Tuesday, November 30, 2010

சோம்னாத் கோயில் (கவிதை)


சோம்னாத் கோயிலை
கஜினி
சூறையாடினான்
படிக்கும்
மகள் கேட்டாள்
கோவிலை சூறையாடுவது
நடக்குமா
அலைவரிசையில் நடக்கையில்
இது நடக்காதா
என்றிட்டான் மகன்

Monday, November 29, 2010

குறள் இன்பம்- 3

வள்ளுவனின் சொல் விளையாட்டுகளை கீழ்கண்ட குறள்களில் இந்த இடுகையில் காணலாம்..
ஆற்றுதல் என்னும் சொல்லை வைத்து ஈகை அதிகாரத்தில் ஐந்தாவது குறளாக அவர் சொல்வது என்ன பார்க்கலாம்.

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்

பசியைப் பொறுத்துக் கொண்டு விரதம் இருப்பது சிறந்தது என அதைக் கடைப்பிடிப்பதைவிடப் பசியோடிருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

அடுத்து..ஒருவர் மீது ஏற்படும் பழியை விடக் கொடுமையானது..அவர் வாழ்வில் வேறேதும் இருக்க முடியாது.புகழ் அதிகாரத்தில் இதையே வசை,இசை,வாழ்வார் போன்ற சொற்களால் விளையாடியுள்ளார்.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

பழி உண்டாகாமல் வாழும் வாழ்க்கையே வாழ்க்கை எனப்படும்.புகழ் இல்லாதவர் வாழ்வதும்,வாழாததும் ஒன்று போலத்தான்

தவம் அதிகாரத்தில் பத்தாவது குறள் இது.இலர்,பலர்.சிலர் என வள்ளுவனின் விளையாட்டு இக்குறளில்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும்..உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்..

அடுத்து அவனது சொல்விளையாட்டு..இறந்தார்,துறந்தார் என்பதை வைத்து.வெகுளாமை யில் கடைசி குறள்

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

எல்லையற்ற சினம் கொள்பவர்கள் இறந்தவர்களுக்கு ஒப்பாவார்கள்.சினத்தை அறவே துறந்தவர் முற்றும் துறந்த துறவிக்கு ஒப்பாவர்.

(அடுத்த இடுகையில் சந்திப்போம்)

வந்தாரை வாழவைக்கும்..வந்தாரிடம் இடிபடும் தமிழன்..

தமிழனுக்கு என்று ஒரு குணம் உண்டு..

அது..தன்னை நாடி வருபவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுதல்.அதே நேரம் தன்னை மிதிப்பவர்களை சகித்துக் கொள்வது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும்..அந்த மாநிலத்தைச் சேர்ந்த, அந்த மொழி தெரிந்தவரே முதல்வராக முடியும்.

ஆனால்..தமிழகத்தில்..யார் வேணுமானாலும் முதல்வர் ஆகலாம்.

அதுபோல..தமிழ்த் திரைப்பட உலகில் அனைத்து திராவிட மொழிகாரர்களும் உள்ளனர்.

அவர்கள் திறமையை ஊக்குவிப்பவன் தமிழன்.அவனைப் பொறுத்தவரை கலைக்கு மொழி பேதம் பார்க்கக் கூடாது என்று எண்ணுபவன்.தமிழ் தெரிந்த நடிகையைவிட..பிற மொழி நடிகைகளை ஆதரிப்பவன் அவன்.

ஆனால்..மற்ற மொழிக்காரர்கள் அப்படியா இருக்கிறார்கள்...இல்லையே..

மலையாளப் படங்களில்..அசட்டுப் பாத்திரங்கள் ஏதேனும் வருமானால்..அவன் தமிழ் பேசுபவனாக வருவான்..ஆனால் நாமோ..மதிப்பு மிக்க ஒரு போலீஸ் அதிகாரி பாத்திரமானாலும்..பொருத்தமானால்..ஒரு மலையாளி நடிகரை நடிக்க வைப்போம்.

ஆனால்..அவர்கள் அப்படி இல்லையே..

50 ஆண்டுகள் கமல் திரைவாழ்க்கையைப் பாராட்ட கேரள அரசு முன் வந்தது.ஆனால் அதை மலையாளத் திரைப்படத்தினர் புறக்கணித்தனர்.

தற்போது கிளம்பியிருக்கும் அடுத்த சர்ச்சை..ஆர்யாவின் தமிழ்ப்படங்கள் பேச்சைப் பற்றிய சர்ச்சை..

அதை கண்டித்த குகநாதனைப் பாராட்டும் அதே நேரத்தில்..நடிகர் சங்கம் அப்படி நடந்துக் கொள்ளவில்லையே என மன வருத்தம் ஏற்படுகிறது..அதே நேரம் அவர்கள் செயலும் சரியே..ஏனெனில்..அது தென்னிந்திய நடிகர் சங்கம்.

ஆனால்..தனி மனிதனான நாம்..என்ன செய்ய வேண்டும்..

கலைஞர்களுக்கு நாவடக்கம் வேண்டும்..அவர்கள் எதை வேணுமானாலும் பேசுவார்கள்..அப்படிப்பட்டவர்களை நாம் ஆதரிக்க வேண்டுமா?

கண்டிப்பாக உப்பைத்தின்ற ஆர்யா..தண்ணீர் குடித்தாக வேண்டும்...அவர் படங்களை புறக்கணிப்பதே தமிழனான நாம் செய்யும் எதிர்ப்பாகும்.அதை விடுத்து..அவர் உருவப் படத்திற்கு செருப்பு மாலை போடுவதுடன் திருப்தியடைந்துவிடக் கூடாது.

Sunday, November 28, 2010

சென்னை நகரில் காணாமல்போன திரையரங்குகள்-3

சென்ற இரு இடுகைகளில் பல திரையரங்குகள் மூடப்பட்டதைப் பார்த்தோம்..இந்த இடுகையில் மேலும் சில..

ஆற்காட் சாலையில் ராம் திரையரங்கு பிரபலமாயிருந்த ஒன்று..அது இன்று மூடப்பட்டு பத்மாராம் கல்யாண மாளிகையாய் திகழ்கிறது.
பரணி ஸ்டூடியோவை ஒட்டி பரணி என்ற பெயரிலேயே ஒரு திரையரங்கு சில ஆண்டுகள் இருந்தது.இப்போது மொத்த இடமுமே பரணி ஹாஸ்பிடல் ஆகிவிட்டது.
நெல்சன் மாணிக்கம் சாலையில் பழனியப்பா திரையரங்கு இன்று வர்த்தக கட்டிடமாகி விட்டது.அதூ போலவே ஜி.என்.செட்டி சாலையில் சன் தியேட்டர் சன் பிளாசா வாகிவிட்டது.
பாண்டி பஜாரில் நடிகை டி.ஆர்.ராஜகுமாரிக்கு சொந்தமான தியேட்டர் ஒன்று இருந்தது..அது குத்தகைக்கு விடப்பட்டு சாஹ்னிஸ் என்ற பெயரில் பல ஆண்டுகள் நடந்து பின் ராஜகுமாரி என்ற பெயரில் சில ஆண்டுகள் நடந்தது.பெரும்பாலும் ஆங்கிலப் படங்களே திரையிடப் படும்.இன்றோ ..பெரிய வியாபாரத் தளம் ஆகிவிட்டது.
பெரம்பூர் வாசிகளால் மறக்க முடியா திரையரங்கு வீனஸ்..அதுவும் இப்போது மூடப்பட்டு விட்டது.
வால்டாக்ஸ் தெருவில் ஒற்றவாடை என்னும் தியேட்டர் இருந்தது.பல பிரபல நாடகங்கள் அங்குதான் நடைபெறும்.அந்த அரங்கு பத்மனாபா என்று திரையரங்காய் மாற்றப்பட்டது.அதுவும் இப்போது மூடப்பட்டு விட்டது


ராயபுரத்தில் பிரைட்டன் திரையரங்கு..பழைய ஆங்கிலப்படங்கள் வெளியாகும்.
பாரிமுனை பகுதியில் வேலை புரிபவர்களால் மறக்க முடியா திரையரங்கு மினர்வா..ஆங்கிலப் படங்கள் இதில் வரும் நான்கு மணிக் காட்சியின் நிரந்தர பார்வையாளன் நான்
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் தங்கம் தியேட்டர்..,வில்லிவாக்கம் நாதமுனி,ஓட்டேரியில் சரஸ்வதி,அமைந்தகரை லட்சுமி,மேகலா(நிறைய எம்.ஜி.ஆர்., படங்கள் இங்கு பார்த்திருக்கிறேன்) ஆகியவையும் இப்போது செயல்படவில்லை என தெரிகிறது.
தவிர்த்து கீழ்கண்ட திரையரங்குகள் இப்போது உள்ளனவா..விவரம் புரிந்தவர் தெரிவிக்கவும்..
வசந்தி,
சரவணா
அசோக்
நடராஜ்
செலக்ட்
முருகன்
கிரௌன்

Saturday, November 27, 2010

கொக்கும்....பூனையும் (கவிதை)

ஓடு மீன் ஓட

உறு மீன் வர

காத்திருந்தது கொக்கு

பார்வை இல்லை

என்பது மறந்து

பூனையோ

தன் கண் மூடி

உலகே இருள்

என்றது

சென்னை நகரில் காணாமல் போன திரையரங்குகள் - 2

சென்ற இடுகையில் அண்ணாசாலையில் காணாமல் போன திரையரங்குகள் பற்றி பார்த்தோம்..

இந்த இடுகை சென்னையில் மற்ற இடங்களில் காணாமல் போன அரங்குகள்..

மயிலாப்பூர் பகுதியில் இருந்த திரையரங்கு இரண்டு.ஒன்று காமதேனு..மற்றது கபாலி.இவ்விரு திரையரங்கிலும் புது படங்கள் வெளிவராவிடினும்..ஃபர்ஸ்ட் சேஞ்ச்

என்று சொல்லப்பட்ட..திரையரங்கில் வெளியாகி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அடுத்து இவற்றில் வரும்..இன்று கபாலி இருந்த இடம் அடுக்ககமாகவும்..காமதேனு இருந்த இடம் கல்யாண மண்டபமாகவும் வந்துவிட்டன.

அடுத்து அடையார் பகுதியில் இருந்த ஈராஸ் திரையரங்கு..இது மறைந்து இன்று கார்களுக்கான ஷோரூம் ஆகிவிட்டது.

அயனாவரம் பகுதியில் இருந்த திரையரங்கு சயானி..இதில் சிவாஜி,எம்.ஜி.ஆர்., படங்கள் வருவதுண்டு.கெல்லீஸ் பகுதியில் இருந்த உமா தியேட்டரும் இன்று மறைந்து பல நிறுவனங்களுக்கான வர்த்தகக் கட்டிடங்கள் வந்துவிட்டன.இத்திரையரங்கில் தான் காதலிக்க நேரமில்லை வெள்ளி விழா கொண்டாடியது. பதினாறு வயதினிலே படம் இங்கு வெளியானது .

அடுத்து புரசைவாக்கம் பகுதியில் இருந்த ராக்ஸி..மிகப் பழமையான திரையரங்கு..இங்கு பாவமன்னிப்பு வெள்ளிவிழா கண்டது.

இதே பகுதியில் இருந்த புவனேஸ்வரி..சிவாஜி படங்கள் கண்டிப்பாக இத் திரையரங்கில் வரும் என்பது எழுதப்படாத விதியாய் இருந்தது.

அடுத்து, தங்கசாலை பகுதியில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா..இப்பகுதியில்..வசதி மிக்க திரையரங்காய் திகழ்ந்தது.

தியாகராயநகர் பகுதியில் இருந்த நடிகர் நாகெஷிற்கு சொந்தமான நாகேஷ் திரையரங்கின் ஆயுள் மிகவும் குறைவு..வந்த சில ஆண்டுகளிலேயே பல சர்ச்சைகளை சந்தித்த இத் திரையரங்கு..இன்று கல்யாண மண்டபமாக ஆகிவிட்டது.

மாநகர வரி கட்டாததால் அண்ணாசாலையில் ஜெயப்ரதா(முன்னாள் மிட்லண்ட்) பூட்டிக் கிடக்கிறது.

இப்படி பல திரையரங்குகள் ..மறைந்தாலும்..அவற்றை ஈடு கட்ட பல மல்டிப்லக்ஸ் வந்தாலும்..சாமான்யன்..குறைந்த செலவில் இத்திரையரங்கில் பார்க்க முடிந்த படங்களை..அதிகக் கட்டணத்தில் தானே பார்க்க முடிகிறது.

உதாரணமாக தனித் திரையரங்கான மெலடியில் கட்டணம் 50 ரூபாய்..ஆனால் சத்யம் போன்ற திரையரங்கில் 120 ரூபாய் ஆகிறதே.

Friday, November 26, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(26-11-10)

பீகார் சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள M.L.A., க்களில் 141 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.இதில் அனைத்துக் கட்சியினரும் அடக்கம்.ஒரு எம்.எல்.ஏ., வாக கிரிமினலாயிருந்தால் வரமுடியும் என தகுதி நிர்ணயம் செய்தால் என்ன? வாழ்க இந்திய ஜனநாயகம்.
2)ஒரு அரசு ஊழியன் கிரிமினல் என்றால் அவன் வேலை பறி போகும்..பாவம் அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?
3)புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவரா நீங்கள்? அப்படியாயின் அதனால் விளையும் கெடுதல் உங்களுக்கில்லை என மகிழாதீர்கள்.புகைப்பிடிப்பவர் அருகில் நீங்கள் நின்றாலே..அந்தக் கேடு உங்களை வந்து அடையும்.ஆண்டு ஒன்றுக்கு 51 லட்சம் நபர்கள் புகை பழக்கத்தால் உயிரிழக்கின்றனராம்.அதில் பிறர் புகைப் பிடிப்பதால் ..அவர்கள் அருகில் உள்ளவர்கள் 6,03,000 நபர்கள் இறக்கின்றனராம்.
4)அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஊரை கெடுப்பவர்கள்.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிலும் கறுப்பு ஆடுகள் உண்டு.இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மாதுரி இந்திய ரகசியங்களை பாகிஸ்தானின் உளவு ஏஜென்சியான ஐ.எஸ்.ஐ., க்கு விற்றதாக கைது செய்யப்பட்டது பழைய கதை.இப்போது உள்துறை ரகசியங்களை விற்றதாக ரவீந்தர் சிங் என்னும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.பாவம் பாரத அன்னை..இப்படி
எத்தனைப் பேரைத்தான் தாங்குவாள்?
5) இந்த ஆண்டும் தமிழகத்திற்குத் தேவையான மழை பெய்துள்ளது.அண்டை மாநிலம் தண்ணீர் தரவில்லை என்றால் என்ன? நான் இருக்கிறேன் உனக்குத் தேவையானதைத் தர என்கிறது இயற்கை.அந்த நீரை சரியானமுறையில் தேக்கி வைக்கும் சக்தி அரசுக்கு இல்லை..மழைநீரை சரியான முறையில் தேக்கி வைத்தால் நாம் தண்ணீருக்காக பிறரிடம் கை ஏந்தும் நிலையைத் தவிர்க்கலாம்
6)இந்தியாவில் 30 கோடியே 60 லட்சம் பேருக்கு மட்டுமே சுகாதாரமான கழிவறை உள்ளதாம்.65 கோடிக்கு மேல் இன்னும் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனராம்.
7) ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராகத் என்னும் 37 வயது பெண்ணிற்கு அபிதாப் நடத்தும் சோனி ஹிந்தித் தொலைக்காட்சியில் கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் 1 கோடி பரிசு கிடத்துள்ளதாம்.வாழ்த்துகள் ராகத்..பெண்களே முன்னேறுங்கள்.

Thursday, November 25, 2010

பீகார் வாக்காளார்கள் நம்மை ஏமாற்றிவிட்டனர்

காங்கிரஸ் கட்சிக்கு இது போதாத காலம்..

சசி தரூர்..ஐ.பி.எல்., ஊழல்
கல்மாடி காமன்வெல்த் ஊழல்.
ஆதர்ஷ் ஹவுசிங் ஊழல்
உச்ச நீதி மன்றத்தின் கண்டனங்கள்
ஸ்பெக்ட்ரம் ஊழலில் தாமதம்

என தலைவலிக்கு மேல் தலைவலியாய் வந்துக் கொண்டிருக்கும் வேளையில்..மகுடமாக பீகார் சட்டசபைத் தேர்தலில் நான்கே இடத்தில் வெற்றி.
ராகுலின் அதீத நம்பிக்கை தவிடுபொடியானது.
காங்கிரஸின் இந்தத் தோல்வியால் தி.மு.க., வட்டாரம் சந்தோசத்தில் இருக்கும்.
இளங்கோவன் வாயடைத்துக் கிடப்பார்.தங்கபாலுவின் சோனியா துதி குறையும்.இளைஞர் காங்கிரஸ் அடங்கி இருப்பர்.
பீகாரில் குறிப்பிட்ட அளவு வெற்றி பெற்றிருந்தாலும்..தமிழகத்தில் இவர்களை கையில் பிடித்திருக்க முடியாது.
சட்டசபைத் தேர்தலில் அதிக இடம்,கூட்டணி ஆட்சி,அமைச்சர் பதவி எல்லாம் பகல் கனவாகிவிட்டது.
பீகாரில் சற்று வெற்றி பெற்று..தமிழகத்திலும் கூட்டணியில் சேரக் கட்சியின்றி..தனித்து நின்று...ம்ம்..ம்ம்..அதைப் பார்க்க ஆவலாய் இருந்த நமக்கு..அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கித் தராத பீகார் வாக்காளர்கள் மீது சற்று கோபமே வருகிறது.

லிவிங் டுகெதர்

லிவிங்க் டுகெதர் பற்றி இப்போது இணயத்தில் நிறைய பதிவர்கள் எழுதி வருகின்றனர் பல மாறுபட்டக் கருத்துகளுடன்.
குஷ்பூ வழக்கில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் சொன்னதை நான் அன்று ஒரு இடுகையாக இட்டேன்..
அந்த மீள் பதிவு இதோ

ஆண்டவன் கிருஷ்ணனும்..ராதாவும் லிவிங் டுகெதர்

உச்சநீதி மன்றம்..திருமணமாகாத ஆணும்..பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பதை குற்றம் என்று சொல்ல முடியாது என தன் கருத்தை சொல்லியுள்ளது.

வயது வந்த இருவர் சேர்ந்து வாழ நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?இது குற்றமும் அல்ல..குற்றம் என்று சொல்லவும் முடியாது என்று உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியும்..மற்றும் இரு நீதிபதிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடவுளான கிருஷ்ணரும்..ராதாவும் கூட இதிகாசத்தில் ஒன்று சேர்ந்து தான் வாழ்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

நடிகை குஷ்பூ கற்பு பற்றி 2005ல் சில பத்திரிகைகளில்..கல்யாணத்திற்கு முன் உறவு வைப்பதை குறித்து தன் ஆதரவான கருத்தைத் தெரிவித்திருந்தார்.அதனால் கொதித்து (!!!!) எழுந்த மக்களால் 22 வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அவற்றை தள்ளுபடி செய்யச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு மீதான விசாரணையில்..தங்களது தீர்ப்பை தள்ளி வைத்துள்ள நீதிபதிகள்..மேற் கூறியவாறு தங்களது கருத்தையும் கூறியுள்ளனர்.

மேலும் நீதிபதிகள்..குஷ்பூவிற்கு எதிராக வாதாடும் வக்கீல்களிடம் 'இது எந்தப் பிரிவின் கீழ் குற்றம்' எனக் கேட்டதுடன்..ஆர்ட்டிகள் 21 ன் படி..வாழும் உரிமையையும்..சுதந்திரமும் ஒருவரின் அடிப்படை உரிமை என்பதையும் நினைவூட்டினர்.மேலும் அவர்கள் கூறுகையில் 'குஷ்பூ தன் தனிப்பட்டக் கருத்தைக் கூறியுள்ளார்....இது எந்த விதத்தில் உங்களை பாதித்துள்ளது..அவர் கூறியது அவரது தனிப்பட்டக் கருத்து.அது எந்த பிரிவின் கீழ் குற்றமாகிறது..குஷ்பூ..இப்படிக் கூறிய்தைக் கேட்டு எவ்வளவு பெண்கள் வீட்டை விட்டுச் சென்றனர்..எனக் கூற முடியுமா?' என்றும் கேட்டார்கள்.மேலும் வாதம் செய்பவருக்கு பெண் குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்டவர்கள் 'இல்லை' என்றதும் நீங்கள் எந்த வகையில் இதனால் பாதிக்கப் பட்டுள்ளீர்கள்.. என்றும் கேட்டனர்.

உச்ச நீதி மன்றத்தில் இவ்வழக்கிற்காக ஆஜரான குஷ்பூ..வக்கீல்கள் அமரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

இச்சமயத்தில் நான் சமீபத்தில் படித்த ஒரு செய்தியையும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்..

இப்போதெல்லாம்..திருமணமாகி..விவாகரத்து பெறும் தம்பதிகள்..தங்கள் நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்து..மன மகிழ்வோடு நட்போடு பிரிகின்றனர்..'இனி நாம் கணவன் மனைவி இல்லை..நண்பர்கள்' என்று.

கணவனும் ..மனைவியும் நண்பர்கள் இனி என பிரியும் போது..நண்பர்கள்..கணவன்..மனைவியாக திருமணமாகாமல் லிவிங்க் டுகெதரும் தவறு இல்லை போலும்!!

Wednesday, November 24, 2010

மரண அடி வாங்கிய காங்கிரஸ்

கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆனது என ஒரு சொலவடை உண்டு..

காங்கிரஸ் கட்சி விஷயத்தில் அது நடந்திருக்கிறது.

ஏதோ உத்தர பிரதேசத்தில் தனித்து நின்று சில தொகுதிகள் வென்றதும்..இனி நாம் தான் என்ற இறுமாப்பும்..பேச்சில் ஆணவமும் கொண்டு திகழ்ந்தது காங்கிரஸ்.

அவர்களுக்கு சரியான பாடம் கற்பித்துவிட்டது பீகார்..

பீகார் மக்களே..காங்கிரஸிற்கு சரியான பாடம் புகட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதன் ஆட்டம் அதிகமாய் இருந்தது.திராவிடக் கட்சிகளும் அதன் துணையிருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்னும் எண்ணத்தில் உள்ளன.அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என பீகார் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அங்கும் மூன்று அணிகள்..

நிதிஷ்குமார்..பி.ஜே.பி., அணி ஒரு புறம்

லாலு, பாஸ்வான் அணி ஒரு புறம்

காங்கிரஸ்

சாதாரணமாக இந்நிலையில் எந்த ஒரு அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே அனைவருக்கும் தோன்றும்..ஆனால் நிதிஷ்குமாருக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளனர் மக்கள்.

பீகாரில்..முடிவிற்குப் பிறகு தமிழகத்தில் பேரத்தை ஆரம்பிக்கலாம் என்ற காங்கிரஸின் எண்ணம் தவிடு பொடியாய்விட்டது.

திராவிடக் கட்சிகளே..மீண்டும் சொல்கிறேன் காங்கிரசை கழட்டிவிடுங்கள்..தவிர்த்து உங்களை நம்பி வரும் மற்ற கட்சிகளுடன் கூட்டு வையுங்கள்.கண்டிப்பாக மக்கள் ஆதரவு உங்களுக்குக் கிட்டும்.

காங்கிரஸ்தான் உங்கள் கூட்டணியில் வேண்டும் என்றால்..உங்களை காப்பாற்ற முடியாது.

கடைசி நேர பேரம் பலனளிக்காது.

Tuesday, November 23, 2010

திரைப்பட இயக்குனர்கள்-9 C.V.ஸ்ரீதர்

இந்தத் தொடரில் இன்று இயக்குநர் ஸ்ரீதர் அவர்களைப் பற்றி பார்ப்போம்.

ஸ்ரீதர்...கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் திரையில் மக்களை..குறிப்பாக இளைஞர்களை தன் படங்களின் மூலம் கட்டிப் போட்டவர்.

ஆகஸ்ட் 16, 1933 ல் மதுராந்தகம் அருகே ஒரு கிராமத்தில் பிறந்த இவர்..திரையுலகில் பிரவேசிக்க எண்ணி 'ரத்தபாசம்' என்னும் கதையை நாடகமாக்கி டி.கே.சண்முகத்திடம் எடுத்துச் சென்றார்.அந்த ஸ்கிரிப்டைப் படித்து அசந்த ஷண்முகம்..அதை நாடகமாகவும், பின் திரைப்படமாகவும் எடுத்தார்.பின் ஸ்ரீதர் பல படங்களுக்கு கதை,வசனம் எழுதினார்.அவ்ற்றில் குறிப்பிடத்தக்கவை..எதிர்பாராதது,அமர தீபம் ,புனர்ஜென்மம் ஆகியவை

பின் 1959ல் கல்யாணபரிசு மூலம் இயக்குநர் ஆனார்.அந்த நாளில் காதலை மிகவும் நளினமாகவும்..உன்னதமாகவும் காட்டிய பெருமை இவரையேச் சேரும்.ஆதலால் அன்றைய இளைஞர்கள் விரும்பிய இயக்குநராய் திகழ்ந்தார்.

1961ல் பின் தன் சொந்த நிறுவனமான 'சித்ராலயா'வைத் துவக்கி..தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என பல படங்களை இயக்கினார்.

காதலிக்க நேரமில்லை..தமிழ்த்திரையுலகு இருக்கும் வரை பேசப்படப்போகும் நகைச்சுவைப் படம்..இது போன்ற படம் ஒன்று இதுவரை மீண்டும் வரவில்லை எனலாம்.பாலையா,நாகேஷ்,முத்துராமன்,ரவிசந்திரன் (அறிமுகம்),காஞ்சனா(அறிமுகம்) ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் இந்தியில் 'ப்யார் கியே ஜா' என்ற பெயரில் வந்து வெற்றி பெற்றது.ஹிந்தியில் கிஷோர்குமார் நடித்தார்.

பின் நெஞ்சில் ஓர் ஆலயம்,தேன்நிலவு,நெஞ்சம் மறப்பதில்லை என பல வெற்றிபடங்களை அளித்தார் ஸ்ரீதர்.அவரின் மற்றைய குறிப்பிடத்தக்க படங்கள்..

ஊட்டி வரை உறவு

சிவந்த மண்

அவளுக்கென்று ஒரு மனம்

போலீஸ்காரன் மகள்
கொடிமலர்

சுமைதாங்கி

வெண்ணிற ஆடை (ஜெ நடித்த முதல் தமிழ்ப் படம்)

விடிவெள்ளி

இளைமை ஊஞ்சலாடுகிறது

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

நினைவெல்லாம் நித்யா

துடிக்கும் கரங்கள்

ஓடை நதியாகிறது

ஆலய தீபம்

தென்றலே என்னைத் தொடு

கலைக்கோயில்

ஆகியவை
ஹிந்தியில் பியார் கியே ஜா,நஜ்ரானா,தில் ஏக் மந்திர்,தர்த்தி ஆகியவற்றை குறிப்பிடலாம்.
இவருக்கென்று ஒரு தனி டீமே இருந்தது...இசை விஸ்வனாதன்ராமமூர்த்தி,ஆர்ட் கங்காஒளிப்பதிவு வின்சென்ட்,எடிட்டிங் ஷங்கர்,பாட்ல்கள் கண்ணதாசன்,இவருக்கு வசன உதவியாளராக சித்ராலயா கோபு,துணை இயக்குனராக சி.வி.ராஜேந்திரன் (பின் ராஜேந்திரனும் பிரபல இயக்குனர் ஆனார்) ஆகியோரைச் சொல்லலாம்.எம்.ஜி.ஆரை வைத்து மீனவ நண்பன்,உரிமைக் குரல் ஆகிய படங்களை இயக்கினார்.
-

பின் கடைசி சில வருடங்கள் பக்கவாத நோயால் அவதிப் பட்டு வந்தவர்..ஒருமுறை ரஜினி உதவுவதாகக் கூறிய போதும்..உங்கள் உதவி வேண்டாம்..நான் மீண்டு வருவேன்..உங்கள் கால்ஷீட் கொடுங்கள் போதும்.. நானே தயாரித்து..இயக்குகிறேன் என்றார்.

ஆனால் குணம் அடையாமலேயே 2008ல் மறைந்தார்.
அவர் படத்திலிருந்து ஒரு பாடல்




Monday, November 22, 2010

குறள் இன்பம் - 2

வள்ளுவனின் சொல் வன்மை, சொல்லழகு ஆகியவற்றிற்கு எடுத்துக் காட்டாய் மூன்று


  குறள்களை இந்த இடுகையில் பார்ப்போம்.



கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க

முன்னின்று பின்னோக்காச் சொல்



புறங்கூறாமையில் நான்காவது குறள்.கண்,கண்,சொல்,சொல் என்னும் சொற்களை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளர்.

நேருக்கு நேர் ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாமாம்..ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றி குறை கூறுவது தவறு...என்கிறார்.







யாதனின்,அதனின்..என்றே நான்கு சொற்களை பிடித்துவிடுகிறது துறவு அதிகாரத்தில் முதல் குறள்



யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்



ஒருவன் பலவகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும் ,குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம் அவனை அணுகுவதில்லை



பொய்யாமை,செய்யாமை என்னும் வார்த்தை விளையாட்டு கீழ் கண்ட குறளில்..



பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று



வாய்மையில் ஏழாம் குறள்

செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைபிடிக்கும் அற வழி நன்மை தரும்.

மூன்று

Sunday, November 21, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல்..தி.மு.க., விற்கு பின்னடைவா

ஸ்பெக்ட்ரம் ஊழல் வரலாறு காணாத ஊழல் என்று சொல்லப் படுகிறது.அதே சமயம் அது நாட்டிற்கு உண்டான இழப்பு என்பதும்..அந்த இழப்பினால் கோடி கணக்கில் சம்பாதித்த தனி நபர்கள் விவரங்களும்..அவர்களுக்குக் கிடைத்த பங்கும் வெளிக்கொணர முடியுமா? எனத் தெரியவில்லை.



சாதாரணமான மனிதன் சில நூறு ரூபாய் கட்டவில்லையென்றாலே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வருமானத் துறை.பல ஆண்டுகளூக்கு முன்னரே...ஒரு மத்திய அமைச்சராய் இருந்தவர் 10 லட்சத்திற்கு மேல் வருமானவரி கட்ட வேண்டியதிருந்தும்..அவர் அதை தான் மறந்து விட்டதாகக் கூறிய போதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.மக்களும் அதை சட்டை செய்யாமல் அவரை துணை பிரதமராக்கினர்.அப்படி ஒரு நிலை நாட்டில் தொடரும் போது..இந்த ஊழலிலும் வருமானவரித் துறை செயல்படுமா எனத் தெரியவில்லை.



அப்படியே செயல்பட்டாலும்..அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து..வருஷக்கணக்கில் தண்டனைக்குக் காத்திருக்க வேண்டியுள்ளது.நம் நாட்டு சட்ட திட்டங்கள் அப்படி.அதற்குள் அடுத்த தலைமுறை ஊழல் சாம்ராஜ்யத்தில் முடி சூட்டிக் கொள்ள தயாராய் விடும்.எனக்குத் தெரிந்து இது நாள் வரை ஊழல் செய்த அரசியல்வாதிகள் யாருக்கும் சட்டப்படி தண்டனைக் கிடைத்ததில்லை.



சரி..தலைப்புக்கு வருவோம்..



தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில்..தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜா மீது வரலாறு காணா ஊழல் குற்றச்சாட்டு.இது அக்கட்சியை பாதிக்குமா என்றால்..



கண்டிப்பாக பாதிக்காது..ஏனெனில்..இன்று அனைத்து வாக்காளர்களுக்கும் தெரியும்..நாட்டில் ஊழல் இல்லாத கட்சியும்..ஊழல் செய்யா அரசியல்வாதியும் கிடையாது என்று.ஆகவே ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஊழல் பெரிய காரணமாய் அமையாது என்றே தோன்றுகிறது.



என்ன..இந்த அளவில் வரலாறு காணா உழல்தானே தவிர நாட்டை அயலார்க்கு விற்றுவிடும் அளவு ஊழல் இல்லையே என மக்கள் ஆறுதல் அடைவர்.



நம் நாட்டில் இன்று ஊழல் செய்பவர்,லஞ்சம் கொடுப்பவர்,லஞ்சம் வாங்குவோர்,பேராசைக்காரர்கள் ஆகியோர் பெரிகிவிட்டனர்.இவர்கள் செய்யும் காரியங்களைக் கண்டு..இவர்கள்தான் வெட்கப்படவில்லையென்றாலும்..அப்படிப்பட்டவர்களையே தேர்ந்தெடுக்கும் மக்களுக்கும் வெட்கமில்லை . என்ன செய்வது..



காலப்போக்கில்..ஊழல் செய்யாத நபர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால்..அவர் பிழைக்கத் தெரியாதவர் என மக்களால் புறக்கணிக்கும் காலம் வந்துவிடும் போலயிருக்கிறது.ஊழல் வேட்பாளர்களின் பிரதான தகுதி ஆகிவிடும் போல இருக்கிறது.


ஆகவே..மக்களே..ஊழலில் அரசியல்வாதிகளின் பங்கு போக சிறிதளவு உங்கள் வாக்கிற்கு என அவர்கள் அளிக்கக் கூடும்.அதைப் பெற்றுக்கொண்டு..மனசாட்சிக்கு பயந்து,யார்  அதிகம் கொடுக்கிறார்களோ  அவர்களுக்கே நீங்கள்  வாக்களியுங்கள்.

Saturday, November 20, 2010

சென்னை நகரில் காணாமல் போன திரையரங்குகள்

சென்னையில் மவுண்ட் ரோட் என அழைக்கப் பட்ட அண்ணாசாலையில் ஒரு காலத்தில் தனித்திரையரங்குள் எவ்வளவு இருந்தன.காலப்போக்கில், அவை எல்லாம் மறைந்து, வர்த்தக நிறுவனங்களாகவும்,அலுவலங்களாகவும் மாறிவிட்டன.ஆயினும் அத்திரையரங்குகளும்..அவற்றுள் நான் பார்த்த திரைப்படங்களும் இன்றும் நினைவை விட்டு அகலாதவை.

சென்னையில் மறைந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்

நியூ எலிஃபின்ன்ஸ்டன்..

இந்த திரையரங்கு அண்ணா சிலை அருகே அண்ணாசாலையில் இருந்தது.இங்கு சாதாரணமாக ஆங்கிலப் படங்களும்,மலையாளப் படங்களுமே வெளியாகும்.

Sleeping beauty,absent minded professor ஆகிய படங்களை இத்திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.மலையாளப் படமான 'செம்மீன்' இங்குதான் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது

பாரகன்-

வாலாஜா சாலையில் அமைந்திருந்தது.பல தமிழ்ப்படங்களை இத் திரையரங்கில் பார்த்துள்ளேன்.அவற்றில் பசுமையாய் என் நினைவில் உள்ள படம் 'புதிய பறவை'.இந்தப் படம் வெளியான போது..அந்த தியேட்டரில் அனைத்து இருக்கைகளும் சிவாஜி அவர்களாலேயே புதுப்பிக்கப் பட்டு புதுப் பொலிவுடன் திகழ்ந்தது.தொடர்ச்சியாக 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடியது.இப்போது அந்த இடத்தில் அரிகந்த் பில்டர்ஸ் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வந்து விட்டது



பிளாஸா..

