Friday, May 23, 2008

நாடகம் பொழுதுபோக்கா? கலையா?நடந்த சொற்போரில் நான் ஆற்றிய உரை

இலக்கியம் என்றால் படித்து மகிழ்வது.
நாடக இலக்கியம் என்றால் பார்த்து மகிழ்வது.
நாடகம் கலைகளுக்கெல்லாம் அரசன்.மக்கள் பயன்படுத்தும் ஒரு மகத்தான கலை.
எது ஒருவனை மகிழ்விக்கிறதோ..அது கலை.எது சமுதாயத்தை அப்படியே பிரதிபலிக்கிறதோ அது கலை.
மிகைப்பத்தப்படாதது எதுவோ..அது கலை.அதனால் தான் தத்ரூபமாக வரும் படங்களை art film
என்கிறோம்.நாடகங்களை நாடகக்கலை என்கிறோம்.
நாடகம்...நாடு+அகம்..நாட்டை அகத்தில் கொண்டதே நாடகம்.அதாவது நாட்டின் சென்ற காலத்தையும்,நிகழ்காலத்தையும் தன்னகத்தே காட்டுவதால்..நாடு..அகம்..நாடகம் என பெயர் பெற்றது எனலாம்.
நாடு..அகம்..அதாவது அகம் நாடு..உன்னுள் நோக்கு,உன்னை உணர்..சுருங்க ஒரு வரியில் சொல்ல
வேண்டுமென்றால்..நாடகம் உலக நிகழ்ச்சிகளை காட்டும் கண்ணாடி எனலாம்.
நாடகக் கலை என்பது என்ன? சிந்தித்துப் பாருங்கள்..
நாம் வெளியே போகும்போது எத்தனையோ காட்சிகளைப் பார்க்கிறோம்.ரசிக்கிறோம்.சில காட்சிகள்
நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன.
அப்படிப் பதிந்துவிட்ட காட்சியை ஒரு ஓவியன் ஓவியமாக வரைகிறான்.
நம் வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புகளை..மழலை பேச்சுகளை எப்படி ரசிக்கிறோம்.அந்த குழந்தையை
புகைப்படம் எடுத்து..அதைப்பார்த்து எவ்வளவு மகிழ்கிறோம்?கடைகளில் பலகாய்கறிகளைப் பார்க்கிறோம்.
ஆனால் அவற்றை அதிசயமாகவோ..ஆர்வமாகவோ..பார்ப்பதில்லை.ஆனால் அவற்றை மண்ணாலோ..
காகிதத்தாலோ..செய்து வர்ணம் பூசி பார்க்கும் போது..அடடே..நிஜ மாம்பழம் போல இருக்கிறதே
என மகிழ்கிறோம்.
இப்படி நாம் தினசரி பார்க்கும் காட்சிகளை ஓவியமாகவோ..புகைப்படமாகவோ..மண்ணால் உருவான
படைப்புகளாகவோ பார்க்கும் போது தனி மகிழ்ச்சி அடைகிறோமே..அது ஏன்? அந்த உணர்ச்சிக்குப் பெயர் என்ன?அதுதான் கலை உணர்வு.
முதன் முதலில் பண்டைக்காலத்தில் நாடகக்கலை எப்படி தோன்ற ஆரம்பித்தது?
(அடுத்த பதிவில் பார்க்கலாம்)

No comments: