வரும்போது அந்த வீடும்... வீட்டிலுள்ள பொருட்களும் அடித்து செல்கின்றன..! நீங்கள் அவர்களை பார்த்து பரிதாபபட்டால் என்ன அர்த்தம்...! அது அவர்களின் முட்டாள்தனம்...! எந்த மடையனாவது ஆற்றின் நடுவே வீடு கட்டுவானா? அப்படி கட்டிவிட்டு ஐயோ...! ஐயோ...! என கதறுவது எந்த விதத்தில் நியாயம்...! ஆற்றின் நடுவே வீடு கட்டுபவனின் செயல் முட்டாள்தனம் இல்லாமல்... புத்திசாலித்தனமா...? அதைப்போலத்தான் திருப்பூர் நிகழ்வு...!

Cont... PART-2

காஞ்சி முரளி said...

PART - 2

அடுத்த கேள்வி :
//ஐயா நிலநடுக்கத்தின் அளவு எல்லாம் சாதாரன மக்களுக்கு தெரியாது. ஆனால் சிறு அதிர்வால் வரும் மரண பயத்தை உங்கள் ஊரில் நிலநடுக்கம் வரும்போது புரிந்துகொள்வீர்கள். இல்லாவிட்டால் தாராபுரம் மக்களிடம் கேட்டுப்பாருங்கள்.///

ஐயா...! நாங்கள் சுனாமியையே பக்கத்திலிருந்து பார்த்தவர்கள்...! எங்களுக்கா... நிலநடுக்கம் பற்றித் தெரியாது...! ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...! தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதி - 3 என நான் சொல்லவில்லை...! உலக... இந்திய புவியியல் ஆய்வாளர்கள்... அறிஞர்கள்... விஞ்ஞசானிகள் சொல்லியுள்ளனர்...! அவர்களுக்கு தெரியாதது... உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அறிவுசார் குழுவினருக்கு தெரியாதது... நமக்கு தெரியும் என்று பேசுவது அறிவுடைமை ஆகாது ஐயா...!

அடுத்த கேள்வி:
//மாற்று தீர்வு எளிமையாக இருக்கும் போது ஈகோ ஒன்றையே பிரதானமாக கொள்வதன் காரணம் என்ன?///
என்றுமே தமிழன்... தமிழ்நாட்டுக்காரன் "ஈகோ" பார்ப்பதே இல்லை...! அவன் உயிர்... வாழ்வாதாரப் பிரச்சனை இது...! தண்ணீர் இலையென்றால் ஓர் மனிதன் உயிர் வாழ்தல் இயலுமா? ஐயா...! அதற்காகதான்...! ஏற்கெனவே கர்நாடகத்தால் காவிரிப் பிரச்சனையில் அநீதி இழைப்பக்கப்பட்டவன்...! அதனால்தான் இது...!

அடுத்த கேள்வி :
////அணை உடையாது. ஆனால் உடைத்துவிடுவார்கள். அப்போதும் அடிபட்டு சாவது நீங்கள் அல்ல நாங்கள் தான்.///

நன்று...!
"தனக்கு இரண்டு கண் குருடானாலும் பரவாயில்லை...! தன் எதிரில் உள்ளவனுக்கு ஓர் கண் குருடாக்கவேண்டும்" என்ற மனப்பாங்கு இந்த வரிகளில் காண்கிறேன்...!

இறுதியாய்...
தாங்களே சொல்லிவிட்டீர்..
//// அணை உடையாது. ஆனால் உடைத்துவிடுவார்கள்/// என....!
"மகன் செத்தாலும் பரவாயில்லை... மருமகள் தாலி அறுத்தால் போதும்" என்ற தங்கள் எண்ணம் மிகமிகச் சிறந்தது..!

வாழ்க...! மனிதாபிமானம்...!
வாழ்க...! தங்கள் சிந்தனை...! தங்கள் கொள்கை...!

வாழ்க...!
வளமுடன்...!
நலமுடன்.......!
சந்தோஷமுடன்....!