அண்ணாசாலையில் சுகுண விலாச சபா இருக்குமிடத்தின் அருகில் இருந்த திரையரங்கு...சாதாரணமாக எம்.ஜி.ஆர்., படங்கள் பல இங்கு வரும்.தவிர்த்து அவ்வப்போது குறைந்த முதலீட்டு படங்கள் இங்குதான் வெளியிடப்படும். நான் இங்கு பார்த்த படங்களில் ஒன்று 'பணத்தோட்டம்"



நியூகுளோப்/அலங்கார்

அண்ணாசாலையில் எல்.ஐ.சி.,அருகே நியூகுளோப் திரையரங்கு இருந்தது.இங்கு ஆங்கிலப் படங்கள் வெளியாகும்.'House of wax' இங்குதான் பார்த்தேன்.பின் அத்திரையரங்கு இடித்துக் கட்டப்பட்டு 'அலங்கார்;'என்ற திரையரங்கு வந்தது.இதில் நான் பலபடங்கள் பார்த்திருந்தாலும் நினைவில் நிற்கும் படம் 'மெல்லத் திறந்தது கதவு'



வெலிங்டன்

இன்று ஜெனரல் பேட்டர்ஸ் தெரு ஆரம்பத்தில் உள்ள வெலிங்டன் பிளாசா இருந்த இடத்தில் வெலிங்டன் திரையரங்கு இருந்தது.ஏ.வி.எம்., படங்கள் இங்கு பெரும்பாலும் வெளியாகும்.ஜெமினியின் ஔவையார்,வாழ்க்கைப்படகு ஆகியவை இங்கு வெளியானது.ஏ.வி.,எம்.,மின் சர்வர் சுந்தரம்,அன்னை ஆகிய படங்களும்..கலைஞரின் பூம்புகாரும் இத் திரையரங்கில் நான் பார்த்த நினைவில் நின்ற படங்கள்

சித்ரா




அண்ணாசாலையிலிருந்து புதுப்பேட்டை போகையில் பாலம் தாண்டி அமைந்திருந்த திரையரங்கம் சித்ரா..M.G.R., படங்கள் இங்குதான் வெளியாயின.தேவர் தயாரித்த படங்களில் பெரும்பான்மை இங்குதான் வரும்.தவிர்த்து பாசமலர் இந்த திரையரங்கில் தான் ஓடியது.இதயக் கமலம் இங்குதான் வெளியாகியது.தேவரைப் பொறுத்தவரை இது ஒரு ராசியான திரையரங்காய் அமைந்திருந்தது.இன்று பெரிய வர்த்தகக் கட்டிடம் இந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளது



ஆனந்த், லிட்டில் ஆனந்த்



சமீப காலத்தில் மூடப்பட்ட திரையரங்கம்.சாந்தி திரையரங்கை உருவாக்கிய உமாபதி..அதை சிவாஜியிடம் ஒப்படைத்தபின் கட்டிய திரையரங்கு இது.ஆரம்ப காலங்களில் ஆங்கிலப் படம் மட்டுமே திரையிடப்பட்டது.குட்,பேட்,அக்லி., ஃபைவ் மேன் ஆர்மி ஆகியவை இங்கு பார்த்தேன்.ராஜ ராஜ சோழன் ..உமாபதியால் தயாரிக்கப் பட்ட முதல் சினமாஸ்கோப் படம் இங்கு திரையிடப் பட்டது.

லிட்டில் ஆனந்த் என்னும் மினி தியேட்டர் ஆனந்தின் மாடியில் இருந்தது.ஆராதனா என்னும் ஹிந்தி படம் சக்கைப் போடு போட்ட படம் இத் திரையரங்கில்தான்



சஃபைர்,புளு டைமண்ட்,எமெரால்ட்



கிட்டத்தட்ட இதுதான் முதல் மல்டிபிள் தியேட்டர்காம்ப்ளக்ஸ்

எனலாம்.கிளியோபாட்ரா, லாரென்ஸ் ஆஃப் அரேபியா ஆகிய படங்கள் சஃபைரில் வந்தன.எமெரால்டில் ஹிந்தி படங்களும்,தமிழ் படங்களும் வெளியாகும்.புளு டைமண்ட் திரையரங்கில் ஆங்கிலப் படங்கள்..இதில் ஷோ டைம் எனக் கிடையாது..எப்போது வேணுமானாலும் போகலாம்.தொடர்ந்து படம் ஒடும்..எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம்.இந்த இடம் இப்போது தரைமட்டம்.அ.தி.மு.க., அலுவலகத்திற்காக வாங்கப்பட்டு..பின் ராசியில்லா இடமாகக் கருதப்பட்டு வீணாய் கிடக்கிறது.

கெயிட்டி




இத்திரையரங்கம் பழமையான ஒன்று.தியாக பூமி,போன்ற படங்கள் இங்கு வெளியாகியுள்ளன.எஸ்.பாலசந்தரின் பொம்மை இங்குதான் ஓடியது.இத்திரையரங்கு சமீபத்தில் மூடப்பட்டு...வர்த்தகக் கட்டிடம் வர உள்ளது

(தொடரும்)

Friday, November 19, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (19-11-10)

இன்று தேவையான அனைத்து செய்திகளையும் கூகுளாண்டவரிடம் தேடிப் பெறாலாம்.கூகுள் கம்பெனியின் worth 2010 ஜனவரி 1ஆம் நாள் அன்ரு 220 பில்லியன் டாலர்களாம்.
2)பயங்கரவாதிகளால் மிகவும் மோசமாக தாக்குதலுக்குள்ளாகும் நாடுகளில் முதலிடத்தை சோமாலியாவும், இரண்டாம் இடத்தை பாகிஸ்தானும் பிடித்துள்ளன.196 நாடுகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்தியா 15ம் இடத்தில் உள்ளதாம்
3)2G ஸ்பெக்ட்ரம் அலைக்காற்று ஒதுக்கீடு பெற்ற 122 நிறுவனங்களில் தகுதி குறைந்த 85 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் ரத்து செய்யப் படுகின்றன
4)இந்தியா சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் கருப்புப் பணமாக வெளிநாடுகளில் 20 லட்சம் கோடிக்கு மேல் டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாம்.இதை பொருளாதார நிபுணர் தேல்கர் என்பவர் வெளியிட்டுள்ளார்.இதை எண்ணால் எழுதினால் 20,556,848,000,000
5)ஊழல் புகார்கள் வந்தாலும்..அதில் ஈடுபட்டவர்களைத் தெரிந்தாலும்..அவர்கள் பதவி இழந்து..மீண்டும் பதவியில் அமர்கிறார்கள்.வருமானவரித்துறை இவர்களிடம் விசாரித்து..பயானாளிகள் வசமிருந்த கணக்கில் வராத பணத்தை வெளிக்கொண்டுவந்துள்ளதா.ஊழலில் மாட்டிய அரசியல்வாதிகள் இதுவரை சிறைதண்டனை அனுபவித்துள்ளார்களா? உண்மைத் தமிழன் மாதிரி ஆட்கள் விவரம் தெரிவிக்கவும்.
6)ஏர்டெல் நிறுவனம் 19நாடுகளில் செயல்படுகிறது.இந்நிறுவனத்திற்கு உலகளவில் 20 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனராம்.இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 3Gவழங்க உள்ளனராம்
7)ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்தும் போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அமெரிக்க விமானப்படை அதன் வீரர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளதாம்.இந்த இணையதளத்தில் தற்போது சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களின் மூலம் எதிரிகள் போர்பகுதிகளில் விமானப் படை வீரர்கள் இருக்கும் இடத்தை சரியாகக் கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
8)கொசுறு ஒரு ஜோக்
காமென்வெல்த் போட்டியில் ஊழல் நன்கு விளையாடியுள்ளதாம்..
அப்படியா.. எவ்வளவு தங்கப் பதக்கம் வென்றது

Thursday, November 18, 2010

இல்லை ஆனால் இருக்கிறான் (அரை பக்கக் கதை)

அவன் பெயர் பிரபஞ்சன்..

அவனை நம்பினவர்கள் கெடுவதில்லை என்பார்கள்

வேண்டியவர், வேண்டாதவர் என்று பாராது அனைவருக்கும் பிரபஞ்சன் நன்மையே செய்து வந்தான்.

அவனால் நன்மை அடைந்தவர்களில்..அதுவும் அதிக நன்மை அடைந்தவர்களில் அவனும் ஒருவன்.ஆனால் அதை அவன் ஒப்புக் கொள்ள மாட்டான்.பிரபஞ்சனா ..அப்படி யாரும் இல்லை..என்பான்.

அப்படிச் சொல்லியபடியே பிரபஞ்சனால் முடிந்த நன்மைகளைப் பெற்றான்.

ஒருநாள்..இருவருக்கும் பொதுவான நண்பன் பிரபஞ்சனைப் பார்த்து..'அவன் நீ இல்லை என்கிறான்..ஆனால் நீ அவன் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகச் சொல்கிறானே?' என்றான்.

உடன் பிரபஞ்சன் அந்த பொதுவான நண்பனைப் பார்த்து 'அவன் சொல்வதில் உள்ள முரண் உனக்குத் தெரியவில்லையா?நான் இல்லை என்னும் அவன் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்கிறான் என்றால் என்ன பொருள் நான் இருப்பது அவனுக்குத் தெரியும்..அதைச் சொல்ல வெட்கப்படுகிறான் என்றுதானே பொருள்.தேவையில்லா ஒரு வெட்கம்..இவ்வளவு நடந்தபின் யார் என்ன சொல்லப் போகிறார்கள்..என்ற தைரியத்தை மட்டுமே என்னால் அவனுக்குக் கொடுக்க முடியவில்லை' என்றான் .



டிஸ்கி-இந்தக் கதைக்குள் எந்த உள்குத்தும் இல்லை..அப்படியிருப்பதாக நீங்களே நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல

அவளின்றி நானில்லை (கவிதை)

மனதைக் கவர்ந்தவள்

சிவந்த மேனியாள்

அன்றன்று

அலுவலகம் செல்கையில்

தரிசனம் தருபவள்

நேரம் தவறினால்

போக்குக் காட்டிடுவாள்

கிளம்பும் முன்

அழகாக குரல் கொடுப்பாள்

வாழ்வில்

அவளின்றி நானில்லை

நானின்றி அவளுண்டு

தொடர்வண்டி

பெண்பாலாமே

Wednesday, November 17, 2010

மலையும்..மடுவும் (கவிதை)

மஞ்சள்


மஞ்சள் முகம்

மஞ்சள் மங்கல நீராட்டு

மஞ்சக்காணி என

மங்கலகரமானது

வேலி தாண்டும்

செய்தித்தாள்களை

மஞ்சள் பத்திரிகை

என்பதேன்..

மலையளவு உயர்த்தி

மடுவில் போடுவதேன்

Tuesday, November 16, 2010

சவால் சிறுகதைப் போட்டியும்..பேட்டியும்..

சவால் சிறுகதைப் போட்டியில் கலந்துக் கொண்ட என்னை ..பேட்டி எடுப்பதில் சர்ச்சையைக் கிளப்பும் பதிவர் ஒருவர் பேட்டி கண்டார்.அவர் கேட்ட கேள்விகளும்..என் பதிலும்..



கேள்வி- உங்கள் கதை 'வெல்டன் காமினி' ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை

பதில்-'வெல் டன்' ஆக இல்லாததால்

கேள்வி- அதற்கான விமரிசனத்தைப் பாருங்கள்..

(ஒரு துண்டுச் சீட்டைக் காட்டுகிறார்)

"துப்பறியும் கதைக்கான கரு என்ற அளவில் ஒகே.நடை மிகவும் தொய்வாக இருக்கிறது.இன்னும் விறுவிறுப்பாக இருக்கலாம்.முதலில் நடிகரைப் பற்றி சொல்லிவிட்டு பிறகு கிளைமாக்ஸில் காமினி கதையுடன் இணைத்திருப்பது நன்றாக இருக்கிறது.நல்ல முயற்சி'

இதைப் பற்றி..

