Friday, July 31, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (31-7-09)

1.துணை மின்நிலையம் மற்றும் மின் கடத்தி பணிகளை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணய காலக் கெடுவைவிட தாமதமாக முடித்ததால்..தமிழக மின்வாரியத்திற்கு 5 ஆண்டுகளில் 123 கோடியே 97 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதன்மை கணக்காயர் சங்கர்நாராயண் தெரிவித்துள்ளார்.

2. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில்..அவருக்கு அணிவிப்பதற்கு மட்டும் 11 டன் அளவுக்கு தங்கம்,வெள்ளி,வைர,வைடூரிய நகைகள் உள்ளனவாம்.தினமும் ஏழுமலையானுக்கு 70 கிலோ நகைகள் அணிவிக்கப்படுகின்றன.இவ்வளவு எடை உள்ள நகைகள் அணிவிக்கப்படுவதால் சிலையில் விரிசல் உண்டாகும் அபாயம் உள்ளதாம்.

3.ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால்..மாரடப்பு வர வாய்ப்புள்ளது.பக்கவாதம்,மூளையில் பாதிப்பு ஆகியவை ஏற்படலாம்.தவிர, கண்கள்,சிறுநீரக கோளாறுகள்..என உடலின் பல பாகங்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.ஆகவே உங்கள்..வயது எதுவாயினும் ரத்த அழுத்தத்தை 140/90 என்ற அளவிலேயே வைத்திருங்கள்.

4.கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் 64 வங்கிகள் திவாலாகி உள்ளன.மாதம் சராசரியாக 9 வங்கிகள் மூடப்படுகின்றனவாம்.பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா அதிலிருந்து மீள இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் எங்கின்றனர் வல்லுநர்கள்.

5.எந்தத் தொழிலும்..முழு ஈடுபாட்டுடன் செய்தால் பணம் சம்பாதிக்கும் தொழிலே..மும்பை தாஜ் ஓட்டல் சலவையாளர் சாகர் என்பவர் ஓராண்டிற்கு 1 கோடியே 53 லட்சம் சம்பாதிக்கிறார்.இவர் 33 வருடங்களாக அந்த ஓட்டலில் வேலை செய்கிறார்.அதே ஓட்டல் சமையல்காரரின் ஆண்டு வருமானம் 60 லட்சத்து 53 ஆயிரமாம்.

6.பொருள் தேடும்வரை சுற்றத்தினர் நம் மீது அன்பு வைத்திருப்பார்கள்.நோயில் தளர்ந்து போனப் பின் யாரும் நம்மை கண்டுக் கொள்ள மாட்டார்கள்.

7. பொருத்துக..

திருவள்ளுவர் -இலவுகாத்த கிளி
ஒகேனக்கல் - சர்வக்ஞர்
முல்லைபெரியார் - எடியூரப்பா
இலங்கை தமிழர் - அச்சுதானந்தன்
எல்.கணேசன் - கலைஞர்

Thursday, July 30, 2009

கலைஞர் என்னும் தேனீ..

அவனன் அலுவலகம் சென்று வந்துவிட்டு..மற்ற வேலைகள் செய்ய நேரமில்லை என்று சொல்வதைப் பார்த்திருக்கிறோம்..

ஆனால்..கலைஞரோ..முழு நேர அரசியல்வாதி..55வருடங்களுக்கு மேல்..கட்சி வேலை,எம்.எல்.ஏ., அமைச்சர்,முதல்வர்,எதிர்க்கட்சித்தலைவர் என தொண்டாற்றிவருபவர்.

ஆனால்..இவ்வளவிற்கும் இடையே..70 திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.(இது பற்றி தொடர் பதிவு ஒன்று போட உள்ளேன்.)

தவிர..ரோமாபுரி பாண்டியன்,தென்பாண்டி சிங்கம்,வெள்ளிக்கிழமை,நெஞ்சுக்கு நீதி,இனியவை இருபது,சங்கத் தமிழ்,குறளோவியம்,பொன்னர்-சங்கர்,திருக்குறள் உரை,தொல்காப்பிய பூங்கா..என பல நூல்களை எழுதியுள்ளார்.

தவிர..மணிமகுடம்,ஒரே ரத்தம்,பழனியப்பன்,தூக்கு மேடை,காகிதப்பூ,நானே அறிவாளி,வெள்ளிக்கிழமை,உதய சூரியன்,சிலப்பதிகாரம் அகிய மேடை நாடகங்களை எழுதியுள்ளார்.

ஆகவே..இனி நேரமில்லை என எக்காரியத்திற்கும் சொல்லாதீர்கள்.

மனமிருந்தால் வழி உண்டு.

நமக்கு இயற்கை அளித்துள்ள அதே 24 மணிநேரமே தான் கலைஞருக்கும் அளித்துள்ளது.

Wednesday, July 29, 2009

அ.தி.மு.க., எம்.பி., தேர்தல் செலவும்..எஸ்.வி.சேகரும்..

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்..தென்சென்னையில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.இதையடுத்து..ஒவ்வொரு வேட்பாளர்களும் தான் செய்த செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

எஸ்.வி.சேகர்..அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.பத்திரிகையாளர்களிடையே பேசிய சேகர்..நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., வெல்ல தான் 6 லட்சம் செலவு செய்ததாகவும்..மயிலை தொகுதியில்தான் அ.தி.மு.க., விற்கு அதிக வாக்குகள் விழுந்தன என்றும் கூறியுள்ளார்.மேலும் 17 ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க.,விற்கு கிடைத்த வெற்றி இது என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஓராண்டுகாலமாகவே..ஓரம்கட்டப்பட்ட சேகர் ஏன் 6 லட்சம் செலவு செய்தார்?

வேட்பாளர் செலவு செய்த கணக்கில் இந்த பணம் சேர்த்துக் காட்டப்பட்டுள்ளதா?

இல்லையெனில்..கணக்கில் வராமல் செலவு செய்துள்ளதா இப்பணம்.அதுவும் ஒரு சட்டசபைதொகுதியில்.
(6 சட்டசபை தொகுதி ஒரு பாராளுமன்றதொகுதி)

சேகர் சொல்வது உண்மையெனில்..தேர்தலில் தி.மு.க., பணத்தை வாரி விட்டு..வெற்றி பெற்றது என்று ஜெ சொன்னது..அவருக்கும் பொருந்தும் அல்லவா?

தேர்தல் ஆணையம்..வேட்பாளர் கணக்கை ஆய்வு செய்யுமா?

எனக்கு மீண்டும் விருது..


இம்முறை..எனது சகோதரி இயற்கை விருது அளித்திருக்கிறார்.மனம் மகிழ்வு அடைகிறது.

நன்றி இயற்கை..

நான் இவ்விருதை என் நண்பர்களுக்கு அளிக்கவேண்டும்.இணையத்தில் அனைவரும் என் நண்பர்கள்தான்.அதனால்..நான் இவ்விருதை வழங்கப்போகும் மூவர்..மற்ற நண்பர்களுக்கு வழங்குவர்.

நான் அளிக்கும் மூவர்..

கோமா

உடன்பிறப்பு

ஸ்டார்ஜன்

அவர்கள்..தங்கள் வலைப்பூவில்..இவ்விருதைப் போட்டுக்கொள்வதுடன்..மற்ரவர்களுக்கும் கொடுக்க வேண்டுகிறேன்.

Tuesday, July 28, 2009

ஜெ வும்..விஜய்காந்தும்..

விஜய்காந்த் கட்சி ஆரம்பித்ததால்..அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க., என்று சொல்லலாம்.

2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலில்...பல இடங்களில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில்.அ.தி.மு.க., தோல்வியடைந்தது.தி.மு.க., கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது.இத் தேர்தலில் விஜய்காந்த் வாங்கிய ஓட்டுகள் அ.தி.மு.க., விற்கு விழுந்திருந்தால்..ஜெ..மீண்டும் முதல்வர் ஆகி இருக்கமுடியும்.

ஏன்..அதனால் தி.மு.க., பாதிக்கப்படவில்லையா? என கேள்வி எழும்பலாம்..

உண்மையில்..விஜய்காந்தால்..தி.மு.க., விற்கு பெரும் பாதிப்பு இல்லை எனலாம்.ஏனெனில்..தி.மு.க., ஒரு கட்டுக்கோப்பான கட்சி..அதற்கான வாக்கு வங்கியில் இருந்து ஓட்டுகளை மற்ற கட்சிகள் வாங்க முடியாது.மேலும்..சென்ற தேர்தலில்..தி.மு.க., சக்தி வாய்ந்த கூட்டணி அமைத்திருந்தது.அ.தி.மு.க., ஓட்டுகளே பிரிந்து விஜய்காந்திற்கு விழுந்தன எனலாம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும்...ஆயிரம் ஊழல் புகார்கள் கூறப்பட்டாலும்...தி.மு.க., விற்கும்..அ.தி.மு.க.விற்கும்..15 லட்சம் வாக்குகளே வித்தியாசம்..ஆனால் தே.மு.தி.க., பெற்ற வாக்குகள் 30 லட்சத்திற்கு மேல்.இவர்கள் ஒரே அணியில் செயல்பட்டிருந்தால்...தேர்தல் முடிவிலும் மாற்றம் இருந்திருக்கும்.மேலும்..அ.தி.மு.க.,வில் பூத் ஏஜண்டுகள் விலைபோனதையும் ஜெ கூறினார்.இது யார் தவறு?

..இனி வரும் தேர்தலில்..விஜய்காந்துடன் கூட்டணி வைத்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலை இனி திராவிட கட்சிகளிடையேக் கூட உருவாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

இந்நிலையில்..இடைத்தேர்தலில் யாரும் ஓட்டுப் போட வேண்டாம்..என அ.தி.மு.க., கேட்பதை விடுத்து..விஜய்காந்திற்கு ஆதரவை தெரிவிக்க வேண்டும்.அப்படிப்பட்ட நிலை உருவானால்..தமிழகத்தில் இனி வரும் காலங்களில் பல மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம்.

விஜய்காந்தும்...பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலே வெற்றி பெறமுடியும் என்பதை உணர வேண்டும்..இல்லையேல்...இனி வரும் தேர்தல்களில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் கூட கிடைக்க மாட்டார்கள்.

Monday, July 27, 2009

வேலைக்கு விண்ணப்பம் அனுப்பும்முன்...போலிகளிடம் ஏமாறாதீர்..

இப்போதெல்லாம்..கடைகளில் வேலை விண்ணப்ப படிவங்கள் விற்கப்படுகின்றன.

பல கடைகளில்...ஒரு படிவம் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.தவிர விளம்பரத் தாளில்..1000 வேகன்ஸி..2000 வேகன்ஸி என்றல்லாம்..பிரிண்ட் போட்டு..கடையில் தொங்கவிடுகிறார்கள்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர்..இப்படித்தான்..ஒரு வங்கி வேலைக்கான படிவத்தை பத்து ரூபாய் கொடுத்து வாங்கி..அதில் சொல்லப்பட்டிருந்தார் போல 500 ரூபாய்க்கான டிரஃப்ட் இணைத்து..அந்த தேசிய வங்கியின் தலைமையகத்துக்கு அனுப்பினார்.

ஒரு மாதம் கழித்து...அவ்வங்கியிலிருந்து..'எங்கள் வங்கியில் நீங்கள் குறிப்பிடுள்ளது போல எந்த வேலைக்கும் ஆட்கள் எடுக்கவில்லை.இதுபோல் தவறுதலாக விண்ணப்பிக்க வேண்டாம் என எச்சரித்து..டிராஃப்டை திருப்பி அனுப்பியிருந்தனர்.ஏதோ அவர் நல்லகாலம்..டிராஃப்ட் திரும்பி வந்தது.சில நிறுவனங்கள் அதையும் கிடப்பில் போட்டுவிடும்.

கடையில் விசாரித்ததில்..'நாங்கள் வேறு ஒரு கடையில் இருந்து வாங்கிவந்து விற்கிறோம் .அவர்களைக் கேட்டுச் சொல்கிறோம்' என்றனர்.பலன் பூஜ்யம்.அந்த விண்ணப்பப் படிவமே போலியானது.

விண்ணப்பிக்க அவர் செலவு செய்த பணம்..டிராஃப்டை கேன்ஸல் செய்ய வங்கி கமிஷன்,சான்றிதழ்களில்..ஒப்புதல் கையெழுத்து வாங்க அலைந்த நேரம்..எல்லாம் விரயம்.எல்லவற்றையும் விட அடைந்த ஏமாற்றம் .

இளைஞர்களின் கனவுகளுடன் விளையாடும்..இந்த போலிகளை நம்ப வேண்டாம்.

விளம்பரங்களை..செய்த்திதாள்களில் படித்து...தெரிந்துக் கொண்டு விண்னப்பிப்பது சிறந்தது.

புரிந்துணர்வும்...அன்பு உள்ளமும்..

காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

ஆகவே..நண்பர்களே..அன்பு..சாதி..மதங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.

இந்த புரிந்துணர்வு இருந்தால்...எல்லாம் நன்மையாய் முடியும்.

(மீள்பதிவு )

Sunday, July 26, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 19

1973ல் வந்த சிவாஜி படங்கள்

பாரதவிலாஸ்
ராஜ ராஜ சோழன்
பொன்னூஞ்சல்
எங்கள் தங்க ராஜா
கௌரவம்
மனிதரில் மாணிக்கம்
ராஜ பார்ட் ரங்கதுரை

இவற்றுள்..பாரதவிலாஸ்,ராஜ ராஜ சோழன்,எங்கள் தங்க ராஜா,கௌரவம்,ராஜபார்ட் ரங்கதுரை ஆகிய ஐந்து படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியவை.

பாரதவிலாஸ் படம் தேசிய ஒருமைப்பாட்டை சித்தரிக்கும் படம்.முதன் முதலாக இந்திய அரசே..ஒரு படத்தின் நெகடிவ் உரிமையை வாங்கிய படம் இது.நட்சத்திர பட்டாளமே இதில் உண்டு.

ராஜ ராஜ சோழன்..அரு.ராமனாதன் எழுத்து.டி.கே.எஸ்., பிரதர்ஸ் மேடையேற்றிய நாடகம்.அதை ஆனந்த் தியேட்டர் அதிபர் உமாபதி படமாக்க விரும்பினார்.முதன் முதல் சினிமாஸ்கோப் படம் இது.

கௌரவம்..கண்ணன் வந்தான் என்ற பெயரில்..வியட்நாம் வீடு சுந்தரம் எழுத நாடகமாக நடிக்கப்பட்டது ஒய்.ஜி.பி.,குழுவினரால்.பின் கௌரவம் என்ற பெயரில் திரைப்படமானது.

நாடகங்கள் திரைப்படமானால் வெற்றி பெரும் என நிரூபித்தவர் நடிகர்திலகம்.கட்டபொம்மன்,வியட்நாம் வீடு,ஞானஒளி,ராஜ ராஜ சோழன்,கௌரவம்..(தங்கப்பதக்கம்,பரீட்சைக்கு நேரமாச்சு,ஆனந்தக்கண்ணீர்..ஆகியவையும் நாடகங்களே)

கௌரவம் 56 நாட்கள் ஒரு திரை அரங்கில்..ஹவுஸ் ஃபுல் ஆகி சாதனைப் படைத்தது.குவைத் நாட்டில் முதன் முதலாக திரையிடப்பட்ட தமிழ் படம் கெளரவம்

எங்கள் தங்க ராஜா..சிவாஜி 3 வேடங்கள்.பி.மாதவன் இயக்கம்.'யாரை நம்பி நான் பிறந்தேன்" பாடல் ஹிட்.

ராஜ பார்ட் ரங்கதுரை..நாடக நடிகனின் கதை.இப்படத்தில் நடிகர் திலகம் 14 கெட்டப்பில் வருவார்.

இனி..அடுத்தபதிவில் 1974ல் வந்த படங்களைக் காணலாம்.

Saturday, July 25, 2009

நேர்முகத் தேர்வும்..அதி புத்திசாலி அண்ணாசாமியும்..

அண்ணாசாமிக்கு..நீண்ட நாட்கள் கழித்து ஒரு நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்வு அழைப்பு வந்தது.அதை தன் நண்பர் ஆறுமுகத்திடம் போய் சொல்ல..அவரும் தனக்கும் அந்நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.

இருவரும் ஒன்றாக சென்றனர்.

முதலில்..ஆறுமுகம் அழைக்கப்பட்டார்..அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி

உங்க அப்பாவின் குழந்தைக்கு...அண்ணனும் இல்லை..தம்பியும் இல்லை..அக்காவும் இல்லை..தங்கையும் இல்லை ..அப்படியென்றால் அக்குழந்தை யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

ஆறுமுகம்..உடனே..அக்குழந்தை நான்தான் என பதில் அளித்தார்.

அடுத்து அண்ணாசாமி அழைக்கப்பட்டார்..அதற்குமுன் அண்ணாசாமி..ஆறுமுகத்திடம் என்ன கேட்டார்கள்..எனக்கேட்க ஆறுமுகமும்..சொன்னார்.

உடன்..அண்ணாசாமி..அதற்கு விடை..என்று கேட்க..'நான்தான்' என்றார் ஆறுமுகம்.

உள்ளே சென்ற அண்ணாசாமியிடம்..அதே கேள்வி கேட்கப்பட..சற்றும் தடங்கல் இன்றி அண்ணாசாமி..'அது ஆறுமுகம் தான்' என்றார். .

Friday, July 24, 2009

அருமை+கலக்கல்+;-)) = பிரபலம் (சிறுகதை)

புது நிர்வாக அதிகாரி வருகிறார் இன்று எங்கள் அலுவலகத்திற்கு.

இளைஞர்தானாம்..ஆனால் அதி புத்திசாலியாம்.அவர் பதவி ஏற்றதும்தான் ரெஷஷன் சமயத்திலும்..எங்கள் அலுவலக graph மட்டும் வடக்கு நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது.

அவர்..எங்கள் அலுவலகம் வருகிறார் என்றதும்..எங்கள் அனைவருக்கும் படபடப்பு.

'கார் வந்து விட்டது' என கத்தினான் அட்டெண்டர் ஆறுமுகம்.எங்க டீம் லீடர் விக்னேஷ் அவருக்கு மாலை போட..நான் பூங்கொத்தைத் தருகிறேன்.

ஒரு சென்டிமீட்டர் அளவே வாய் விரித்து புன்னகைக்கிறார்.உள்ளே மிதமான குளிரூட்டப்பட்ட அறைக்குச் சென்று அமர்கிறார்.நானும்..விக்னேஷும் உள்ளே செல்கிறோம்.நான் தற்போது நடந்துக் கொண்டிருக்கும் புராஜக்ட் பற்றி விவரிக்கிறேன்..'அருமை' என்கிறார்.

விக்னேஷ்..ஸ்டாஃப் குறைவாயிருந்த போதும்..எல்லா வேலைகளையும் குறித்த நேரத்தில் முடித்து விடுகிறோம்..என்கிறான்...'கலக்கிட்டீங்க' என பாராட்டுகிறார்.

பின்..எல்லாவற்றிற்கும்..ரெடிமேடாக தயாரித்தாற்போல ஒரிரு வார்த்தைகளிலேயே பதில் சொல்கிறார்.

நானும் விக்னேஷும் வெளியே வருகிறோம்...எனக்கோ ஆச்சர்யம்..விக்னேஷிடம் ..'அதிகம் பேசமாட்டேன் என்கிறார்..எப்படி இவர் திறமையானவராய் இருக்கிறார்' எனக் கேட்க நினைக்கிறேன்.

அதற்குள் விக்னேஷ் சொல்கிறான்..'உனக்குத் தெரியுமா..இணையதளத்தில்..மிகப் பிரபல பதிவர் இவர். இவர் பிளாகை தினம் 1000 பேருக்குமேல் பார்வையிடுகிறார்கள்'

Thursday, July 23, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (24-7-09)

1.தமிழ்மொழி பற்றி பேசும் தகுதி கலைஞர் ஒருவருக்குத்தான் உள்ளது.வேறு யாருக்கும் அந்த தகுதி கிடையாது.அவர் தொடாத துறைகளே இல்லை.கதை,கட்டுரை,கவிதை,துணுக்குகள்,நாடகம்,நகைச்சுவை,உரையாடல் என அனைத்து துறைகளிலும் முதல்வர் தடம் பதித்துள்ளார் என்று அன்பழகன் சமீபத்தில் சட்டசபையில் பேசும்போது கூறினார்.

2.ஆறிப்போன காஃபி,தேநீர் ஆகியவற்றை மீண்டும் சுடவைத்து குடிப்பது.சூடான நீரை பாலிதீன் கவர்களில் ஊற்றி குலுக்கி பாலுடன் கலப்பது.உலோகப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி சூடாக்குவது..ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் வாழ்வது போன்றவை புற்றுநோயை உண்டாக்கக் கூடுமாம்.

3.ஒரு மனைவி போதும் என்பவன் ராமனை வணங்குவான்
இரு மனைவி போதும் என்பவன் முருகனை வணங்குவான்
இரண்டுக்கு மேல் வேண்டும் என்பவன் கண்ணனை வணங்குவான்
நான் கண்ணனின் தாசன்..என ஒரு முறை கண்ணதாசன் கூறினார்.

4.அடிமை இந்தியாவில் பிறந்தார்
சுதந்திர இந்தியாவில் கோலோச்சினார்
மீண்டும் அடிமை இந்தியாவில் மறைந்தார்
அன்னையின் விலங்கொடித்து அன்னியனை விரட்டினார்
இன்னொரு அன்னையால் பாரத அன்னை விலங்கிடப்பட்ட காலை
மனம் உடைந்து மரணமடைந்தார்.
தலைமாட்டில் உட்கார்ந்து அழ மனைவியோ..
கால்மாட்டில் உட்கார்ந்து அழ மக்களோ இல்லாதவர் அவர்...ஆனால்
அவர் மரணத்தில் நாடே அழுதது..வானமும் அழுதது..
(காமராஜ் பிறந்த நாள் அன்று தினமணியில் வந்த தலையங்கத்தில் ஒரு பகுதி)

5.ஞாபகங்கள் என்பது மூளைக்குள் செயல்படும் சின்னச்சின்ன ரசாயன மின்சுழற்சிகள்

6.ஒரு ஜோக்

பொய் பேசறவங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?
ஓ..கல்யாணம் ஆகாமலேயே மாமியார் வீட்ல இருக்கறதாயிடும்..

வாய் விட்டு சிரியுங்க..

உனக்குப் பிடிக்குமேன்னு சோளப்பொரி வாங்கிவந்தேன்..
எனக்கு அது பிடிக்காது...பாப்கார்ன் தான் பிடிக்கும்

2.உனக்கும்..உன் மனைவிக்கும் சண்டையா? கடைசியா என்ன ஆச்சு
நான் பிறந்த வீட்டுக்கு வந்துட்டேன்

3.(இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்) ஒருத்தி- என்னைவிட நீ கொடுத்து வைத்தவ..நாலு பிள்ளங்க..நாலு மருமகளோட சண்டை போடலாம்.ஆனா எனக்கு ஒரே பிள்ளை..ஒருத்தியோட மட்டும்தான் சண்டை போட்டுக்கிட்டு இருக்க முடியும்.

4.இயக்குநர்- (கதாசிரியரிடம்)தொப்புள்ல பம்பரம் விட்டாச்சு..ஆம்லெட் போட்டாச்சு..நீ வேற ஐடியா கொடுய்யா
கதாசிரியர்- கதாநாயகியை நாய் கடிச்சுடுது.. டாக்டர் 14 ஊசி போடணும்னு சொல்லிடறார்..அப்படின்னு எழுதறேன்..14 முறை தொப்புளை குளோசப்ல காட்டிடலாம்.

5.அந்த கிளினிக்ல என்ன கூட்டம்
ஆடி தள்ளுபடியாம்..ஒரு ஆபரேஷன் செஞ்சுக்கிட்டா ஒரு ஆபரேஷன் இனாமாம்

6.அந்த தயாரிப்பாளர் வீட்டு வாசல்ல ஒரே கிழவிகள் கூட்டமா இருக்கே...என்ன விஷயம்
அவர் எடுக்கப்போற படத்துக்கு 18 வயசு புதுமுகம் தேவைன்னு விளம்பரம் கொடுத்தாராம்..தவறி 81ன்னு பிரசுரமாயிடுச்சாம்.

Wednesday, July 22, 2009

அ.தி.மு.க., மெல்ல இனி....??

அ.தி.மு.க., இடைத் தேர்தலை புறக்கணிக்கும் என அறிவித்துள்ளது.ஜெ யை எதிர்த்து பேசத்தெரியா கூட்டணிக் கட்சிகளும்..புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

அதற்கான காரணங்கள் பலவற்றைக் கூறினாலும்..உண்மைக் காரணம் தோல்வி பயமே.

தேர்தல் ஆணையமும்..இத்தொகுதிகளில் வாக்களிக்க புது மின்னணு இயந்திரம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில்..ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி..ஆளும் கட்சி செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும்..அதைவிடுத்து...பயந்து நடப்பது போல இருக்கிறது அதன் இன்றைய செய்கை.

1991 சட்டசபைத் தேர்தலில்..ராஜிவ் காந்தி மறைந்த சமயம் அது..224 தொகுதிகளில் அ.தி.மு.க.,கூட்டணி வெற்றி பெற்றது.பெரம்பூர் தொகுதி..ஒரு வேட்பாளர் மறைவால்..தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.கலைஞர் மட்டுமே..துறைமுகத்தில் வென்றார்.அப்போதும் மனம் உடையாமல்..தன் தோல்வியை ஒப்புக்கொண்டதுடன்..எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார்.

ஆனால் ஜெ யோ..ராஜிவ் இறந்த அனுதாப அலையில் வென்றாலும்..அதை ஒப்புக் கொள்ளாமல் அது தன் வெற்றி என்றார்.

பின் நடந்த இடைத்தேர்தலில் பெரம்பூரிலும்..துறைமுகத்திலும் தி.மு.க., வென்றது.

தேர்தலில்..வெற்றி..தோல்விகள் சகஜம்..அது எந்த காரணத்தால் ஏற்பட்டாலும்..அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பெருந்தலைவர்..ஒரு மாணவனிடம்..தன் சொந்த ஊரிலேயே தோற்ற போதும்..அதை ஏற்றார்..வென்றவர்க்கு வாழ்த்து சொன்னார்.

அந்த பெருந்தன்மையை..இன்றைய தலைவர்களிடம்..எதிப்பார்க்கமுடியாவிடினும்...இதுதான் ஜனநாயகம் என்ற அளவிலாவது ஒப்புக்கொள்ள வேண்டும்..

அதை..விடுத்து...தேர்தலை புறக்கணிப்போம் என்பது..ஜனநாயகத்தை..அக்கட்சி மதிக்கவில்லை என்றே ஆகிறது.

இந்நிலை நீடிக்குமேயாயின்..அ.தி.மு.க., மெல்ல இனி....

Tuesday, July 21, 2009

வைகோ விற்கு ஒரு கடிதம்..


தானை தளபதி வைகோ அவர்களுக்கு

நீங்கள் தி.மு.க., விலிருந்து..பிரிந்ததோ...அல்லது பிரிக்கப் பட்டதோ கண்டு மன வேதனை அடைந்தவர்களில் நானும் ஒருவன்.

பிறகு தாங்கள் கட்சி ஆரம்பித்ததும்..உங்கள் தனித்தன்மை வெளிவரும் என்று நினைத்தேன்..ஆரம்பத்தில்..அப்படித்தான் தோன்றியது.பிறகு...காங்கிரஸ் கட்சியைப்போல் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் சவாரி செய்துதான் ஒரு சில இடங்களில் வெல்ல முடிந்தது.

இது எல்லாம் பழங்கதை..அதைப் பற்றி இப்போது பேசி பயனில்லை என்று எனக்குத் தெரியும்...

ஆனால்..அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டசபைக்கான 5 தொகுதிகளில் போட்டியிடாமல்..புறக்கணிப்பதாக அ.தி.மு.க., அறிவித்துள்ளது.அதற்கு அவர்கள் ஆயிரம் காரணம் கூறினாலும்..உண்மையான காரணம் 'தோல்வி பயம்"

ஆனால்..அதற்காக அவர்கள் கூட்டணியில் உள்ள நீங்களும் தேர்தலை புறக்கணிக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.5 தொகுதிகளிலும் ம.தி.மு.க., போட்டியிடட்டும்.அ.தி.மு.க., வின் ஆதரவைக் கேளுங்கள்.தி.மு.க.,விற்கு சரியான போட்டியை உங்களால் கொடுக்க முடியும்.அதை விடுத்து..கூட்டணி தர்மம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால்..அடுத்து தயாராக இருக்கும் விஜய்காந்த் கட்சி போட்டியிட்டு..சில இடங்களை வெல்லக்கூடும்.

அடுத்து வரும் தேர்தல்களில் உங்கள் கட்சி மிகவும் பின்னுக்குத் தள்ளப்படும்.மேலும் தேர்தலை புறக்கணிப்பது என்பது..அரசியல் கட்சிகளின் ஜனநாயக விரோத போக்கையே உணர்த்தும்.

நீங்கள் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்..நாடாளுமன்றத்தில் 15000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றுள்ளதாகக் கூறியுள்ளீர்கள்.அதாவது ஒரு சட்டசபைத் தொகுதிக்கு சராசரியாக 2500 வாக்குகளே குறைவு.அதனால் சட்டசபை இடைத்தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத்தானே அர்த்தம்.

இந்நிலையில் நீங்கள் உங்கள் முடிவை மாற்றிக்கோண்டு..கூட்டணி கட்சிகளின் ஆதரவைக் கேட்டு பெற்று, எல்லாதொகுதியிலும் போட்டியிடுவதே..கட்சியின் எதிர்காலத்திற்கு சிறந்தது.

சற்று சிந்திக்கவும்..

இப்படிக்கு
உங்கள் நலம் நாடும் தோழன்

திரைகவி திலகம் மருதகாசி...சில நினைவுகள்..

தமிழ்த் திரையில் பாடலாசிரியர்களில் மறக்கமுடியாதவர்களில் மருதகாசியும் ஒருவர்..அவர் பாடல்களில் இன்னமும் என் நினைவில் நிற்கும் பாடல்கள்..

தாய்க்குப்பின் தாரம்..படத்தில்..
மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே
இது மாறுவதெப்போ...தீருவதெப்போ நம்ம கவலை

சமுதாயத்தில்..மக்களிடம் காணப்படும்..மேலோர் கீழோர் பற்றிய கவியின் கவலை இப்பாட்டில் தெரியும்.

2.நீலமலைத் திருடன் படத்தில்..
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா...பாடல்..அதில் வரும் பிடித்த வரிகள்

குள்ளநரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை தந்து மயக்கிடும்..நீ
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா-அவற்றை
யமனுலகுக்கு அனுப்பி வைக்க தயங்காதேடா

3.மன்னாதி மன்னன் படத்தில் வரும்..ஆடாத மனமும் உண்டோ? பாடல்

4.நினைத்ததை முடிப்பவன் படத்தில்...கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..என்ற பாடல்

5.தூக்கு தூக்கியில்
கண்விழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மௌனம் - என்ற பாடல்
6.மருத மலை மாமணியே..முருகையா..மதுரை சோமு பாடிய இப்பாடலை மறக்க முடியுமா? இப்பாடல் மருதகாசிக்கு தமிழ்நாடு அரசின் விருது பெற்று தந்தது.

7.யார் பையன் படத்தில் கண்டசாலா பாடிய..'சுயநலம் பெரிதா..பொது நலம் பெரிதா..' என்றபாடல்

8.சாரங்கதாரா படத்தில்..இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்..'வசந்த முல்லை' பாடல்..இவர் எழுதியது என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்?

9.மக்களைப் பெற்ற மகராசியில்...;'மனப்பாறை மாடு கட்டி..மாயவரம் ஏரு பூட்டி' பாடல் அருமை.

10.மண்மீது மானம் ஒன்றே பிரதானம்..என்றெண்ணும் குணம் வேண்டும்..என்ற பாடல் சதாரம் படத்திற்காக எழுதப்பட்டது.

11.மனமுள்ள மறுதாரம் படத்தில் வரும்..இன்பம் எங்கே..பாடல்..இதன் வரிகள் சில
கனிரசமாம் மது அருந்தி பார்ப்பதல்ல இன்பம்
கணிகையரின் பேச்சினிலே கிடைப்பதல்ல இன்பம்
இணையில்லா மணையாளின் தேன் மொழியே இன்பம் - எவ்வளவு அருமையான கருத்து.

மேலும்..வண்ணக்கிளியில் அடிக்கிற கைதான் அணைக்கும்
ரம்பையின் காதலனில்..சமரசம் உலாவும் இடமே..
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்..

இவ்வளவு சொல்லிவிட்டு..ஒன்றை சொல்லாவிட்டால் இளா விற்கு கோபம் வரும்..அதுதான்
விவசாயி..படத்தில் வரும்..விவசாயி பாடல்

முன்னேற்ற பாதையில் மனச வைச்சு
முழு மூச்சாய் அதற்காக தினம் உழைச்சு
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும்
குணமுடையோன் விவசாயி..

ஆகா..எத்தனை அருமையான வரிகள்..

மருதகாசி...தமிழ்திரைஉலகின்..திரைகவிதிலகம் என்பது உண்மை.

தமிழ்க் கவிகள் பலர் மறக்கப்படுகிறார்கள்.

Monday, July 20, 2009

வாசகர் பரிந்துரை புறக்கணிப்பு..

வரும் சட்டசபை இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிக்கும் என ஜெ அறிவித்துள்ளார்.

அதற்கு அவர் கூறும் காரணங்களில் ஒன்று..'மின்னணு இயந்திரத்தை பயன்படுத்துவது'.ஏற்கனவே அதன் பட்டனை அழுத்தினால்..ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே வாக்குகள் விழுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.பி.ஜே.பி.,கூட தேர்தல் ஆணையம்..இது குறித்த சந்தேகங்களை போக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சற்று யோசித்துப் பார்த்தால்..தமிழ்மண பரிந்துரையும் அப்படித்தான் இருக்கிறது...எனக்கு போடப்படும் தம்ஸப் வாக்குகளும்..தம்ஸ் டௌனில் விழுவதாக நினைக்கிறேன்.தேவையில்லாமல் எனக்கு நெகடிவ் வாக்குகள் விழுகின்றன.

ஒரு..உதாரணம்..என் சமீபத்திய..சன் டீவிக்கு கண்டனம் பதிவு..இதில் எதிர்த்து வாக்களிக்க என்ன இருக்கிறது.

தமிழ்மணம் என்னைப் போன்றோரின்..சந்தேகத்தை தீர்த்து வைக்கவேண்டும்.

அல்லது..குறைந்த பட்சம்..குறிப்பிட்ட பதிவிற்கு..ஏன் எதிர்த்து வாக்களிக்கிறோம்..என வாக்களித்தவரின் எண்ணத்தையாவது..சம்பந்தபட்டவர் அறிய வகை செய்தல் வேண்டும்.

அதுவரை வாசகர் பரிந்துரையை புறக்கணிக்க..எங்கள் செயல்குழு முடிவெடுத்துள்ளது.

சன் டீ.வி.க்கு ஒரு கண்டனம்

1..ஐடியல் செல்லுலர் தயாரிப்பான விளம்பர படம்.walk while you talk..என்கிறார்கள்..அப்படி பேசித்தானே அவ்வப்போது சில உயிர்கள் அடிபட்டு மரணம் அடைந்துள்ளன.நடக்கும் போது,வண்டி ஓட்டும் போது எல்லாம்..அலைபேசியில் பேசக்கூடாது என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை விட்டு..இப்படி விளம்பரம் செய்யும் அக்கம்பெனியை கண்டிக்கிறேன்.

2.சன் டீவியில்...ஒரு நாளைக்கு நூறு முறை வரும் விளம்பரம்..மாசிலாமணி யும்...சன் டி.டீ.எச்., விளம்பரமும்.

இரண்டாவது விளம்பரத்தில்..முடி திருத்தும் கடையில் இருவர் பேசுவது போல் வரும் விள்ம்பரம்..

440 ரூபாய்க்கு..சன் டி.டீ.எச்., இணைப்பு கிடைப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் கூறியதும்...மற்றவர்..முடி திருத்துபவரை.. 'டேய்..இரு..'என்பார் மரியாதை இல்லாமல்.அதுவே..அவருடன் பேசும் பக்கத்து வீட்டுக்காரரை அப்படி சொல்வாரா.

முடி திருத்தும் தொழிலாளி என்றால் ..வயதானவரானாலும்...மரியாதை இல்லாமல் 'டேய்' என சொல்லலாமா?

இது அத்தொழில் செய்பவர்களை கேவலமாக எண்ணுவது போல உள்ளது..இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Sunday, July 19, 2009

நட்பின் சிறப்பு என்பது யாதெனில்....

உயிர் காப்பான் தோழன்..என்பர்.

அது எவ்வளவு தூரம் உண்மை என நான் அறியேன்..ஏனெனில் நான் யார் உயிரையும் காப்பாற்றியதில்லை..என்னையும் யாரும் காப்பாற்றியதில்லை.

ஆனால்..நமக்கு வாழ்வில்..ஏற்படும் நண்பர்கள்தான் எவ்வளவு?

பள்ளி பருவத்தில்...உண்டாகும் இளம் நண்பர்கள்..மன விகாரம் இல்லா வயது.கிடைத்த அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளும் வயது.ஒன்றாக சேர்ந்து விளையாடிய வயது.மாமரத்தில் இருந்து விழும் அல்லது திருடும் மாங்காயை..உப்பு ,காரம் தோய்த்து சாப்பிட்ட நட்பு,கமர்கட்டை காக்காய் கடி கடித்து பகிர்ந்துக் கொண்ட வயது.போட்டி படிப்பில் மட்டுமே.இப்படி அந்த கால நட்பு..மனதில் பசுமரத்தாணி போல பதிந்து இன்றும் நினைவில் அவர்கள் பெயர் தங்கியிருக்கும் நட்பு.

அடுத்து..கல்லூரி கால நட்பு.பெற்றோர் கஷ்டப்பட்டு செலவு செய்து படிக்க வைப்பது தெரிந்தும்..பணத்தைப்பற்றி கவலைப்படாமல் இருக்கும் வயது.இக்காலத்தில் ஏற்படும் நட்பு சிலருக்கு வாழ்வில்..சிகரெட்,மது,மாது..போன்ற பழக்கங்களை ஏற்படுத்தி வைக்கிறது..அப்படிப்பட்டவர் நட்பு இவ்வயதில் அதிகம் கிடைக்கிறது.இப்படிப்பட்ட நட்பு..ஆசைக்காக..சில எதிர்ப்பார்ப்புகளோடு அமைந்து விடுகிறது.இப்பருவ நட்பு கம்பி மேல் நடப்பது போல.

அதைத் தாண்டி வந்தால்..அலுவலகத்தில், உடன் வேலை செய்வார் நட்பு.இந்த சமயம்...நிறைய சம்பாதிக்க வேண்டும்,சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாக வரவேண்டும்..அவனைவிட நான் பெரிய ஆளாக வர வேண்டும் என்றெல்லாம் எண்ணக்கூடிய சுயநலம் நிறைந்த நட்பு..

பின் ஓய்வு பெற்றதும்..கிடைக்கும் நட்பு...பழைய வாழ்வை அசை போடும் நண்பர்களுடன்.

இப்படி ஒவ்வொரு பருவத்திலும்..பல வேறுபட்ட நண்பர்கள்..பள்ளி பருவம் முதல்..கடைசி வரை தொடரும் நட்பு..ஒரு சிலருக்கே கிட்டும்.அப்படிப்ப நட்பு அமைந்தால் அதுதான் சிறந்த நட்பு..அப்படிப்பட்டவன் தான் சிறந்த நண்பன்.

ஆனால் எப்பருவத்தில்..எவ்வளவு நாட்கள் தொடரும் நட்பாய் இருந்தாலும்..வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது.

இது தான் நட்பின் சிறப்பு.

Friday, July 17, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 18

1972ல் வந்த படங்கள்

ராஜா
ஞானஒளி
பட்டிக்காடா..பட்டணமா
தர்மம் எங்கே
தவ புதல்வன்
வசந்த மாளிகை
நீதி

இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டு அவருக்கு..

வெளியான 7 படங்களில்4 படங்கள் 100 நாட்கள் படம்.2 வெள்ளிவிழா படம். ..தர்மம் எங்கே..மட்டுமே எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

வசந்த மாளிகை வெள்ளிவிழா படம்.இப்படம் இலங்கையிலும் வெள்ளிவிழா கொண்டாடியது.வாணிஸ்ரீ கதாநாயகி.வசந்தமாளிகை செட் நீண்ட நாட்கள் கலையுலகில் பேசப்பட்டது.

ராஜா..வழக்கம் போல பாலாஜியின் படம்.ஹிந்தியில்..தேவானந்த் நடித்து வந்த ஜானி மேரா நாம் படம்..ஜெயலலிதா கதாநாயகி.

பட்டிக்காடா..பட்டணமா..மாதவன் இயக்கத்தில் ஜெ யுடன் சிவாஜி.

தவ புதல்வன்..முக்தா ஃபிலிம்ஸ் படம்..

நீதி..மீண்டும்...இவ்வருடம் பாலாஜியின் படம்.

எந்த ஒரு நடிகரும்..ஒரே வருடத்தில்..6 வெற்றி படங்களைக் கொடுத்த தில்லை.

இச்சாதனை முறியடிக்க முடியா சாதனை.

தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து கருப்பு வெள்ளை படங்களில் உச்ச கட்ட வெற்றி பெற்ற படம் பட்டிக்காடா பட்டணமா.

இன்று வரை தமிழின் எந்த கருப்பு வெள்ளை படமும் பெறாத வசூலை பெற்ற படம் - பட்டிக்காடா பட்டணமா

இந்த வருடத்தின் முதல் வெள்ளி விழா படம் இது


1973 படங்கள் அடுத்த பதிவில்.

Thursday, July 16, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (17-7-09)

1.ஆண்டிக்கு 15 கோடி வருமானம்

ஒரு பழத்திற்காக கோபித்துக் கொண்டு...எல்லாவற்ரையும் துறந்து..ஆண்டிக்கோலம் பூண்டு..பழனி மலையில் நின்றவர் முருகன் என்பது கதை.

அந்த ஆண்டியின் கோவிலுக்கு இந்த நிதி ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 15 கோடியாம்.

தமிழக கோயில்களில் பக்தர்கள் அதிகம் வரும் கோயில் இது.

பூஜை டிக்கட்டுகள் மூலம் வந்த வருமானம் 8 கோடியே 71 லட்சம்.

பஞ்சாமிர்த விற்பனை 15 கோடி..

இன்று ஆண்டிகள் என்றால் கோடிஸ்வரர்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா?

2.ஜீன்ஸ் படப் புகழைவிட ஒரு மிகப் பெரிய புகழை நடிகர் பிரசாந்த்...பொன்னர்-சங்கர் படத்தில் இயற்றித் தருவாரெனில்..அதைவிட பெரும் பரிசு எனக்கு எதுவும் இருக்க முடியாது..என்கிறார் கலைஞர்.

3.உறவு என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

தண்ணீரில் எண்ணெய் கலப்பது போல இருக்கக்கூடாது. தண்ணீரில் பால் கலப்பது போல் இருக்க வேண்டும்.

4.கடல் ஆழமாக இருப்பதால்..உயரமாக இருக்கும் மலையைவிட மட்டமாகி விடுமா?

5.ஒரு நாடு சுதந்திரநாடு என்பது வேறு..தனிப்பட்ட மனிதன் ஒவ்வொருவனும் போராடித்தான் சுதந்திரம் பெற்றாக வேண்டும்.

6.சென்னை சத்யமூர்த்தி பவனில்..பெருந்தலைவர் காமராஜரின் 107ஆம் பிறந்தநாள் விழா..எவ்வித தகராறும் இன்றி ..(பல தலைவர்கள் கூடியிருந்தும்) கொண்டாடப்பட்டது.

7.ஒரு ஜோக்..
வலைப் பதிவர்கள் எல்லாம்..கையில் ஒரு வலையைத் தூக்கிட்டு எங்கே போறாங்க?
அனானிகளை வலைவீசி தேடப்போறாங்களாம்.

8.இந்த வாரத்திற்கான ஜோக் விருது பெறுபவர் இரா.செழியன்..அவர் சொன்ன ஜோக்

ம.தி.மு.க., தான் அண்ணா வழி வந்த உண்மையான திராவிட இயக்கம்.இதற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.இக்கட்சிக்கு எதிர்காலம் இல்லையெனில்..நாட்டிற்கே எதிர்காலம் இல்லை.

எனக்கும் விருது..




எனக்கு விருது வழங்கிய கோமா அவர்களுக்கு என் நன்றி..

இன்டெரெஸ்டிங் பிளாக்..விருது..

எனது தமிழா தமிழா தளம் அப்படிப்பட்டது என்று தேர்ந்தெடுத்த கோமாவிற்கு நன்றி..ஆனாலும்..அவரது ரசிப்புத்தன்மை சற்று சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்திகிறது.

ஏனெனில்..ஒரு பிரபல பதிவர் எனது வலைத்தள follower ஆக இருந்தார்.திடீரென விலகிக் கொண்டார்.

எனக்கு கொடுக்கப்பட்ட இவ்விருது நான் வேறுயாருக்கேனும் கொடுக்க வேண்டும்...ம்..ம்..

சரி..

இவ்விருதை துவக்கிய செந்தழல் ரவிக்கு இதை அளிக்கிறேன்.

அவரது தளம்

http://imsai.blogspot.com

Wednesday, July 15, 2009

நீண்ட நாட்கள் வாழ....

இன்று மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது.ஆண்களின் சராசரி வயது 64 ஆகவும்..பெண்களின் சராசரி வயது 65 ஆகவும் உள்ளது.

சிலர் சைவ சாப்பாடு சாப்பிட்டால்..நீண்ட நாட்கள் இருக்கலாம் என எண்ணுகின்றனர்.

நீண்ட நாள் வாழ சைவ,அசைவ சாப்பாடுகள் காரணமில்லை.

சுத்த சைவமான ராஜாஜியும் 94 வயது வாழ்ந்தார்...கடைசி வரை பிரியாணியை விரும்பி உண்ட தந்தை பெரியாரும் 94 ஆண்டுகள் இருந்தார்.

நீண்ட நாட்கள் வாழ குடும்ப ஜீன்ஸ் ஒரு காரணம் என்றாலும்...கட்டுப்பாடான வாழ்க்கையும் அவசியம்.

அளவான சாப்பாடு

உடலுக்கு தேவையான உடற்பயிற்சி (தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை அல்லது சைக்கிளிங்)

உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ளவும்..இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.

சர்க்கரை குறைவாக சேர்த்துக் கொண்டால்..நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

வெண்மை நிற..அரிசி,சர்க்கரை,உப்பு,மைதா ஆகியவற்றை குறையுங்கள்.

மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.கோபத்தை விடுங்கள்.பிறர் மீது குறை காண்பதை தவிருங்கள்.பொறாமைக் குணம் வேண்டாம்.

மனம் களங்கம் இல்லை என்றாலே...மனம் சந்தோஷமாய் இருக்கும்.ஆரோக்ய வாழ்வு வாழலாம்.

நாம் வாழ்க்கையில் இன்பமாயிருக்கிறோமா?துன்பமாய் இருக்கிறோமா? என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.

இயற்கை நமக்கு எத்தனை இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறது.

எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா..என்றான் பாரதி.பாரதி இன்பமாய் நினைத்தவை...எதை எதைத் தெரியுமா?

தண்ணீர்: இதில் குளித்தால் இன்பம்..குடித்தால் இன்பம்.
தீ ; குளிர் காய்ந்தால் இன்பம்..பார்த்தாலே இன்பம் (தீபம்)
மண் ; இதன் விளைவுகளிலே இன்பம்.,இதன் தாங்குதல் இன்பம்.
காற்று ; இதை தீண்டினால் இன்பம்..மூச்சில் கொண்டால் இன்பம்.
ஆகாயம்;கேட்கவே வேண்டாம்..பகலில் சூரியன் இன்பம்..இரவில் நிலவு இன்பம்
நட்சத்திரக் கூட்டம் இன்பம்.
தவிர..உயிர்களிடத்தில் பழகுதல் இன்பம்.
மனிதர் உறவு இன்பம்
அன்பு இன்பம்
உண்ணுதல் இன்பம்
உழைத்தல் இன்பம்
உறங்கல் இன்பம்
கூடுதல் இன்பம்
கற்றல் இன்பம்
கேட்டல் இன்பம்
பாடுதல் இன்பம்
பார்த்தல் இன்பம்
எழுதுதல் இன்பம்

இப்பொழுது சொல்லுங்கள்..ஆண்டவன் (இயற்கை) எத்தனைக் கோடி இன்பங்களை நமக்களித்துள்ளான்


ஆகவே வாழும் போது துக்கத்தை பெருக்கிக் கொள்ளாது...இன்பமாய் வாழ்வோம்.

இறந்த பின் சொர்க்கம் போக வேண்டும் என்னும் எண்ணத்தை விட்டு...வாழும் போது..வாழ்வை..நரகமாய் ஆக்கிக் கொள்ளாது சொர்க்கமாய் ஆக்கிக் கொள்வோம்

கலைஞர் கதை வசனத்தில்..மத்திய அமைச்சர் நடிக்கும் படம்..

கலைஞர் இதுவரை 70 படங்களுக்கு திரைக்கதை..வசனம் எழுதி சாதனைப் படைத்துள்ளார்.

இப்போது அவர் எழுதிய பொன்னர்-சங்கர் திரைப்படமாக உள்ளது.அப்படத்திற்கான தொடக்க விழா சமீபத்தில் நடந்தது.

வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற இவ்விழாவில்..ஏ,வி.எம்.சரவணன் கிளாப் அடிக்க...கலைஞர் காமிராவை இயக்கி திரைப்படத்தை தொடங்கி வைத்தார்

இப்படத்தில்..பிரசாந்த் தவிர..மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சரான நெப்போலியனும் நடிக்க இருக்கிறார்.பிரதமர் மன்மோகன் சிங்கின் அனுமதி பெற்றே தான் நடிப்பதாக அவர் தெரிவித்தார்.நெப்போலியன் எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதும்..திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

பொன்னர்-சங்கர் வெற்றிவிழா காணும் என கலைஞர் கூறியுள்ளார்.

Monday, July 13, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.தயாரிப்பாளர்-தூக்கம் வரலேன்னா நம்ம படத்தைப் பார்க்கலாம்னு பத்திரிகைல விமரிசனம் எழுதி இருக்காங்க..
இயக்குநர்- அதனால்தான் படத்துக்கு ஆஃபீஸ்னு பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.

2.தயாரிப்பாளர் (கதாசிரியரிடம்) என்னங்க..உங்க கதையில ஒரே துப்பாக்கி சத்தம்..கொலை..அப்படி..இப்படின்னு இருக்கு..மக்கள் சட்டம் என்ன செய்யுதுன்னு கேட்கமாட்டாங்களா?
கதாசிரியர்- அதற்கும்..ஒரு ஐடியா வைச்சிருக்கேன்..கதாநாயகன் எப்பவும் கையில ஒரு மர சட்டம் வைச்சிருப்பார்..அதனால சட்டம் அவர் கையிலன்னு சொல்லிடலாம்.

3.எங்க ஆஃபீஸ்ல இப்ப தொட்டதெற்கெல்லாம் மெமோ கொடுத்திடறாங்க..
ஆமா..அப்படி எதைத் தொட்டீங்க?
ரிஷப்ஷனிஸ்ட் தாராவைத்தான்

4.என்னங்க..உங்க ஹோட்டல்ல பா.ம.க., ஐந்து ரூபாய்னு போட்டிருக்கீங்க
பார்சல் மட்டும் கட்ட ஐந்து ருபாய்..அதன் சுருக்கம்தான் பா.ம.க.,

5.ஏன் சார்..முகத்தை திருப்பி வெச்சுக்கிட்டு லஞ்சம் வாங்கறீங்க
யாராவது ஃபோட்டோ எடுத்தா ஆள் யாருன்னு தெரியக்கூடாதே...அதற்குத்தான்..

6.அந்த மருந்து கடையில வேலை செய்யறவர் முன்னால டாஸ்மாக் ல வேலை செஞ்சார்னு எப்படி சொல்ற
இருமலுக்கு மருந்து கேட்டா 100 மில்லியா..200 மில்லியான்னு கேட்கறாரே

Sunday, July 12, 2009

திருவள்ளுவர் சிலை திறப்பும்...துரைமுருகன் பதவி பறிப்பும்

ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி பெங்களூரு வில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.18 ஆண்டுகளாக சிலை திறக்க அனுமதி அளிக்காத கன்னடர்கள்..பதிலுக்கு கன்னட கவி சர்வஞ்னர் சிலையை சென்னையில் வைக்க அனுமதி கொடுத்தால்...திருவள்ளுவர் சிலை அமைக்க ஒப்புக் கொள்வதாக கோரிக்கை வைக்க..தமிழக அரசும் ஒப்புக் கொண்டது.

சமீபத்தில் சென்னை வந்த எடியூரப்பா கலைஞரிடம் இது குறித்துப் பேச..கலைஞரும் ஆகஸ்ட் 10 அல்லது 13ஆம் நாள் சர்வஞ்னர் சிலையை சென்னையில் வைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனிடையே..ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்துக் கர்நாடகாவிற்கும்..தமிழகத்திற்கும் சர்ச்சை இருந்துக் கொண்டிருக்கிறது.

கர்னாடகா முதல்வர் சென்னையில் கலைஞரை சந்தித்து...சிலைகள் பரிமாற்றம் பற்றி மட்டுமே பேசினார் என்றால் சரி.

இதற்கும்..துரைமுருகன் திடீரென பொதுப்பணித்துறையிலிருந்து விடுவிக்கப் பட்டதற்கும் சம்பந்தம் இருக்காது என நம்புவோமாக.