தமிழ்மலர் said...

திரு. காஞ்சி முரளி

எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளீர்கள்கள் ஆனால் நான் கேட்ட முக்கியமன கடைசி கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவில்லையே ஏன்?

நானும் தமிழன் தான். அதனால் தான் உரிமையாக கேட்கிறேன் தமிழக தமிழர்கள் இரக்க குணம் அற்றவர்களா என்று?

தமிழர்கள் உலகம் முழுவதும் பல பிரச்சனைகளுக்காக பல்வேறு பட்டினி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இன்று தமிழனை நோக்கி ஒரு பட்டினி போராட்டம் நடக்கிறது. அந்த பட்டினி பாராட்டத்தை அங்கீகரிக்க வேண்டாம் குறைந்தபட்சம் காதுகொடுத்தாவது கேட்க வேண்டாமா? காதுகொடுத்து கூட கேட்க மறுக்கும் மனித தன்மையற்றவனா தமிழன்?

நான் திருப்பவும் தாழ்மையாக கேட்கிறேன் மாற்று திட்டத்தை பரிசீலிப்பதால் உங்களுக்கு இழப்பு என்ன? அதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். அதற்கு ஏன் பதில்சொல்ல தயங்குகிறீர்கள்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

தமிழ் மலர் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்..
முல்லை பெரியாறு அணையை 136 அடியுடன் முடக்கி விட வேண்டும்..அணையை உடைக்க வேண்டும் என்பவர்கள் சற்று சிந்திக்கட்டும்.தமிழகம் நீர்த்தேவைக்கு கேரளாவை சார்ந்துள்ளது உண்மை.அதேபோல உணவுத் தேவை,வர்த்தகம், போக்குவரத்து என பலவற்றிற்கும் கேரளா தமிழகத்தைச் சார்ந்துள்ளது.முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில்..தமிழகம் பாதிக்கப்படும் எனில்..அது கேரளாவிலும் எதிரொலிக்கும்.
நதி நீர் பிரச்னையால் தமிழக விவசாயிகள் மட்டுமல்ல..மனித நேயமும் செத்துவிடக்கூடாது என்பதை கேரள மக்களும், அரசும் ,அரசியல் தலைவர்களும் உணரவேண்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

புது அணை கட்டுவதுதான் மாற்று என்றால் அதை ஏற்றுக் கொள்ளமுடியாது.ஏனெனில் அணையை ஆய்வு செய்தவர்கள் அனைவரும் அணை பலமாய் உள்ளதாகவே சொல்கிறார்கள்.இந்நிலையில் அணையை உடைக்க 40 கோடியும்..புதிதாக அணை கட்ட 600 கோடி செலவும் அவசியமா...
இதில் உள்நோக்கம் ஏதுமில்லை என எப்படி நினைக்கிறீர்கள்..தமிழ்மலர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பின்னூட்டங்கள் இனி மட்டுறுத்தப்பட்டுள்ளது

தமிழ்மலர் said...

திரு.T.V.ராதாகிருஷ்ணன்

கேரளாவின் புதிய அணை கட்டும் திட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. கேரளா புதிய அணை கட்டினால் நிச்சயமாக தமிழகத்துக்கு ஒரு லீட்டர் தண்ணீர் கூட கிடைக்காது. அதனால் தான் தமிழகத்துக்கு மிகவும் சாதகமான தமிழகம் நோக்கி கூடுதல் கால்வாய்கள் வெட்டும் திட்டத்தை முன்வைக்கிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6 ஆண்டுகளாக கேரள போராட்ட குழு தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இதை தமிழகம் காது கொடுத்து கேட்காததது தான் வேதனை.

தற்போது கேரள&தமிழக போராட்டக்குழுக்கள் இந்த தீர்வை ஏற்றுக்கொண்டுள்ளன. விரைவில் இது வெளியில் வரும். தமிழக ஊடகங்கள் உண்மை செய்திகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பது இல்லை. இந்த பிரச்சனையை சூடு தனியாமல் வைத்திருக்கவே விரும்புகின்றன. விரைவில் புரிந்துகொள்வீர்கள்.