பதில்-நடிகர் வேறு செய்தி..காமினி கதை வேறு அல்ல..காமினிக் கதையில் நடிகரும் ஒரு பாத்திரம்..இதை நீதிபதிகளுக்கு புரியவைக்காதது என் குற்றம் என்றே தோன்றுகிறது

கேள்வி-உங்கள் கதை சிறந்த 15ல் கூட வரவில்லையே

பதில்-கடைசியிலிருந்து பாருங்கள்..கண்டிப்பாக மூன்றுக்குள் இருக்கும்

கேள்வி-மிகவும் தொய்வாக இருக்கிறது என்று..

பதில்-அதற்குத்தான் அதை எழுதும் போதே தொய்வு வீழாமல் சாய்த்து பிடிக்க நாயகியின் பெயரை சாயாசிங் என வைக்கலாமா? எனக் கேட்டேன் பரிசலிடம்.ஆனால் அவர் கண்டிப்பாக காமினி என்றிருக்க வேண்டும்.உங்களுக்காக விதிமுறையை மாற்ற முடியாது என்று சொல்லி விட்டார்

கேள்வி-விறுவிறுப்பு பற்றி

பதில்-விறுவிறுப்பாய் இருக்க வேண்டும் என்றுதான் 420 ஜர்தா பீடாவை வாயில் குதப்பிக் கொண்டே எழுதினேன்..420 தன் 420 ஐக் காட்டிவிட்டது

கேள்வி-நல்ல முயற்சி என்று சொல்லியுள்ளார்களே ..அது பற்றி

பதில்-கெட்ட முயற்சி என்று ஒன்று இருந்தால் ..அதைப் பற்றிச் சொன்னால்..இது பற்றி சொல்கிறேன்

கேள்வி- நீதிபதிகள் பற்றி..

பதில்-அப்துல்லா..அதிர்ஷ்டசாலி...அருகிலேயே அகர்வால் கண் மருத்துவமனை இருக்கிறதே

கேள்வி-கடைசியாக ஏதேனும் போட்டி பற்றி சொல்ல வேண்டுமா?

பதில்-போட்டியை நடத்தியவர்கள்,நீதிபதிகள்,வெற்றி பெற்றோர்,கலந்துக் கொண்ட அனைத்து பதிவர்கள் அனைவருக்கும் நன்றி..(ஏனெனில் நானும் இதில் கலந்துக் கொண்டதால்..எனக்கும் அவர்கள் நன்றி சொல்லியுள்ளதால்..ஹி..ஹி..கிவ் அண்ட் டேக் தான்)

ராஜாக்கள் (கவிதை)

பாரதத்தில்



அமைச்சர்கள்தான்



ஊழல்வாதிகள்



என்றார்கள்



இல்லை..இல்லை..



ராஜாக்களும்



ஊழல்வாதிகள்தான்

Monday, November 15, 2010

ஊழல் (கவிதை)


                                                  (புகைப்படம் நன்றி இணையம் )

அலறினேன்



பிதற்றினேன்



தவமிருந்தேன்



இறைவன் தோன்றி



வரமளித்தேன் கேள் என்றான்



ஊழலற்ற சமுதாயம் என்றிட்டேன்



அப்படியே ஆக



எவ்வளவு வெட்டுவாய்



எனக்கென்றிட்டான்

Sunday, November 14, 2010

வாலிப கவிஞர் வாலியின் காதல் கவிதை...

20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் என்று கவிஞர் வாலி புகழாரம் சூட்டினார்.

கவிஞர் வாலி எழுதிய திரையிசைப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடல்களின் தொகுப்பான "வாலி - 1000' என்ற நூலின் வெளியீட்டு விழா, கவிஞர் வாலியின் 80-வது பிறந்தநாள் விழா ஆகியவை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
அதை ஒட்டி வாலி  பற்றி எனது ஒரு இடுகை (மீள் பதிவு )

வாலி...திரைப்பட பாடலாசிரியர்..கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அசைக்க முடியா சக்தியாய் இருக்கிறார்.அன்று..கண்ணதாசனையும் சந்தித்தவர்..இன்றைய இளம் பாடலாசிரியர்களுக்கும் சிம்ம சொப்பனமாய் இருப்பவர்.

அவர்..ஆரம்பகால ..காதல் கடிதம் எப்படி இருந்தது தெரியுமா?

பேசும் தெய்வம் படத்தில் வந்த அந்த பாடல்...

நான் அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல
எண்ணம்
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

எழுதி அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல
எண்ணம்
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்


என்னவொரு...எளிமையான அருமையான காதல் கடிதம்...

அவரின் துரதிருஷ்டம்..அந்நாளில் இவரின் பல பாடல்கள்..கண்ணதாசன் எழுதியவை என மக்கள் நினைத்ததுதான்..அப்படி ஒரு பாடல்
இருமலர்கள் படத்தில் வரும்..'மாதவி பொன்மயிலாள்"

பட்டுக்கோட்டையாரும்...இவர் எழுத்தில் ஒளிந்துக் கொண்டிருந்தார் என நிரூபிக்கும் பாடல்..;நான் ஆணையிட்டால்.

அதில் வரும் வரிகள்

ஒரு தவறு செய்தால்-அதை
தெரிந்து செய்தால்-அவன்
தேவன் என்றாலும் விடமாட்டேன்-உடல்
உழைக்க செய்வேன் அதில்
பிழைக்கச் செய்வேன் அவர்
உரிமைப் பொருள்களைத்
தொடமாட்டேன்.

வாலி...ஏற்ற பெயர்.அவர் எதிராளியின் பலம் கூட அவரைப் பார்த்தால்..பாதி அவருக்கே போய்விடும்..இது நிதர்சனமான உணமை

Saturday, November 13, 2010

குறள் இன்பம் - 1

திருக்குறள்களில் காணப்படும் பல சீரிய கருத்துகள், வள்ளுவர் பயன்படுத்தியுள்ள சொற்கள்,அடுக்குச் சொற்கள்,தமிழ் விளையாட்டு ஆகியவற்றை..நான் ரசித்தவற்றை ஒரு தொடர் பதிவாக எழுத உள்ளேன்.வாரம் ஒரு இடுகை.படிக்க படிக்க தேன்.. குறளதில் சொல்லப்படாததே இல்லை.ஆகையால் இவ்விடுகைகளை விடாமல் நண்பர்கள் படித்து ஆதரவு அளிப்பர் என நம்புகிறேன்.நன்றி.

சொல் விளையாட்டு பல கவிஞர்களுக்கு கை வந்த கலை.
திருவள்ளுவரும் தன் ஒன்றே முக்கால் அடி குறள்களில் பலவற்றில் இதைக் கையாண்டுள்ளார்.
வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் மழையின் சிறப்பை இப்படிக்கூறுகிறார்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

இந்தக் குறள் சாதாரணமாக அனைவருக்கும் தெரியும்.ஏதேனும் ஒரு திருக்குறளைக் கூறு என யாரேனும் சொன்னால், தம் மேதாவித் தனத்தைக் காட்ட உடன் இந்தக் குறளைச் சொல்பவர்கள் அதிகம்.தப்பாவேனும் சொல்லி விடுவார்கள்.ஆனால் எத்தனைப் பேருக்கு இதற்கான பொருள் தெரியும் எனத் தெரியாது.

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத் தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.

அடுத்து ஒரு குறளைப் பார்ப்போம்

தீவினையச்சம் என்னும் அதிகாரத்தில் இரண்டாம் குறள்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்ச வேண்டும்.

(தொடரும்)

Friday, November 12, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (12-11-10)

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 7.47 லட்சம் அளவுக்கு மின்சாரத்தை அதிகாரப்பூர்வமாய் 10,ஜன்பத் இல்லத்தில் செலவிட்டுள்ளார்.



2)முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் எழுதிய டெஷிஷன் பாயிண்ட்ஸ் (decision Points) என்ற புத்தகத்தை ராண்டம் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.வெளியான முதல் நாளே 2,20,000 பிரதிகள் விற்றுவிட்டதாம்.ஈ மெயிலில் மட்டுமே 50000 பிரதிகள் விற்றதாம்



3)மின்னணு பொருள் தயாரிப்பில் உள்ள சீன நிறுவனம் D C L கார்ப்பரேஷன் இந்தியாவில் 135 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைத்து விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாம்



4)சென்ற வாரம் வாஷிங்டன் அருகே ஒரு ஆப்பிள் பண்ணைக்குச் சென்றேன்.ஆப்பிள் பிக்கிங் என்று பெரும் கூட்டம் வார இறுதி நாட்களில் வருகின்றது.மரங்களில் ஆப்பிள்கள் காய்த்து தொங்குகிறது.ஆயிரக்கணக்கில் கீழேயும் உதிர்ந்துள்ளன.மரத்திலிருந்து நமக்குத் தேவையான ஆப்பிள்களைப் பறித்துக் கொண்டு வரும் போது அதற்கான விலையை (விலை குறைவு) செலுத்திவிட்டு வர வேண்டும்.குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பறிக்கும் போது..அந்த ஆப்பிள்களை விட குழந்தைகளின் கன்னங்கள் கவர்கின்றன.இந்தியாவிலும் ஒருமுறை நகிரியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மாந்தோப்பிற்கு சென்றுள்ளேன்.அங்கு தோப்பினுள் எவ்வளவு மாம்பழம் வேணுமானாலும் இலவசமாய் சாப்பிடலாம்.உடனே விலாசம் கேட்டு பின்னூட்டம் வேண்டாம்.இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.






5)நாம் உயர்வாக நினைத்தவர்களெல்லாம்..சிறு சர்ச்சை,மாறுபட்டக் கருத்து என வரும்போது பேசும் பேச்சும்,வார்த்தைகளும் 'சே..இவர்களை உயர்வாய் நினைத்தோமே' என ஒரு சலிப்பை நமக்கு ஏற்படுத்தி விடுகிறார்களே..ஏன் ..அவர்கள் நட்பு வேண்டாம் என நினைத்தால் உடன் 'காற்றில் மாசு கலந்து விட்டது என்பதற்காக காற்றே வேண்டாம்..'என சொல்ல முடியுமா என்றும் தோன்றுகிறது



6)நியாயம் வெற்றி பெறும்என நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம்.அது தவறு..அநியாயங்களை எதிர்த்து நாம் போரிட்டால் தான் நியாயங்களால் வெல்ல முடியும்.
பெறும்

சம்ஹாரம் (கவிதை)


நள்ளிரவு




கடற்கரை நீரில்



தண்ணென



தனியனாய்





முகம் பார்த்திருக்க



ராட்சத அலைகள்



நிழலை



அணு அணுவாய்த் தின்ன



செங்கதிரோன் தோன்றி



நிஜத்தை அழித்தான்

Thursday, November 11, 2010

மத்திய அரசுக்கு 'ஜெ' திடீர் ஆதரவு

மத்திய மன்மோகன்சிங் அரசுக்கு 'ஜெ' திடீரென ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், அதன் ஏலம் மூலம் நாட்டுக்கு 1.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்விவகாரத்தில் காங்கிரஸ்-தி.மு.க., வினரிடையே மோதல் ஏற்படலாம் என்ற நிலையில், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டால், ஒரு அமைச்சர் கூட பணியாற்ற முடியாது என தி.மு.க., கூறியுள்ளது.
'ஓடு மீன் ஓட..உறு மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு' போல இருந்த 'ஜெ' திடீரென காங்கிரஸிற்கு தி.மு.க., அளித்துவரும் ஆதரவை வாபஸ் வாங்கினால் தான் நிபந்தனை அற்ற ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி பேட்டியில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
தி.மு.க., விற்கு 18 எம்.பி.க்கள் உள்ளனர்..அ.தி.மு.க.,விற்கோ 9 எம்.பி.க்கள் இருந்தாலும் தன்னால் மேலும் 9 எம்.பி.க்கள் ஆதரவைப் பெற்றுத் தர முடியும் என்றுள்ளார் அவர்.
இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் தொடர்பாக எந்த ஊழலும் நடைபெறவில்லை என உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு ஒரு மனுதாக்கல் செய்துள்ளது.

Wednesday, November 10, 2010

சோம்பித் திரிய வேண்டாம்..