கர்நாடகாவும்..அப்படி ஒரு கோரிக்கைவைத்து.. கலைஞரும் அதற்கு ஒப்புக் கொண்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

துரைமுருகன் பொதுப்பணித்துறையிலிருந்து விடுவிக்கப் பட்டது எதேச்சையாக நடந்திருக்கக்கூடும்.

நான் யார் ..நான் யார் ...

நான்
உடல் வலிமையுள்ளவன் என்கிறாயே
உன் அன்னைக்கு நன்றி சொல்
உதிரத்தை பாலாய் கொடுத்தவள்
அவர்

நான்
பண்புள்ளவன் என்கிறாயே
உன் தந்தையை வணங்கு
உன்னை ஆக்கியவர்
அவர்

நான்
அறிவாளி என்பவனே
உன் ஆசிரியரை நினை
உன் அறிவை வளர்த்தவர்
அவர்

நான்
நல்ல கணவன் என்கிறாயே
உன் மனைவியைக் கேள்
உனக்கு அப்பெயர் வரக் காரணம்
அவள்

நான்
நல்ல தந்தை என்பவனே
உன் வாரிசுகளைக் கேள்
உன் கடமையைசெய்ததை உரைப்பவர்
அவர்

நான்
நல்லவன் என பெருமையுறுபவனே
உன் உடல் சுமக்கப்படும் போது
உன் சுற்றமும்..நட்பும் சொல்லட்டும்
அதை

Friday, July 10, 2009

ஏன் இப்படி...?

பூமி வெப்பமயமாகிக் கொண்டிருக்கிறது...

பூமியில் வாழும் நாமும் அப்படி ஆகிக் கொண்டிருக்கிறோமா..?

ஆமாம்..என்கிறது இணைய தளம்..

எவ்வளவு சூடு பறக்கும் பதிவுகள்.ஒருவர் மீது ஒருவர் சேற்றை வீசிக் கொண்டிருப்பது ஏன்? தனிப்பட்ட முறையில் பேசுவதற்குக் கூட இப்போது பயமாய் இருக்கிறது.

நம்மிடம் புரிதல் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

சமிப காலங்களில் பாருங்கள்..சாரு,பைத்தியக்காரன்,லக்கிலுக் பதிவுகள்..நாகர்ஜுனிடம்..பைத்தியக்காரன் பகிரங்க மன்னிப்பு.

பரிசல் பதிவில்..அதிஷா ஏதோ பின்னூட்டமிட..மணிகண்டன் அதற்கு பதில் சொல்ல..பரிசல் பகிரங்க மன்னிப்பு.

இப்போது..

நர்சிம்,தீபா..பதிவுகள்.

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

உங்கள் தளத்தில் நீங்கள் உங்கள் கருத்துகளை பதிவிடுவதில் தவறில்லை.

ஆனால்..அதற்குமுன்..இது தனிப்பட்ட முறையில்..யாரையாவது புண்படுத்துமா? என யோசியுங்கள்...யோசிக்காமல் எழுதிவிட்டு..பின் மன்னிப்பு என்பதில் என்ன லாபம்

வார்த்தைகளை கொட்டி விட்டால்..அள்ள முடியாது..

வரும் நாட்களில்...

நகைச்சுவை என்றாலும்..அதனால் பிறர் மனம் துன்படும் என்றால்..அப்பதிவு வேண்டாமே....

மறப்போம்...மன்னிப்போம்..

ப்ளீஸ்...

Thursday, July 9, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (10-7-09)

1.மனிதரில் மூன்று பிரிவு உண்டு.விலங்கு,மனிதன்,தேவர்..தனக்காக வாழ்பவன் விலங்கு, பாதி தனக்காகவும்...மீதி பிறருக்காகவும் வழ்பவன் மனிதன்...பிறருக்காகவே வாழ்பவன் தேவன்

2.யார் வீட்டுக் கூரை எறிந்தால் என்ன...என் வீடு பத்திரமாக இருக்கிறது என்ற சுயநலத்துடன் இருக்காதீர்கள்.நாளையே உங்கள் வீடு எரியும் போது மற்றவர்கள் அப்படி எண்ணிவிட்டால்?

3.அவன் உயர்ந்தவன்..நான் தாழ்ந்தவன்..அவ்னுக்கு எல்லாம் தெரியும்...எனக்கு தெரியாது...என்றெல்லாம் தாழ்வு மனப்பான்மையுடன் இராதீர்கள்.பூமிக்கடியில் புதைந்து கிடக்கும்..கரித்துண்டுதான்..ஒருநாள் வைரமாக மிளிருகிறது.

4.மழை தனக்காக பொழிவதில்லை
மரங்கள் தமக்காக வளர்ந்து கனிகளை அடைவதில்லை
சூரியன் தனக்காக உதிப்பதில்லை
ஆறுகள் தனக்காக ஓடவில்லை
காடுகள் அவற்றிற்காக வளரவில்லை
கடல்கள்..முத்தையும்,மீங்களையும்,உப்பையும் தமக்காக வைத்திருக்கவில்லை
பிறருக்கு கொடுக்கவே இவை இப்படி
ஆனால்...மனிதன் மட்டுமே..தனக்காக வாழவேண்டும் என எண்ணுகிறான்.

5.marriage
It is an agreement in which a man loses his bachelor's degree and a woman gains her master's

6.காதலன்; நாம ஓடிப்போய் ரிஜிஸ்தர் ஆஃபீஸ்ல கல்யாணம் பண்ணிக்கலாம்
காதலி;நாம ஓடத்தெரிஞ்சவங்க..சரி...ஓடத் தெரியாதவங்க எங்க போய் கல்யாணம் செஞ்சுப்பாங்க?

சிவாஜி ஒரு சகாப்தம் - 17

1971ல் வந்த படங்கள்
இரு துருவம்
தங்கைக்காக
அருணோதயம்
குலமா குணமா
பிராப்தம்
சுமதி என் சுந்தரி
சவாலே சமாளி
தேனும் பாலும்
மூன்று தெய்வங்கள்
பாபு

இவற்றில் 3 படங்கள் 100 நாள் படங்கள்.அவை குலமா குணமா,சவாலே சமாளி,பாபு.

கே.எஸ்.ஜி.,படம்..குலமா குணமா..பாடல்கள் அருமை..பத்மினி நாயகி

சிவாஜியின் 150 ஆவது படம் சவாலே சமாளி..கே.எஸ்.ஜி.,யின் சீடராய் விளங்கிய மல்லியம் ராஜகோபால் தயாரிப்பு..இயக்கத்தில் வந்த படம். சிவாஜி நடிக்க வந்து 19 வருடங்களில் 150 ஆவது படம்.

சுமதி என் சுந்தரி..நல்ல கதையமைப்பு..பாடல்கள் இருந்தும் எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை.அருணோதயம்..படமும்..அப்படியே..

இரு துருவம்..பி.எஸ்.வீரப்பா படம்..படத்தின் கதையமைப்பு ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புக்கு இல்லை.

பாபு..சிவாஜி தான் செய்த தவறுக்காக..ஒரு குடும்பத்தைக் காக்கும் பொறுப்பேற்பார்.

தேனும் பாலும்..நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததால் தோல்வியுற்ற படம். பிராப்தம்..சாவித்திரியின் சொந்தப் படம்..தோல்வி.

மூன்று தெய்வங்கள் படத்தில்.. ஜோடி,டூயட்,பாடல் ஏதுமில்லாமல் நடித்திருக்கிறார்.

இவ்வருடம்..ஒரே திரை அரங்கில் தொடர்ச்சியாக 15 மாதங்கள் சிவாஜியின் படங்கள் தொடர்ந்து ஓடி சாதனை புரிந்தது.

மதுரை..ஸ்ரீதேவி திரையரங்கில்..சென்ற வருடம் தீபாவளி முதல்..1971 முடிவு வரை தொடர்ந்து..எங்கிருந்தோ வந்தாள்,தங்கைக்காக,குலமா குணமா,சவாலே சமாளி,பாபு..என மொத்தம் 444 நாட்கள் சிவாஜி படங்கள் திரையிடப்பட்டது.

அடுத்த பதிவில் 1972 படங்களைக் காணலாம்.

Wednesday, July 8, 2009

வாய் விட்டு சிரியுங்க..(ஹோட்டல் ஜோக்ஸ்)

1.அந்த ஹோட்டல் முதலாளி முன்னால ரேஷன் கடையில இருந்தார்னு எப்படி சொல்ற
போர்டுல..இன்றைய இருப்பு 20 இட்லி,30 பூரி,15 தோசை..25 வடைன்னு எழுதியிருக்காரே

2.அந்த ஹோட்டல் முதலாளியை ஏன் கைது பண்ணிட்டாங்க
ஆடிக்கழிவுன்னு போட்டாராம்..சாப்பிட்டவங்க எல்லாம் கழிஞ்சுக்கிட்டே இருக்காங்களாம்..

3.அந்த ஹோட்டலுக்குப் போனால் தகாத உறவெல்லாம் ஏற்படுமா? எப்படி?
இட்லிக்கு கிழங்கும்..பூரிக்கு வடகறியும் கொடுப்பாங்க

4. அந்த ஹோட்டல்ல இரண்டு இட்லி சாப்பிட்டா இரண்டு இட்லி இலவசமா தருவாங்களாம்
ஏன் அப்படி
ஸ்டாக் கிளியரன்ஸாம்

5.அந்த ஹோட்டல்ல காசு இல்லாம சாப்பிட்டா அரைச்ச மாவையே அரைக்க சொல்லுவாங்களாம்
ஏன்
அந்த ஹோட்டல் முதலாளி முன்னால மெகா சீரியல் தயாரிப்பாளராம்

6.அந்த டாக்டர் முன்னால ஹோட்டல் வைச்சிருந்தார்னு எப்படி சொல்ற
கிளினிக் வெளியே போர்டுல பெரும் வியாதியஸ்தர்கள் உள்ளே வரக் கூடாதுன்னு போட்டிருக்காரே!

Tuesday, July 7, 2009

திரை இசைமேதை ஆர்.சுதர்சனம்

ஆர்.சுதர்சனம் என்ற திரைப்பட இசையமைப்பாளரை நம்மில் பலர் மறந்திருப்போம்..அல்லது தெரியாது இருந்திருப்போம்.

அவர் இசை அமைப்பில் வந்த படப்பாடல்கள் அருமை.அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஏவி.எம்.,மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான இவர்...நாம் இருவர் படத்தில் பாரதி பாடல்களுக்கு இசையை பிரமாதமாக அமைத்துள்ளார்.அவற்றில் ஒரு பாடல் "ஆடுவோமே..பள்ளு பாடுவோமே"

அறிஞர் அண்ணாவின்..திரைக்கதை வசனத்தில் வந்த ஓர் இரவு படத்தில்..'அய்யா சாமி' பாடலும்...'துன்பம் நேர்கையில்' பாடல்கள் இவர் இசை அமைத்தவை.பிந்தைய பாடலின் ஆசிரியர் பாரதிதாசன்.

களத்தூர் கண்ணம்மா படப்பாடல்கள் அருமை.'ஆடாத மனமும்' 'அருகில் வந்தாள்' குறிப்பிடத்தக்கவை.