நன்றி.

காஞ்சி முரளி said...

///மாற்று திட்டத்தை பரிசீலிப்பதால் உங்களுக்கு இழப்பு என்ன? அதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். அதற்கு ஏன் பதில்சொல்ல தயங்குகிறீர்கள்?///

கேரளா மாற்று திட்டத்தின்படி புதிய அணை கட்டினால் மட்டும் நிலநடுக்கம் வராதா...?
வந்தால் அணை உடையாதா...?
உடைந்தால் மக்கள் மடிய மாட்டார்களா...?
இதற்கு என்ன உத்திரவாதம்...!

புதிய அணை என்ன ரப்பரால் கட்டப்படுமா..? அதில் சேதாரம் வராதா...!

முல்லைப் பெரியார் அணைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழப் பேரரசன் கரிகாலனால் காவிரி எனும் பெருநதியை மறித்து கட்டப்பட்ட "கல்லணை" ஆயிரம் ஆண்டுகளாகியும்... நிலநடுக்கம்... பெருவெள்ளம்... சுனாமி... இடி...மின்னல்.. இவற்றை தாங்கி எப்படி 1000 ஆண்டுகள் உறுதியுடன் உள்ளது எப்படி...! 1000 ஆண்டுகள் முன் கட்டப்பட்ட அணையே உடையாதபோது... 150 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை எப்படி உடையும்?

அடர் வனப்பகுதியான சுமார் 1000 ஏக்கர் காட்டை அழித்து புதிய அணையினை கேரளா அரசு கட்டுவதற்கான முழுமுழு காரணமே... அணை உடையும் என்பதால் அல்ல... முல்லை அணை இல்லாவிட்டால் முழுத் தண்ணீரும் புதிய அணைக்கு போகும்... அதில் நீர்மின்நிலையம் அமைத்து நீர்மின்சாரம் தயாரித்து... அதனை அயல் மாநிலத்திற்கு விற்பது... அல்லது அந்த மின்சாரத்தை கொண்டு தமிழ்நாட்டின் வளத்தை சுரண்டுவது... அதாவது மின்சாரம் அளித்து அரிசி, காய்கறி போன்ற கேரள மக்கள் உயிர்வாழ்தலுக்கான பொருட்களை அடித்து பிடுங்கலாம் என்ற சிறுமையான எண்ணம்தான்...

அதோடு... புதிய அணை கட்டினால்... தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது... காரணம்.. புதிய அணை கேரள மாநிலத்தினுள் அமைகிறது... அத்துடன்... தண்ணீர் தமிழகத்திற்கு பம்ப்செட் மூலம் கொடுக்க முடியுமே தவிர, இப்போதுபோல் மதகு திறந்தால் தண்ணீர் வராது...! இந்த அணையின் முழு கட்டுப்பாடும் கேரளா அரசின்கீழ் வருவதால்... தமிழகம் தண்ணீருக்கு தன்னிடம் கையேந்தவேண்டும் என்ற "குறுகிய" எண்ணம்தான்...!

அருள் said...

சென்னை ஆங்கில பத்திரிகைகளின் மலையாளி மோகம்!

http://arulgreen.blogspot.com/2011/12/blog-post.html

Greatston Gnanesh said...

//மாற்று திட்டத்தை பரிசீலிப்பதால் உங்களுக்கு இழப்பு என்ன? அதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். அதற்கு ஏன் பதில்சொல்ல தயங்குகிறீர்கள்?//

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து
2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி
உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து
தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ
மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -
மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு,
இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்
திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து
ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.

Greatston Gnanesh said...

//மாற்று திட்டத்தை பரிசீலிப்பதால் உங்களுக்கு இழப்பு என்ன? அதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். அதற்கு ஏன் பதில்சொல்ல தயங்குகிறீர்கள்?//

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து
2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி
உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து
தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ
மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -
மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு,
இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்
திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து
ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.