சோம்பல்..
நம் வாழ்க்கையில் பல தருணங்களில் நமக்கு ஏற்பட்டு நம்மை அறியாமலேயே பல நஷ்டங்களை நமக்கு ஏற்படுத்தக் கூடிய ஒன்று.
ஏதேனும் காரியத்தை முடிக்க வேண்டுமென்றால் ..அதை நாளைக்கு முடிக்கலாமே என்ற எண்ணமே சோம்பலின் முதல் படி.பின் நாளை..நாளை என அவ்வேலையை தள்ளிப்போடச் செய்து நமக்கு பேரிழைப்பை ஏற்படுத்தி விடும்.
இன்று என்பது நேற்றைய நாளை....அதை ஞாபகம் வையுங்கள் போதும்.
ஏதேனும் இடத்திற்கு 9.30க்கு போகவேண்டுமாயின், அவ்விடத்திற்கு 9.20க்கே செல்லுங்கள்.9.40க்கு செல்லாதீர்கள்.நேரம் தவறாமை வாழ்வில் பல நல்லவற்றை நமக்கு நாளாவட்டத்தில் தரும்.
சோம்பேறிகள் கூறும் அடுத்த வார்த்தை..எனக்கு அதிர்ஷ்டமில்லை..அதனால் பதவி உயர்வு கிடைக்கவில்லை..
நீங்கள் சொல்லும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்..
எப்போது...
அன்றன்று வேலைகளை அன்றன்று முடித்து..தாமதம் இல்லாமல் அலுவலகத்தில் பணியாற்றினால்..

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்

வாழ வழியில்லை என அலுத்துக் கொண்டு முயற்சியின்றி சோம்பித் திரிவாரைக் கண்டு..பூமித்தாய் சிரிப்பாளாம்..(அடேய்..மக்கு..ஒவ்வொருவரும் வாழ இயற்கையாகிய நான் எவ்வளவு வழிகளைக் காட்டியுள்ளேன் என்று)

கெட்டுப்போக வேண்டும் என எண்ணுபவரா நீங்கள்..அப்போது..காலம் தாழ்த்துதல்,மறதி,சோம்பல்,எப்போதும் தூக்கம் ஆகியவையே போதும்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்

Tuesday, November 9, 2010

நாம் லட்சியத்தை அடைவது எப்படி....

அவனுக்கு பறவைகள் என்றால் பிடிக்கும்.,
தினமும் காலை ஜன்னலைத் திறந்தால்..அவனுக்காக காத்திருக்கும் புறாக்கள்..
அவனைக் கண்ட சந்தோஷத்தில்..கா கா என கூவி தன் இனத்தை அழைத்து அவனைக் காணச்சொல்லும் காகங்கள்.,
சில கிளிகள்..மரங்ங்கொத்திகள்,குருவிகள்..சுருங்கச் சொன்னால்..அவன் ஒரு பறவைகளின் சரணாலயமாகவே திகழ்ந்தான்.
அவைகள் அவன் கொடுக்கும் தானியங்களையும்,பழங்களையும்...அவன் பக்கத்தில் வந்து உண்ணும்.

ஒருநாள் அவன் மகன் 'அப்பா..எனக்கு விளையாட ஒரு கிளி பிடித்துத் தாயேன்' என்றான்.

மறுநாள் அவன் லாவகமாக ஒரு கிளியைப் பிடித்து மகனிடம் கொடுத்தான்..அவனை அக்கிளி பயந்தபடி பார்த்தது.மற்ற பறவைகள் பறந்து செல்ல கிளியின் கண்களில் ஒரு ஏக்கம்.
மறுநாள் காலை..ஜன்னலைத்திறந்தான்...
பறவைகளை காணவில்லை.
மீண்டும் அவை வரவேயில்லை.
மனதில் இரக்கம் இருந்தவரை பறவைகளின் சரணாலயமாக திகழ்ந்தவன்..இரக்க குணத்தை விட்டதும்...தண்ணீர் அற்ற இடம் என எண்ணி அவை வரவில்லையோ?

பிறர்க்கு தொல்லை கொடுக்கும் போது..அவருக்கு வேண்டியர்களால் வெறுக்கப்படுகிறோம்.,
ஒரு லட்சிய பாதையில்..வேறு எண்ணங்கள் குறுக்கிட்டால்..நாம் லட்சியத்தை அடையும் காலம் நம்மை விட்டு அகன்றுக் கொண்டே இருக்கும்.

திரைப்பட இயக்குனர்கள் - 8 P.நீலகண்டன்

பி.நீலகண்டன் 1916ல் பிறந்தவர்.மேடை நாடகங்களை எழுதி வந்த இவருக்கு ..இவரது நாடகமான நாம் இருவர் திரைப்படம் திரையுலகப் பிரவேசமாக்கியது.பின் வேதாள உலகம் படத்திற்கு 1948 ஆம் ஆண்டு வசனங்களை எழுதினார்.

1951ல் தான் இவரால் இயக்குநராக ஆக முடிந்தது.சி.என்.அண்ணாதுரை கதை வசனம் எழுத ஓரிரவு படம் இவரை இயக்குனராக்கியது.

பின் எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்களை இயக்கினார்.

அவற்றில் முக்கியமானவை நீதிக்கு தலை வணங்கு,நேற்று இன்று நாளை,ராமன் தேடிய சீதை,சங்கே முழங்கு,குமரி கோட்டம்,நீரும் நெருப்பும்,ஒரு தாய் மக்கள்,என் அண்ணன்,மாட்டுக்கார வேலன்,கணவன்,காவல்காரன் ,கொடுத்து வைத்தவள்,திருடாதே,சக்கரவர்த்தி திருமகள் ஆகியவை.

இதைத் தவிர்த்து கலைஞர் கதை வசனத்தில் வெளியான பூமாலை,பூம்புகார் ஆகிய படங்களின் இயக்குனர் இவர்.

சிவாஜியை வைத்து முதல் தேதி, கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்அவரது இயக்கத்தில் வந்த படத்திலிருந்து ஒரு பாடல்
 





Monday, November 8, 2010

காங்கிரஸை கழட்டி விடுங்கள்

வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,தலைமையில் ஆன கூட்டணி தொடருமா? என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல.அனைவரின் சந்தேகமும் இப்படித்தான் இருக்கிறது.
அதுவும்..ஒவ்வொரு நாளும் இளங்கோவன் பேச்சு,ராகுலின் நடவடிக்கைகள் இந்த சந்தேகத்தை எழுப்புகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் தனியே நின்று காங்கிரஸ் 22 இடங்களைப் பிடித்துவிட்டதாம்..அதே போல மற்ற மாநிலங்களிலும் நடைபெறலாம் என நினைக்கிறது ராகுல் வட்டாரம்.தமிழர்கள் இ.வா., என நினைக்கிறார் போலும்.
அவ்வப்போது இவர்களின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தும் போது யாரேனும் ஒரு மத்திய அமைச்சர் கலைஞரை சந்திக்கிறார்.உடன் கூட்டணியில் பிரச்னையில்லை என்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியினருக்கு..அவர்கள் இருக்கும் கூட்டணியே வெல்லும் என்ற எண்ணம் வலுத்துவிட்டது.ஆனால் தனியே நின்றால் டிபாசிட் கூட தேறாது என அனுபவசாலிகளுக்குத் தெரியும்.
சற்று நிலமையை உற்று நோக்கினால்..இன்று ஒவ்வொரு தொகுதியிலும் கிட்டத்தட்ட 5000 முதல் 10000 வரை இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸின் போக்குப் பிடிக்காமல் அவர்கள் எங்கு நின்றாலும் எதிர்த்து வாக்களிக்கும் மக்கள் உள்ளனர்.பலதொகுதிகளில் இம்முறை வெற்றியை இவர்கள் தான் தீர்மானிப்பர் என்று தோன்றுகிறது.
தி.மு.க., வின் வாக்கு வங்கி அப்படியே இருந்தாலும்..அது தனித்து நின்று வெற்றி பெற வேண்டுமாயின் மூன்றாவது கூட்டணி உருவானால் சாதகம்.
காங்கிரசுடன் கூட்டணி தொடர்ந்தால்..தனிப்பட்டு எக்கட்சியும் இன்றி..தேர்தல் அன்று யாருக்கு ஓட்டளிக்கலாம் என்று தீர்மானிக்கும் காமன் மேன் ஓட்டுகள் தி.மு.க.,விற்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகலாம்.
இந்நிலையில்..காங்கிரஸின் பூச்சாண்டித்தனத்திற்கு பயப்படாமல் தி.மு.க., காங்கிரஸை கழட்டிவிட வேண்டும்.அப்படி செய்தால் தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு கூடலாம்.
தி.மு.க., வைத் தேடி வரும் தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கட்டும்.
ஒருவேளை ..காங்கிரஸ் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து கூட்டணி அமைக்குமாயின்..கூட்டணி அரசே அமைக்கும் சந்தர்ப்பம் வரலாம். ஜெ தலைமையில் எவ்வளவு நாட்கள் அந்த ஆட்சி நீடிக்கும் என அனைவரும் அறிவோம்.(ஆமாம்..அப்படி ஒரு நிலை வருமாயின்..ஜெ யுடன் கூட்டணிக் கூடாது என்ற ஒரே காரணத்தில் தனிக்கட்சி ஆரம்பித்த பசி நிலை என்னவாகும்?)
எல்லாவற்றையும் மீறி காங்கிரஸ் உடன் தி.மு.க., கூட்டணி நீடிக்குமே யாயின்..தி.மு.க., வை யாராலும் காப்பாற்ற முடியாது.

(டிஸ்கி..மாறன் பிரதர்ஸ் மூலம் கடைசி நிமிடத்தில் ரஜினியை வைத்து தி.மு.க., ஆதரவைத் தேடும் என்றும் தோன்றுகிறது)

Sunday, November 7, 2010

நான் யார்...நான் யார்...(கவிதை)

நான்
உடல் வலிமையுள்ளவன் என்கிறாயே
உன் அன்னைக்கு நன்றி சொல்
உதிரத்தை பாலாய் கொடுத்தவள்
அவர்

நான்
பண்புள்ளவன் என்கிறாயே
உன் தந்தையை வணங்கு
உன்னை ஆக்கியவர்
அவர்

நான்
அறிவாளி என்பவனே
உன் ஆசிரியரை நினை
உன் அறிவை வளர்த்தவர்
அவர்

நான்
நல்ல கணவன் என்கிறாயே
உன் மனைவியைக் கேள்
உனக்கு அப்பெயர் வரக் காரணம்
அவள்

நான்
நல்ல தந்தை என்பவனே
உன் வாரிசுகளைக் கேள்
உன் கடமையைசெய்ததை உரைப்பவர்
அவர்

நான்
நல்லவன் என பெருமையுறுபவனே
உன் உடல் சுமக்கப்படும் போது
உன் சுற்றமும்..நட்பும் சொல்லட்டும்
அதை

கமல் பொன்விழாவும்..மறக்கமுடியா பாத்திரங்களும்..

தமிழ் திரை உலகில்..நடிப்பு ஒன்றையே முழு மூச்சாய் எண்னிய நடிகர் திலகத்திற்கு அடுத்து கமல்ஹாசன் ஒருவரைத்தான் சொல்லமுடியும்.களத்தூர் கண்ணம்மா படத்தில் 50 வருஷங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமலஹாசன்..சிறுவன் கமலுக்கு ஏ.வி.எம்., சந்தர்ப்பம் கொடுத்தது என்றால்..அவரை நடன இயக்குநர் ஆக்கியது டேன்ஸ் மாஸ்டர் தங்கப்பன் அவர்கள்.அவர் வாலிப வயதை அடைந்ததும்..பாலசந்தர் அவர்களால் அரங்கேற்றம் படத்தில் சாதாரணமான ஒரு பாத்திரம் தரப்பட்டது.பின்..கமலின் திறமையை உணர்ந்த பாலசந்தர் தொடர்ந்து அவருக்கு..அவர்கள், மன்மத லீலை,அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள் ,மூன்று முடிச்சு என பல படங்களில் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்து அவர் திறமையை வெளிக் கொணர்ந்தார்.பின்..கமலுக்கு எறுமுகம் தான்.