கொஞ்சும் சலங்கை..'சிங்கார வேலனே' இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தெய்வப்பிறவி..'அன்பால தேடிய" மறக்க முடியா பாடல்.

அன்னை படத்தில்..பானுமதி பாடிய "அன்னை என்பவள்'பாடல்,சந்திரபாபு பாடிய 'புத்தியுள்ள மனிதரெல்லாம்" இவர் திறமைக்குச் சான்று.

காட்டு ரோஜா படத்தில்...'ஏனடி ரோஜா" பாடலும்..பி.பி.ஸ்ரீனிவாசன் பாடிய..கண்ணதாசனின்..'எந்த ஊர் என்றவனே" அருமையானவை.

திலகம் என்ற படத்தில்..'B..O..Y..பாய்' பாடல்..அந்த நாளில் பிரசித்தம்.

'கண்ணா கருமை நிறக் கண்ணா' பாடல் மட்டுமில்லாது..நானும் ஒரு பெண் பாடல்கள் அனைத்தும் அருமை.

பெண் படத்தில்...'கல்யாணம்' என்ற பாடல்..எஸ்.பாலசந்தருக்காக..சந்திரபாபு பிண்ணனி பாடிய பாடல்.

பராசக்தியில் அனைத்து பாடல்களும்..குறிப்பாக..'கா..கா..கா..'பாடல்.மற்றும் பூமாலை நீ ஏன் பிறந்தாய் பாடல்கள்

ஸ்ரீவள்ளி படத்தில்...கானாத காயகத்தே..இன்றும் பல திருவிழாக்களில் தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பாடப்படுகிறது.

தவிர்த்து..கலைஞரின்..பூம்புகாரில்..'என்னை முதன் முதலாய்' பாடல்..பூமாலையில்..'பாரிஸ் நகர பியூட்டி' பாடல்..

இப்படி...தேனினும் இனிய பல பாடல்களுக்கு இசை அமைத்தவர் சுதர்சனம்.

ஏ.வி.எம்.மின் லோகோ விற்கு இசை அமைத்தது இவர்தான்... இன்றும் நம் காதுகளில் தினம் ஒலித்துக் கொண்டிருக்கிறது அது.

Monday, July 6, 2009

ஒரு வருடம் ஓடிப்போச்சு...

திடீரெனத்தான் ஞாபகம் வந்தது.

இப்படித்தான்..சில விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொண்டாலும்...சரியாக ஞாபகம் வரவேண்டிய சமயங்களில் அவற்றை மறந்து விடுவோம்.உதாரணமாக..திருமண நாளை முதல் நாள் வரை ஞாபகம் வைத்திருப்போம்.அடுத்த நாள் வீட்டில் மனைவி 'இன்று என்ன சொல்லுங்க பார்ப்போம்.." என ஆவலாய் கேட்கும் போது..மறந்து தொலைத்திருப்போம்.

ஆமாம்...இப்போது எதற்கு அதையெல்லாம் சொல்கிறீர்கள்? ஏதேனும் மொக்கை பதிப்பு போடப்போகிறீர்களா என்கிறீர்களா?

எனக்கு இப்பதிவு மொக்கையில்லை...உங்களுக்கு எப்படியோ..

நான் தமிழ்மணத்தில்..இடுகைகளை போட ஆரம்பித்து..ஒரு வருடம் நேற்றுடன் முடிந்தது.

பதிவுலகில்..யாரையும் தெரியாமல் பதிவிட ஆரம்பித்த எனக்கு...இன்று என் நலம் நாடும்..சகோதர, சகோதரிகள் எவ்வளவு பேர் !!

ஆகஸ்ட் 3ல் ஃபிட்ஜிட் போட்டேன்...இதுவரை 94000 ஹிட்ஸ்..

78 Followers

கிட்டத்தட்ட 6000 பின்னூட்டங்கள்..

இது ஒரு சாதனை இல்லைதான்...சிலரின் சாதனைகளுடன் ஒப்பிடும்போது...

ஆனால் என்னைப் பொறுத்தளவில்...மனம் மகிழ்கிறது...

இதைவிட சாதனை பெரிதல்ல..

அனைவருக்கும் நன்றியும்...அன்பு வணக்கங்களும்..

Sunday, July 5, 2009

'திரை இசைத் திலகம்'கே. வி.மகாதேவன்

இரு திறமைசாலிகள் இருக்கையில்...ஒருவர் மட்டும் பெரும் புகழ் அடைவதும்...அவருக்கு இணையான திறமையுள்ளவர் அவ்வளவு புகழ் அடையமுடியாமல் இருப்பதும் சகஜம் என்றாலும்...திரையுலக இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை அனைவரும் மறந்துவிட்டது அவரது துரதிருஷ்டமே.

திரை இசைத் திலகம் மாகாதேவன் என்றதும்..நமக்கு உடன் ஞாபகம் வருவது..அந்த கால எம்.ஜி.ஆர்., படப் பாடல்களே..அதுவும் தேவர் ஃபிலிம்ஸ் படப் பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை.

ஏமாறாதே..ஏமாற்றாதே,மஞ்சள் முகமே வருக(வேட்டைக்காரன்),மனுஷனை மனுஷன்(தாய்க்குப் பின் தாரம்),சிரித்து சிரித்து(தாய் சொல்லை தட்டாதே),உண்டாக்கி தந்தவர்கள் இரண்டு பேரு(முகராசி),உழைக்கும் கரங்களே..(தனிப்பிறவி),ஏதோ ஏதோ ஒரு மயக்கம்(குடும்பத்தலைவன்),பல்லாண்டு வாழ்க பாடல்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.விவசாயி படப் பாடல்கல் அனைத்தும் அருமை.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படங்களுக்கும் இசை இவர்தான்...'மாமா..மாமா' பாடலை எளிதில் மறந்துவிட முடியுமா..இப்பாடலுக்குப் பிறகு..மாகாதேவனை திரையுலகினர் அனைவரும் கூப்பிடுவது 'மாமா' என்றுதான்.இவர் இசை அமைத்த மற்ற மறக்க முடியா பாடல்கள்..என் நினைவிலிருந்து...

ஒரே ஒரு ஊரிலே (படிக்காத மேதை)
சிட்டுக்குருவி(டவுன் பஸ்)
மணப்பாரை மாடு கட்டி (மக்களை பெற்ற மகராசி)
அமுதும் தேனும் எதற்கு (தை பிறந்தால் வழி பிறக்கும்)
பசுமை நிறைந்த நினைவுகளே(ரத்த திலகம்)
பறவைகள் பலவிதம்,கண்ணெதிரே தோன்றினாள் (இருவர் உள்ளம்)
தூங்காத கண்ணென்று ஒன்று,சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (குங்குமம்)

தவிர திருவிளையாடல்,தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்கள்.'ஒரு நாள் போதுமா" இவரை சொல்ல.ஏ.பி.என்.படங்கள் இசையை மறந்துவிட முடியுமா?

இதயக்கமலம்..படப்பாடல்கள்..

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.இவருக்கு உடன் இருந்து கடைசி வரை தொண்டாற்றினார் புகழேந்தி.

ஆமாம்..இவ்வளவு சொல்லிவிட்டு...முக்கியமான ஒன்றை சொல்லவில்லை என்கிறீர்களா?

ஆம்...பல தெலுங்கு படங்களிலும் இவர் இசை பாராட்டப்பட்டது.

மகுடம் வைத்தாற்போல்..'சங்கராபரணம்" பாடல்களை மறக்கமுடியுமா?


இப்படிப்பட்ட இசைமேதை வாழ்நாளில் சரியாக கௌரவிக்கப் படவில்லை..திறமைசாலிகளுக்கு இப்படிப்ப நிலை என்பதுதான் தலைவிதி போலும்.

எப்படி வாழ வேண்டும்..(அரைபக்கக் கதை)

ஒரு சந்நியாசியிடம்..அவர் சிஷ்யன்..ஒருநாள்..'சுவாமி...நான் எப்படி வாழவேண்டும்..என்பதை..தெரிவித்தால்..நலமாயிருக்கும்..'என்றான்.,

குருவும்..தன் ஆயுட்காலம் முடிவதை..அறிந்து..தன் சிஷ்யன் இனி..தனியாக..விவரங்களை தெரிந்துக்கொள்ளட்டும்..என்று...தூரத்தில் நொண்டிக்கொண்டே வரும் நரியைக்காட்டி..'அதனுடன் செல்..அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது..என்று பார்..அப்போது..நீ எப்படி வாழவேண்டும் என்று தெரியும்..' என்றார்.,

நரியை தொடர்ந்து வந்த சிஷ்யன்..தூரத்தே ஒரு சிங்கம்..இறந்த மானின் உடலை இழுத்து வருவதை பார்த்து ஒளிந்துக் கொண்டான்.அந்த மான் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது.அதை சிறிது தின்றுவிட்டு..மீதத்தை..நரியிடம் போட்டு விட்டு சென்றது..சிங்கம்..

உடனே சிஷ்யனுக்கு ..வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது..

அடுத்தநாள் முதல்...சிஷ்யன்..உண்ணாமல்...யாரேனும் தனக்கு..உணவு கொண்டுவந்து தருவார்கள் என காத்திருக்க ஆரம்பித்தான்..

நாட்கள் உருண்டன...

ஆனால்..யாரும் உணவை கொண்டுவந்து தரவில்லை..

அவன் உடல் இளைத்து..தெம்பையெல்லாம் இழந்தான்..குருவைத் தேடி வந்தான்..நடந்த விஷயங்களைக் கூறி.'குருவே..அந்த நரிக்கு கொடுத்தாற்போல்..யாரேனும்..எனக்கு ..உணவு கொண்டுவந்து தருவார்கள் என எண்ணினேன்..ஆனால் யாரும் வரவில்லை.'என புலம்பினான்..

பதிலுக்கு..குரு..'அட..மடையா..நீ என்னிடம்..எப்படி வாழவேண்டும் என்று கேட்டாய்...நானும் சொன்னேன்..ஆனால்..நீ..சிங்கம்..நரியைப் பார்த்து..தப்பாய் புரிந்துக் கொண்டாய்..உண்மையில்..நீ என்ன செய்திருக்க வேண்டும்..சிங்கம் போல வாழ நினைத்திருக்க வேண்டும்..மற்றவர்களுக்கு..உதவியாய்...மற்றவர்களுக்கு..உணவளிக்கக் கூடியவனாய் இருக்க எண்ணியிருக்க வேண்டும்'என்றார்..

அப்போதுதான்..சிஷ்யனுக்கு..எப்படி வாழவேண்டும் என்பதற்கான விடை தெரிந்தது.
(மீள்பதிவு )

Saturday, July 4, 2009

வாய் விட்டு சிரியுங்க

அந்த நீதிபதி தீர்ப்பு சொல்லும் போது எல்லாம் கையிலே ஒரு தீப்பந்தத்தை வைச்சிருப்பார்
ஏன்?
சட்டம் ஒரு இருட்டறைன்னு யாரும் சொல்லிடக்கூடாது இல்லையா?