16 வயதினிலே சப்பாணி,கல்யாணராமன்,எல்லாம் இன்ப மயம்,கைதியின் டயரி,சிகப்பு ரோஜாக்கள்,வறுமையின் நிறம் சிவப்பு,சகலகலாவல்லவன்,மூன்றாம் பிறை, ராஜ பார்வை,இளமை ஊஞ்சலாடுகிறது,அவள் அப்படித்தான்,நாயகன்,மீண்டும் கோகிலா,வாழ்வே மாயம் என பல படங்களில் தன் திறமையைக் காட்டினார்.மறக்கமுடியா படங்கள் அவை.

ஆனாலும்..கமல் என்னும் நடிகரை நான் முழுமையாக ரசித்த படங்கள்..

சலங்கைஒலி - தனது நாட்டிய திறமையயும் இப்படத்தில் காட்டினார்.கிளைமாக்ஸ் காட்சியில்..கிணற்றின் மேல் நடனமாடும்..இவர் ..எங்கே கிணற்றில் விழுந்து விடுவாரோ என மனம் பதைபதைக்க வைத்தார்.

மகாநதி-கமலின் மாஸ்டர் ஃபீஸ் படம் இது..இன்று நினைத்தாலும் கல்கத்தாக் காட்சி கண்முன்னேயே நிற்கிறது.

அபூர்வ சகோதரர்கள் அப்புவை மறக்கமுடியுமா?

அன்பே சிவம்-இப்படத்தில் கமலின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது..வார்த்தைகளே இல்லை..விபத்தில்..முகமே மாற இழுத்து..இழுத்து பேசும் போது நமக்கு வாய் வலிக்கும்.கமல் நீ ஒரு பிறவி நடிகன் என்பதைச் சொன்ன படம் இது.

தேவர்மகன்- சிவாஜி பெரியதேவராக நடிக்க..கமல் கதாநாயகன்..குறை சொல்லமுடியா நடிப்பு..சொந்த குரலில் கமல் பாடிய..இஞ்சி இடுப்பழகி...கமலை சகலகலாவல்லுநராக ஆக்கியது.

விருமாண்டி-இப்படத்தை வெளியிடுவதற்குள்..எத்தனை இடையூறுகள்..எல்லாம் தாண்டி விருமாண்டியாக கண் முன்னே நின்றார்.

ஒரு படத்தின் நாயகன் பாதி படத்திற்கு மேல் பெண் வேடம் தாங்கி அதை வெற்றி படமாகவும் ஆக்கினார் எனில் அது கமல் மட்டுமே..படம் அவ்வை சண்முகி

இந்தியனையும்..இந்திய தாத்தாவையும் மறக்கமுடியுமா?

படம் முழுதும் வசனமே இன்றி..ஊமைப்படங்களாக முதன் முதல் திரைப்படங்கள் உருவானது என்பதை நாம் அறிவோம்..ஆனால்..கலைமேதை கமல் அவர்கள்..படம் முழுதும் வசனமே இல்லாது..ஆனால்..படத்தின் பெயரை பேசும்படம் எனக் கொடுத்து..வெற்றியடைய வைத்தார்.

மற்றும் நாயகன்,புன்னகை மன்னன்,ஆளவ்ந்தான்,சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களில் கமலின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளைத் தேடத்தான் வேண்டும்

கமல்..பல பரீட்சார்த்த படங்களை எடுத்து..கையை கடித்துக் கொண்டவர்.உதாரணத்திற்கு ஹே ராம்...குணா,நம்மவர்கள்.. சொல்லலாம்.

வசூல்ராஜா..மருத்துவர்களின் போராட்டங்களுக்குப் பின் வெளியானது.இப்படம் ஹிந்தியில் வந்த போது..கண்டனம் சொல்லாத மருத்துவர்கள்..தமிழில் வரும் போது வெகுண்டு எழுந்தது..கமலின் துரதிருஷ்டமே.

ஆரம்ப காலங்களில் ரஜினியுடன் சேர்ந்து ..மூன்று முடிச்சு,அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது போன்று 17 படங்களில் நடித்துள்ளார்.

கமல் தன்னால் நகைச்சுவை படங்களிலும் பிரகாசிக்க முடியும்..என பல படங்களில் நிரூபித்திருந்தாலும்..சமீப காலங்களில் வந்த..மைக்கேல் மதன காமராஜன்,பம்மல் கே.சம்பந்தம்,பஞ்சதந்திரம்,மும்பை எக்ஸ்பிரஸ்,தெனாலி,சிங்காரவேலன் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

கமலின் மகுடத்தில் மற்றொரு வைரக்கல் தசாவதாரம்..10 வேடங்களில் நடித்தார்.ஃபிளச்சரும்,பல்ராம் நாயுடுவும் இன்றும் நம் கண்முன்னே நிற்கிறார்கள்.

கமல் படங்களையும்..அவர் நடிப்பையும் பற்றி எழுதிக் கொண்டிருந்தால்...அதற்கு முடிவே இருக்க முடியாது..

அப்படிப்பட்ட உயர்ந்த மாபெரும் கலைஞன் மலையாளம்,ஹிந்தி படங்களிலும் திறமையைக் காட்டியுள்ளார்.

இன்று அக்கலைஞன் நடிக்க வந்து 50 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன.

நேற்று சிவாஜி என்ற மாபெரும் கலைஞன் 1952ல் நடிக்க ஆரம்பித்து 1999 படையப்பாவரை 47 ஆண்டுகள் நடித்தார்.

இன்று கமல் என்ற கலைஞன் 1959ல் சிறுவனாக நடிக்க ஆரம்பித்து இன்று பொன்விழா கொண்டாடுகிறார்.

இரு மாபெரும் கலைஞனும் நம் காலத்தில் வாழ்ந்ததற்கு நாம் பெருமைப் படுவோம்.

கமல் மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்..

இந்தியாவில் கலைஞர்கள் வாழும் போது சரியாக போற்றப்படுவதில்லை..என்ற கூற்றை பொய்யாக்கி..கமலின் திறமையை அரசு மதித்து..அவருக்கு உரிய மரியாதையை தரட்டும்..

வாழ்க கமல்..வளர்க அவர் கலைப்பணி..

(இப்பதிவிடும்போது நினைவிற்கு வந்த படங்களே பட்டியலிடப்பட்டுள்ளன..பல முக்கிய படங்கள் விட்டுப் போயிருக்கலாம்)

(மீள்பதிவு )

யூனிகோட் தமிழில் வடமொழி: ஒத்திவைக்க கருணாநிதி கோரிக்கை

யூனிகோட் கன்சார்ட்டியம் என்று அழைக்கப்படும் ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் வடமொழி மற்றும் கிரந்த எழுத்துக்களை இடம்பெறச் செய்வது தொடர்பான விவகாரத்தில் தமிழறிஞர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,

நமது பாரம்பரிய அறிவு பற்றிய செய்திகள் கம்ப்யூட்டர், இண்டர்நெட் மற்றும் மின் ஊடகங்களில் இடம்பெறும் வகையில் வேதகால, சம்ஸ்கிருத மற்றும் கிரந்த எழுத்துக்களை (ஜ, ஸ, ஷ போன்ற எழுத்துக்கள்) ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் (யூனிகோட் கன்சார்ட்டியம்) சேர்ப்பது தொடர்பாக, அந்த கூட்டமைப்புக்கு மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ள விவரம் தமிழக அரசுக்கு தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய திட்டம், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது.

இந்தத் திட்டத்தை குறிப்பாக, கிரந்த எழுத்துருக்களுடன் 5 தமிழ் எழுத்துக்களை சேர்ப்பது தொடர்பாக, ஒருங்குறியீட்டு கூட்டமைப்பிடம் சமர்ப்பிப்பதற்கு முன்பாக தமிழறிஞர்கள், மற்றும் மொழியியல் அறிஞர்களிடம் தேவையான அளவு ஆலோசனை செய்யப்படவில்லை என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 4ம் தேதி அமைச்சர்கள், தமிழறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்களை வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினேன்.

அந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் பொன்முடி மற்றும் மூத்த அமைச்சர்களும், தமிழறிஞர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் பேராசிரியர் எம்.அனந்தகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் கனிமொழி எம்.பி., எழுத்தாளர் ரவிக்குமார் எம்.எல்.ஏ., தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜேந்திரன், சிங்கப்பூர் தகவல் தொழில்நுட்ப நிபுணர் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடமொழி எழுத்துக்களை ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் இடம்பெறச் செய்யும் திட்டத்தை முடிவு செய்வதற்கு முன்பாக தமிழறிஞர்களுடன் விரிவான ஆலோசனை செய்ய வேண்டும் என்று அந்த கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழறிஞர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு நியமிக்கப்பட்டு, ஆலோசனை நடத்தி, அந்த திட்டம் தொடர்பாக பரிந்துரைகள் பெறப்படும்.

மத்திய அரசு ஏற்கனவே இந்த திட்டம் தொடர்பான கருத்துருவை ஒருங்குறியீட்டு கூட்டமைப்புக்கு அனுப்பி விட்டதால், அதுதொடர்பாக உடனடியாக முடிவு செய்துவிடாமல், தமிழறிஞர்கள், மொழியியல் அறிஞர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தி, பெறப்படும் கருத்துகள் வரும்வரை சற்று காத்திருக்குமாறு அந்த கூட்டமைப்பை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா அறிவுரை வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

(நன்றி தட்ஸ்தமிழ் )

Saturday, November 6, 2010

வலைத்தளம் ஒரு சிறு குறிப்பு

1965ல் தோற்றுவிக்கப் பட்ட இண்டெர்னெட் எனப்படும் வலத்தளம் இன்று 15.35 பில்லியன் வெப் பேஜஸூடன் திகழ்கிறது.



உலக அளவில் 2 பில்லியன் அதாவது 28 சதவிகித உலக மக்கள் வலைத்தலம் உபயோகித்து வருகின்றனர்.



360 மில்லியன் மக்களுடன் இதில் சீனா முதலிடம் வகிக்கிறது.அமெரிக்கா 227 மில்லியன்,ஜப்பான் 95 மில்லியன்.



இந்தியாவில் 81 மில்லியன் மக்கள் அதாவது 7 சதவிகிதம் மக்களே வலைத்தளத்தை உபயோகிக்கின்றனர்.மும்பை முதலிடத்தில் உள்ளது.



கூகுளைத் தவிர்த்து 5 பிரபல வெப்சைட்ஸ்..ஃபேஸ்புக்,யாஹூ.காம்,லைவ்.காம்,விக்கிபீடியா.ஆர்க்,எம்.எஸ்.என்.,

Thursday, November 4, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (5-11-10)

அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத நிலையை எட்டியுள்ளது.செப்டம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு லட்சத்து அறுபத்திமூணாயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.இப்போது அமெரிக்காவில் வேலை இல்லாதார் எண்ணிக்கை அரசு கணக்குப்படி 1.5 கோடியாகும்

2)உத்தர பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் ஆங்கிலத்திற்குக் கோவில் கட்டி வைத்துள்ளனர்.தலித் மக்களிடையே ஆங்கில அறிவை வளர்க்க இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளதாம்.

3)நம் கண்களை சுத்தம் செய்வது நமது கண்ணீர் தான்.நம்முடைய கண்கள் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும் வகையில்..கண்களின் மேற்பரப்பில் நீர் சுரப்பிகள் உள்ளன.இந்த சுரப்பிகளில் இஉந்து வெளியேறும் நீர்..நாம் கண்களை இமைக்கும் போது கண்களை ஈரமாக்குகின்றன.கண்ணீரில் கிருமிநாசினிகள் உள்ளன.

4)ஒபாமா..இந்திய வருகையை ஒட்டி மும்பை நகரில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளனவாம்.ஒபாமாவின் பாதுகாப்புக்காக ஒரு நாளைக்கு செலவிடப்படும் தொகை 900 கோடிகள்.ஒபாமாவுடன், அமைச்சரவை சகாக்கள்,ரகசிய புலனாய்வுப் பிரிவு,அதிகாரிகள்,உளவு போலீசார்,பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 3000 பேர் கொண்ட குழு உடன் செல்கிறது

5)'ரஜினி காங்கிரஸில் இணைவாரா?' என்ற கேள்விக்கு ராகுல் 'அவர் என்ன கிரிமினலா.இதில் யாரும் இணையலாம்' என்றாராம். (இப்போது இருக்கும் கிரிமினல்கள் போதும் என்கிறாரா).

6)சீனாவில் தகவல் நுட்பம் என்னும் ஐ.டி., சேவை நிறுவனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால்..அதை பெரிய அளவில் வளைத்துப் போட டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ்,விப்ரோ ஆகிய இந்திய நிறுவனங்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனராம்.

7)ஒருவனை முன்னேற விடாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது..அவனிடம் உள்ள அகங்காரமே., அந்த அகங்காரத்தை விட்டொழித்தால் வாழ்வில் நன்கு முன்னேறலாம்.

8) தீபாவளி கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்

பயனில சொல்லற்க

நாம் சிந்திக்கத் தெரிந்தவர்கள்..
என்ன ஒன்று..சிந்தனை என்பது நபருக்கு நபர் மாறுபடும்.
எனக்கு சரி என நான் நினைப்பது..மற்றவருக்குத் தவறாக இருக்கக் கூடும்.அதனால் அவர் சிந்திக்கத் தெரியாதவர்..நானே புத்திசாலி என்று எண்ணக்கூடாது.
அவர் நினைப்பது..நான் நினைப்பதற்கு மாறுபாடாய் உள்ளது..மனிதப் பிறவியா இவர் என்ற எண்ணம் இருந்தால்..நீங்கள் மட்டுமே உலகில் சிந்திக்கத் தெர்ந்தவர், நீங்கள் மட்டுமே அறிவாளி என எண்ணுவதாக அமையும்.
நாம் எதைப் பேசினாலும்..அளந்து, மற்றவர் புண்பட பேசக்கூடாது.
அதே போல பயனற்ற வார்த்தைகளையும் பேசக் கூடாது..
அப்படி பயனற்ற பேச்சைப் பேசுபவனைத் தான் மனிதன் என்று சொல்வதைவிட பதர் என்று சொல்லலாம் என்கிறார் வள்ளுவர்.

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்

ஆகவே நாம் கூடியவரை மற்றவர் மனம் புண்படாது நம் கருத்தைச் சொல்ல வேண்டும்.அதை ஏற்பதும், ஏற்காததும் கேட்பவரின் விருப்பம்.பயனுள்ள சொற்களைக் கூறினால் அனைவரும் விரும்பி ஏற்பர்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனதில் பதிந்து பயனளிக்கக்கூடிய சொற்களையே கூற வேண்டும்.

Wednesday, November 3, 2010

போனஸ் (அரை பக்கக் கதை)

கடந்த பத்து நாட்களாக தீபாவளி போனஸ் கேட்டு..வேலை நிறுத்தம் செய்து, வெற்றி பெற்றனர் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள்..அந்த வெற்றி அந்நிறுவன யூனியன் தலவர் சச்சிதாநந்தனையேச் சேரும் என்றும்..ஊழியர்கள் படும் துன்பங்களை அவர் உணர்ந்து..அவர்கள் நலன் மீது கொண்டுள்ள அன்பையும் பாராட்டி ஊழியர்கள் ஒரு கூட்டம் நடத்தி அன்பளிப்பாக ஒரு பணமுடிப்பும் கொடுத்தார்கள்.
வீட்டிற்குத் திரும்பிய சச்சிதாநந்தன் ..தன் கழுத்தில் கிடந்த மாலையையும்..பணமுடிப்பையையும் மனைவியிடம் கொடுத்தார்.
மனைவி..'என்னங்க ஒரு விஷயம்' என்றாள்.
'என்ன' என அவளை ஏறிட்டார்.
'நம்ம வீட்ல வேலை செய்யறாளே சிவகாமி..அவ தீபாவளிக்கு ஏதாவது பணம் கேட்கறாங்க"
'அடி செருப்பால..அவள் செய்யற வேலைக்கு பணமா..பெரிய கம்பெனில வேல செய்யறா..போனஸ் கேட்குதாக்கும்..பைசா கொடுக்க முடியாது.வேணும்னா வேலையிலிருந்து நின்னுக்கிடட்டும்.நாம வேற ஆள தேடிக்கலாம்' என்றார்.

தீபாவளி சில புகைப்படங்கள்

Tuesday, November 2, 2010

தீபாவளி பதிவர்கள் சந்திப்பு..

தீபாவளியை முன்னிட்டு பதிவர் சந்திப்பு சென்னையில் ஒரு சத்திரத்தில் நடந்தது..அதில் கலந்துக் கொள்ளுமாறு புரூனோ அனைவருக்கும் எஸ்.எம்.எஸ்., பண்ணியிருந்தார்..தவிர்த்து அனைவரையும் அலைபேசியில் 'வந்துடுங்க..வந்துடுங்க.." என்று அழைத்தார்.
முதலில் மண்டபத்திற்கு வந்த டோண்டு யாரும் இல்லாததால் தனக்குத் தெரிந்த பதிவர்களை அலைபேசியில் அழைத்து..6 மணிக்கு பதிவர் சந்திப்பு என்றீர்கள்..இதுவரை யாரும் வரவில்லையே..எங்க வீட்டு அம்மா பார்த்தசாரதி கோவிலுக்கு போற வழியில் கார்ல என்னை இறக்கிவிட்டுட்டுப் போயிட்டாங்க என புலம்பத் தொடங்கிவிட்டார்.

அலைபேசி அடித்ததும்..நான் இணை இயக்குநரா இருக்கிற பட ஹீரோயின் அழைக்கறாங்கன்னு நினைச்சு ஆவலா போனை எடுத்தா புரூனோ..'சரி வரேன்..னு சொல்லிட்டு மணிஜீயை அழைச்சுண்டு கிளம்பினா ..வழியில ஒரு கட்டிங் போட்டாத்தான் மணிஜி வருவேன்னு சொல்லிட்டார்..சரின்னு அவரோட கிண்டிவரை போய் கட்டிங் போட்டுட்டு..பக்கத்தில ராமலிங்க விலாஸ் னு ஒரு ஓட்டல்..அங்கே ஃபிஷ் ஃப்ரையை..அளவா உப்பு, காரம் போட்டு தயார் பண்ணுவாங்க..ரொம்ப சூபராயிருக்கும்..அதையும் சாப்பிட்டு பதிவர் சந்திப்புக்குக் கிளம்பினோம்.என்றார் கேபிள்..

இந்தத் தீபாவளியாவது தோழியுடன் கொண்டாடலாம்னு பார்த்தேன்..'ம்..ம்..ம்' என சலித்துக் கொண்டார் கார்க்கி

நான் லோகல்தான்..எக்ஸ்பிரஸோ..மைலோ இல்லை..அதனால என்னாலே லேட்டாய்தான் போகமுடியும் என மெதுவாகக் கிளம்பி வந்தார் ஜாக்கி..

பணத்தைத் தேடித்தான் மக்கள் ஓடறாங்க..சந்திப்பிலே கலந்துக்க பணம் கிடைக்கும்னா..திருட்டு ரயில்/பஸ் ஏறியாவது வந்துவாங்க கூட்டம் என்றார் செந்தில்.

என் வாழ்க்கை திருப்திகரமா போயிட்டு இருக்கு..அதுக்காக நான் யாரையும் போய் பார்க்கணும்ங்கறதில்லே..ஃபெட்னாக்கு போன போது கூட இதை நான் ஒருத்தர்கிட்ட சொன்னேன்..என்றார் அப்துல்லா

நடுவே டோண்டு..'ஆமாம் இந்த சத்திரத்துக்கு எவ்வளவு வாடகை..யார் யார் தராங்க?' 'என வினவினார்..கையில் ஒரு நோட்டு புத்தகத்தைத் திறந்துவைத்துக் கொண்டு.

வண்டியை தாம்பரத்தில விட்டுட்டு..மின்சார ரயில் பிடிச்சு மாம்பலத்திலே இறங்கினா..'ரங்கநாதன் தெரு'வை தாண்டரதுக்குள்ள தாவு தீர்ந்துப் போச்சு என்று ஆதியிலிருந்து சொல்ல ஆரம்பிச்சார் ஆதி.

'இதைத்தான்..'குறுந்தொகை'யில ஒரு பாட்டில சொல்லியிருக்காங்க.வரப்புல ஒரு சமயம் என் நண்பனோட நடந்து வரப்போ..'ந்னு நர்சிம் ஆரம்பிக்க..அவர் இடுகையை படிக்கும் ஞாபகத்தில் அனைத்து பதிவரும்..'அருமை..அருமை..'என்றனர்.

'என் வலைய தமிழ் மக்களே!'என ஆஜரானார் உண்மைத் தமிழன்..நான் சாதாரணமா பதிவர் சந்திப்புக்கு வருவதில்லை..இன்றும் அப்படியே' என்றவரிடம்..பின்ன ஏன் இங்கு வந்தீங்க என மணீஜீ விசாரிக்க..'போடா'ன்னு ஒரு படம் பார்த்தேன்..என்னைச்சேர்த்து 12 பேர் தான் தியேட்டர்ல.பதிவர் சந்திப்புக்கு அதைவிட கொஞ்சமாவது அதிகமாக வருவாங்க்ன்னு தெரியும்..அதனால அந்த பட விமரிசனத்தை இங்கே சொல்லிடலாம்னு..வந்தேன்' என்றார்.

'அண்ணே..அதை முதல்லேயே நான் சொல்லிட்டேன்' என்று குரல் கொடுத்தார் ஜெட்லீ..

நான் ஷூட்டிங்ல பிசியா இருக்கறதாலே அப்படத்தை இன்னும் பார்க்கலை ன்னு கேபிள் வருத்தப்பட்டார்.தன் மொபைல்ல வந்தவங்களை பட்ம் பிடித்தார் காவேரி கணேஷ்.

லக்கியும்,அதிஷாவும்..கூட்டம் டீக்கடைக்கு கிளம்பும் நேரம் வந்து சேர்ந்தனர்.இவர்களுக்காக டீக்கடையில் காத்திருந்த ஜ்யோவ்ராமை சுற்றி மேலும் சிலர் நின்று அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
கூட்டமாக வந்தாலும்..குரூப்..குரூப்பாக டீ ஆர்டர் செய்ய..நாப்பது டீ போட்டோம்..முப்பதுக்குத்தான் காசு வந்ததுன்னு டீக்கடைக்காரர் புலம்பினார்.

ஆமாம்..தீபாவளி பதிவர் சந்திப்புன்னாங்க..தீபாவளிப் பற்றியும் பேசலை..வேற எந்த விஷயங்களையும் எப்போதும் போல பேசலையே என அவரவர் நினைத்துக் கொண்டு பிரிந்தனர்

Monday, November 1, 2010

இட்லி வடை

உப்பிட்டவனை உள்ளளவும் நினை என்பார்கள்..
ஆனால் இக்காலத்தில் உப்பை அதிகம் சேர்க்கக் கூடாது என மருத்துவர்கள் கூறினாலும்..
நமக்கு ஆதரவாய் இருந்தவர்கள்..பசியாற சோறிட்டவர்களை மறக்கக் கூடாது எனலாம்.இந்த குறும்படம் அதைச் சொல்கிறது.
அதே சமயம் மாணவ சமுதாயம் பொறுப்பற்றவர்கள் என ஆங்காங்கே சில அதி மேதாவிகள் கூறுவதுண்டு.ஆனால் இள ரத்தம் சில சமயங்களில் பயமறிவதில்லை என்பது உண்மை

ஆனால் மாணவர்கள் பொறுப்புள்ளவர்கள் என்பதை எவ்வளவு அழகாக உணர்வுபூர்வமாகக் கூறுகிறார்கள்.
இதைப் பார்த்ததும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளத் தூண்டியது மனம்.



என்னைக் கவர்ந்த இந்த குறும்படம்..உங்களையும் கவரலாம்..
இதன் தயாரிப்பில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்