2.உங்களுக்கு மாடு வாங்க லோன் தந்தா அதை எப்படி திருப்பிக் கட்டுவீங்க?
கால் நடையா வந்துதான்.

3.கள்ள நோட்டை அடிச்ச நீ எப்படி மாட்டிண்ட
நோட்டிலே ரிசர்வ் பாங்க் கவர்னர் கையெழுத்து போட வேண்டிய இடத்திலே என் கை நாட்டை வைச்சுட்டேன்.

4.தலைவர் போற இடத்திற்கெல்லாம் ஒரு கட்டு பேப்பர்களை எடுத்துட்டுப் போறாரே..ஏன்?
அவர் மேல உள்ள வழக்குகளுக்கு முன் ஜாமீன் வாங்கினத்துக்கான பேப்பர்களாம்

5.என் கணவர் தூங்கும்போதும் கண்ணாடி போட்டுக்கிட்டுத்தான் தூங்குவார்
ஏன்?
கனவுல வர்றவங்க சரியா தெரியணும்னுட்டுத்தான்

6.நீங்க பேய்,பிசாசு இருக்கறதை நம்பறீங்களா?
கல்யாணம் ஆறவரைக்கும் எனக்கு அதில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது

Friday, July 3, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (3-7-09)

1.பிறப்பையும்..இறப்பையும் தவிர..அனைத்தும் மறுபரீசலனைக்குரியது.பூமியில் மிகப் பெரியவனாகத் தெரிபவன்...கடலுக்குள் விழுந்து விட்டால் அதில் உள்ள மீனுக்கு சிறியவனாகி விடுகிறான்.

2.கப்பல் கரையில் இருக்கும்வரை பிரச்னை இல்லை.அது கடலில் செல்லும்போதுதான் புயலை சந்திக்க நேரிடும்.ஆனாலும் கப்பல் என்பது..கரையில் இருக்க கட்டப்பட்டதில்லை.பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வதில்தான் திறமை இருக்கிறது.

3.ராமன் ஆண்டா என்ன..ராவணன் ஆண்டா என்னன்னு இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க...ஆனா என்னைக் கேட்டா அது தப்புன்னு சொல்வேன்..யார் ஆண்டாலும் நம் குடும்பத்துக்கு நாம் உழைச்சாத் தான் சோறு.இந்த எண்ணம் அனைவருக்கும் வேண்டும்.

4.அச்சத்தை தவிருங்கள்..இதுதான் என் வழி என தீர்மானியுங்கள்.பின்..அந்த லட்சியத்தில் முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள்.நமக்கு அதில் பயணம் மட்டுமே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

5.ஒரு ஜோக்
சார்..நீங்க என் அப்பாவைவிட பெரியவங்க.
தம்பி என்ன சொல்றீங்க
ஆமாம்..சின்ன வயசில என்னை தூங்க வைக்க எங்கப்பா படாத பாடு படுவார்.கதை சொல்வார்..பாடுவார்..ஆனா நீங்க இது எதுவும் இல்லாமல் பேசியே எனக்கு தூக்கத்தை வரவழித்து விடுகிறீர்கள்.

6.இந்தவார சிறந்த ஜோக் விருது ஸ்ரீதர் வாண்டையாருக்கு..அவர் சொன்னது
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 14 இடங்களில் தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுவோம்னு சொல்லிவிட்டு 12 இடங்களில் வெற்றியை பெற்று தந்துள்ளோம் என்கிறார் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்.

Thursday, July 2, 2009

எஸ்.வி.சேகர் செய்வது நியாயமா?

சேகர்...2006க்கு முன்..ஒரு நடிகர்.ஒரு முறை தேர்தலில் சுயேட்சையாக நின்று..மைலாப்பூர் தொகுதியிலேயே 1500 ஓட்டுகள் மட்டுமே பெற்றவர்.பின்..பி.ஜே.பி., என்றவர்..சங்கராச்சாரியார் என்றவர்..அம்மாவிடம் தஞ்சம்.

மைத்ரேயனுக்குத்தான்..மைலை தொகுதி என்ற நிலையில்..ஜெ..இவருக்கு கொடுத்தார்.இரட்டை இலை சின்னம் என்பதால் வெற்றி பெற்றார்.அதுவும் எதிர்த்து போட்டியிட்ட நெப்போலியனை..குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

பின்னர்...தலைமையிடம் மனக்கசப்பு...சேகர்..எப்போதும் தனக்கு சரியென்று தோன்றுவதை செய்பவர்.விளம்பரப் பிரியர்.அப்படிப்பட்டவரால்..அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு...காலில் விழும் கட்சியில் குப்பை கொட்ட முடியுமா?

விரிசல்...பெருகியது..

இந்நிலையில்.. மற்ற எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றம் செய்தபொது..செக்யூரிட்டியினர்..இவரை விட்டு விட்டனர்.நான் திரிசங்கு நிலையில் இருக்கிறேன்..என்கிறார்.

இவர் செய்வது நியாயமா...

சேகர்....

கட்சி உங்களை ஒதுக்கினாலும்...நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது அ.தி.மு.க., வேட்பாளராக..

ஆகவே..அக்கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும்..அவர்கள்..சட்டசபையில் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.அதை விடுத்து..தனியாய் செயல்படுவேன்..என்றால்..நீங்கள்..உங்களைத் தேர்ந்தெடுத்த மைலை வாக்காளர்களுக்கும் உண்மையாய் இல்லை என்றே ஆகிறது.

இப்படியே..அடுத்த இரு வருடங்களை ஓட்ட நினைத்தால்...சபைக்கே வராதீர்கள்.சட்டசபைக்கு வந்துதான் தீருவேன் என்றால்...நீங்கள் சார்ந்த கட்சிக்கு கட்டுப்படுங்கள்..அக்கட்சி உங்களை நிராகரித்தாலும்.

ஆது..முடியவில்லை எனில்..பதவியை ராஜிநாமா செய்யுங்கள்.பின் நடக்கும்..இடைத்தேர்தலில் போட்டியிட்டு (எந்த கட்சி சார்பாய் இருந்தாலும்) வெற்றி பெற்று...மக்கள் உங்கள் பக்கம்தான் என நிரூபியுங்கள்.

அதைவிடுத்து...சட்டசபையிலும்..நகைச்சுவையாளன் என்பதை எஷ்டாபிளிஷ் செய்ய வேண்டாம்.

இது..எந்த உள்நோக்கமோ ..கட்சியை ஆதரித்தோ எழுதப்படவில்லை.

...மைலை வாக்காளரில் ஒருவன் என்ற முறையிலும் எழுதப் பட்டது.

Wednesday, July 1, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.நம்ம தலைவரோட வேட்பு மனு ஏன் நிராகரிக்கப்பட்டது?
பழக்க தோஷத்திலே வேட்பு மனுவுக்கு பதிலா முன் ஜாமீன்
மனுவை தாக்கல் பண்ணிட்டாராம்.

2.டாக்டர் என் மனைவி உட்காரவே மாட்டேன்னு சொல்லறா..
எப்பவும் நின்னுக்கிட்டேதான் இருக்கா..
அப்படியா? உன் பெயர் என்னம்மா?
அமராவதி

3.கட்சி அலுவலகத்தை தலைவர் ஏன் a \c பண்றார்?
அவர் கிட்ட எல்லாருக்கும் குளிர் விட்டுப்போச்சாம்.
4.என் பையன் போற போக்கைப் பார்த்தா கவலையாயிருக்கு..
மதிக்கவே மாட்டேன்னு சொல்றான்.
உங்களையா ?
அவன் மனைவியை

5.அலுவலகத்திற்கு நேரமாயிடுச்சுன்னு சொல்றீங்க..ஆனா
போறப்போ வெத்தலை,பாக்கு பழம் எல்லாம் எடுத்துட்டு
போறீங்களே..ஏன்?
அலுவலகத்திற்கு தாமதமாய் போனால் அதிகாரி அர்ச்சனை
பண்ணுவார்னு சொன்னாங்க..அதுக்குத்தான்... .

Twenty 20 -- ஒரு விமரிசனம்

ஏல்லோரும்..இப்ப வலைப்பக்கங்களில் சினிமா விமரிசனம் செய்ய ஆரம்பிச்சாச்சு..நாம மட்டும் சும்மா இருந்தா எப்படி.

நம்ம பங்குக்கு நாமும் ஒரு படத்தை விமரிசனம் செய்யணுமே! என்ன செய்யலாம்னு யோசனை பண்ணப்போ..Twenty 20 மலையாளப் படம் பார்க்க நேர்ந்தது.அதைப்பற்றி..

மலையாளப் படங்களில்..நம்ம ஊர் மாதிரி நடிகர்களுக்கு ஈகோ கிடையாது.இந்த படத்தில்..மது,மம்முட்டி,மோகன்லால்,ஜெயராமன்,பிருத்விராஜ்,நயன்தாரா,கோபிகா,கலாபவன் மணி என ஒரு நட்சத்திர பட்டாளமே உண்டு.

பாத்திரங்கள் அமைப்பில்..மோகன்லாலை விட சற்று கூடுதல் வெயிட் உள்ள கேரக்டர் மம்முட்டியுடையது.ஒரு பிரபல வக்கீல் பாத்திரத்தில் வருவார்.மோகன்லால்..கிட்டத்தட்ட ஒரு வில்லன் போன்ற பாத்திரம்.ஆனாலும்...நம் மனம் மோகன்லால் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் .

ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியின் பேரன் படிக்கும் மருத்துவக் கல்லூரியில்..ஒரு கொலை செய்துவிட்டதாகக் கைது செய்யப்படுகிறான்.அவனை விடுவிக்க அட்வகேட் மம்முட்டியின் உதவியை நாட..அவரும் தன் வாதத் திறமையால் விடுவிக்கிறார்.ஆனால்..அந்த பையனையும் மோகன்லால் கொலை செய்துவிட்டதாய் பழி வர...மோகன்லாலையும்...மம்முட்டி விடுவிக்கிறார்.

ஆனால்..நிரபராதி என்று நினைத்த மோகன்லால் தான் கொலையாளி என தெரிந்ததும்..அவரை மீண்டும் கூண்டிலேற்ற நினைக்கிறார் மம்முட்டி.இதனிடையே..நீதிபதியின்..குடும்பத்தை பழி வாங்க நினைக்கும்
போலீஸ் அதிகாரி வேறு.

..இப்படி..மோகன்லால்,மம்முட்டி,போலீஸ் அதிகாரி என ஒவ்வொருவரும்...அவர்களே அறியாமல்..ஒரே காரணத்திற்கு உழைப்பது கடைசியில் தெரிய வருகிறது.

அனேக திருப்பங்களுடன் திரைக்கதை அமைந்துள்ளது.படத்தின் இயக்குநர் ஜோஷி.

சென்ற வருஷம் வந்த இப்படம் சூப்பர் ஹிட்..

திரைக்கதை அமைப்புக்காக..இப்படத்தை..அனைவரும் பார்க்க வேண்டும்.l